'தற்போதுள்ள சூழ்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்கும்படி அழைக்க முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அறிக்கை அனுப்பியதாக, நேற்றிரவு பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், 'அப்படிப்பட்ட அறிக்கை எதையும் அனுப்பவில்லை' என, கவர்னர் அலுவலகம் மறுத்துள்ளது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த, பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாக, சசிகலா மீது குற்றம் சாட்டி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என, நேற்று முன்தினம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
கோரிக்கை:
அதேநேரம் பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், சட்டசபை கட்சி தலைவராக, தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னையே, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என, சசிகலாவும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தார். இரு தரப்பினரிடமும் பேசியதுடன், நேற்று அரசு அதிகாரிகளையும் அழைத்து, கவர்னர் ஆலோசித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், கவர்னரை சந்தித்தார். அனைவரும் அளித்த தகவல் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், மூன்று பக்க அறிக்கை அனுப்பியுள்ளதாக, நேற்றிரவு பரபரப்பு தகவல் வெளியானது. அதேபோல, அந்த அறிக்கையில், கவர்னர் கூறியுள்ளதாக, சில தகவல்களும் வெளியாகின.
இயலாது:
அதன் விபரம்: அ.தி.மு.க.,வில் நிலவும் பிரச்னை, உட்கட்சி பிரச்னை தான். தமிழகத்தின்சட்டம் - ஒழுங்கு குறித்து, தமிழக அரசு தலைமை செயலர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை அழைத்து விசாரித்தேன். அவர்கள் தெரிவித்த தகவலின்படி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை. ஆட்சி அமைக்க, சசிகலா உரிமை கோரி உள்ளார். அவர், தற்போது சட்டசபை உறுப்பினராக இல்லை. அதனால், அரசியல் சட்டப் பிரிவு, 164 - 1ன் படி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, அவருக்கு அழைப்பு விடுக்க இயலாது. அதேபோல், 18 ஆண்டுகளாக நடந்து வரும், சொத்து குவிப்பு வழக்கில், வரும்
வாரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது. கர்நாடக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் கேட்டபோது, ஒரு வாரம் காத்திருக்கும்படி, அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, சட்டசபையில் உறுப்பினராக இல்லாத ஒருவரை, ஆட்சி அமைக்க அழைத்தால், அரசியல் சட்டப்படி, ஆறு மாதங்களுக்குள், தேர்தலை சந்திக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினராக வர வேண்டும். ஆறு மாதங்களுக்குள் தேர்தலை சந்திக்கா விட்டால், அரசியல் சட்டப் பிரிவு, 164 -4ன் படி தகுதியிழக்க நேரிடும்.சசிகலா விஷயத்தில், நிலுவையில் உள்ள தீர்ப்பு காரணமாக, அவர் சட்டசபை உறுப்பினராவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. காரணம், சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அவர், எம்.எல்.ஏ.,வாக ஆக முடியாது. இந்த சூழ்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. மேலும், முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த உடன், மாற்று அரசு அமையும் வரை, அவரே பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முதல்வரை உடனடியாக தேர்வு செய்வதற்கான அவசியமோ, வெற்றிடமோ இல்லை. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சிறை வைக்கப்பட்டு உள்ளதாக வந்துள்ள புகார் குறித்து விசாரிக்கும்படி, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மிக விரைவில், தெளிவான சூழ்நிலை ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது.
இது, அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியதும், கவர்னர் மாளிகையில் இருந்து, உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியானது. கவர்னரின் முதன்மை செயலர் வெளியிட்ட அந்த அறிக்கையில், 'கவர்னர் சார்பில், எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.