புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tuesday, 14 February 2017
சொத்து குவிப்பு வழக்கு: சசிக்கு 4 வருட சிறை
புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
சென்னை: சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை - புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் சோதனைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுகின்றன.
-- நன்றி தினமலர்
பன்னீர் செல்வத்தின் ‛ஆபரேஷன் கூவத்தூர்'
சென்னை: சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க பன்னீர் தரப்பில் அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பொங்கிய பன்னீர்:
கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா செய்த சதியை, கடந்த 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன், முதல்வர் பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். அவரிடம் இருந்து, முதல்வர் பதவியை பறிக்க, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதையும், அவர் அம்பலப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக அ.தி.முக., தொண்டர்களும், தமிழக மக்களும் அணி வகுத்துள்ளனர். இதுவரை ஓ.பி.எஸ்., அணியில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 8 ஆகவும், ஆதரவு எம்.பி.,க்களின் எண்ணிக்கை 12 ஆகவும் உள்ளது.
அதிரடி திட்டம்:
இந்நிலையில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க சசிகலா அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க பன்னீர் தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக சசி தரப்பிற்கு ஆதரவான கூடுதல் எஸ்.பி., ஜெயச்சந்திரன் கன்னியாகுமரிக்கு நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். தொடர்ந்து உளவுத்துறையில் உள்ள தனது ஆதரவு அதிகாரிகள் மூலம், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் தற்போதைய செல்போன்கள் சேகரிக்கப்பட்டு, ரகசிய பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் பலனாகவே மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன், பன்னீர் தரப்பில் இணைந்தார். தொடர்ந்து கூவத்தூரிலுள்ள எம்.எல்.ஏ.,க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அபரேஷன் கூவத்தூர்:
இன்று(பிப்.,14) சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில் சசிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில், கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிரடி ஆய்வு செய்து, அங்கிருந்து வெளியேற விரும்பும் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து செல்ல பன்னீர் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருவேளை சசிக்கு ஆதவாக தீர்ப்பு வரும் பட்சத்தில், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க கவர்னர் உத்தவரவிடுவார். அப்போது தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, சசி கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் தனக்கு ஆதரவாக ஓட்டளிக்கவும் பன்னீர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-- நன்றி தினமலர்
தப்பு கணக்கு போடும் சசிகலா
சசிகலா பேசும் போது, 129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்தது, அனைத்து தரப்பினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்:
ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் நேற்று (பிப்., 13) இணைந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் உட்பட ஏழு பேர், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பன்னீர் உட்பட எட்டு பேர், சசிகலாவுக்கு எதிராக உள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நட்ராஜ், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர் நடுநிலை வகிக்கின்றனர்; மீதம், 126 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
குழப்பும் சசி:
ஆனால் சசிகலா, தொண்டர்களிடம் பேசும் போது, '129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது' என்றார். உண்மையில், எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு என்பதை தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா என, கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
-- நன்றி தினமலர்
மாறுவேடத்தில் தப்பித்து வந்தேன்: மதுரை தெற்கு எம்.எல்.ஏ.சரவணன்
சென்னை: கூவத்தூரில் இருந்தால் சசிகலாவிடம் மாட்டிக்கொள்வோம் என அங்கிருந்து தப்பி வந்தேன் என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறினார்.
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், மதுரை லோக்சபா எம்.பி. கோபாலாகிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரை சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர்.
எம்.எல்.ஏ. சரணவன் கூறுகையில், கூவத்தூரில் தங்கியிருந்தால் சசிகலாவிடம் மாட்டிக்கொள்வோம் என அஞ்சி மாறுவேடத்தில் தப்பித்து இங்கு வந்தேன். தமிழக மக்கள் பன்னீர்செல்வம் தான் முதல்வராக வேண்டும் என விரும்புகின்றனர். எனவே மேலும் எம்.எல்.ஏ.க்கள் பன்னீரை தேடி வருவர். சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தால் பன்னீரை தான் ஆதரிப்பார்கள் என்றார்.
மதுரை லோக்சபா எம்.பி. கேபாபாலகிருஷ்ணன் கூறுகையில், மன மகிழ்ச்சியோடு பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்துள்ளேன். அ.தி.மு.க.விற்கு நல்ல தலைமை வேண்டுமென்றால் பன்னீர்செல்வத்தை தான் அனைவரும் ஆதரிக்க வேண்டும். கட்சியை ஜெ., கட்டிகாப்பது போன்று பன்னீரும் கட்சியை கட்டிக்காப்பார் என்றார்.
-- நன்றி தினமலர்
ஜெயலலிதா சமாதியில் பிரமாண்ட நினைவிடம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா அறிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் பேசியது:-
எம்எல்ஏக்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. அது தொலைக்காட்சியிலும் வருகிறது. எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் கூறுகிறார்.
ஒரு ஆளை வைத்து, பெண் எம்எல்ஏவின் பெயரைக் குறிப்பிட்டு அவரைக் காணவில்லை எனவும், நீதிமன்றத்தில் அவரை நிறுத்த வேண்டும் எனவும் வழக்குப் போட வைக்கிறார்.
தவறான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்கிறார். பொறுப்புள்ள இடத்தில் இருப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
தகுதியில்லாத முதல்வர்: தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதற்காக ஊர் முழுவதும் ஆள்களை வைத்து மிரட்டினீர்கள் என்றால் எப்படி நியாயம்? முதல்வர் பதவிக்கே தகுதியில்லாமல் இருந்தால் எப்படி?
ஆட்சி அமைப்போம்: சட்டம்-ஒழுங்கைக் காக்க வேண்டியவர்களே, ஆட்களை அனுப்பி மிரட்டினால் எப்படி. இது ரொம்ப மோசமான விஷயம். கூவத்தூர் போகும்போது மகிழ்ச்சியாகப் போகப் போகிறோம். நல்லபடியாக ஆட்சி அமைபோம்.
தர்மம் தலைகாக்கும்: அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்கும்போது யாரும் பசியோடு என்று இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தது. பசிதீர்த்த தலைவர்களின் வழியில் வந்திருக்கிறோம். பசி தீர்க்கப்பட்டவர்களின் வாழ்த்துகள் என்றைக்கும் நமக்கு உண்டு. அப்படிச் செய்த நமக்கு தர்மம் தலைகாக்குமா, காக்காதா?
மக்களுக்கு நாம் எப்போதும் நல்லவற்றைச் வேண்டும். நல்லது செய்வதை எல்லோரும் பார்க்கத்தான் போகிறார்கள். உயிர் உள்ளவரை ஒற்றுமையாக இருந்து கட்சியைக் காப்பாற்றுவோம்.
சமாதியில் நினைவிடம்: ஜெயலலிதாவின் சமாதியானது, இப்படி ஒன்று இருக்கிறதா என அனைவரும் வியக்கும் வகையில் அங்கு ஒரு பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும். எம்ஜிஆர் 100-வது ஆண்டு நினைவாக ராமாவரம் தோட்டத்தில் அவரது பிறந்த தின நூற்றாண்டு வளைவு ஒன்று அமைக்கப்படும் என்றார் வி.கே.சசிகலா.
கூவத்தூரில் தங்கினார் சசிகலா
கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா திங்கள்கிழமை (பிப்.13) இரவு தங்கினார்.
அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதியை கிராம மக்கள் மற்றும் செய்தியாளர்கள் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை ஆர்வத்துடன் சுற்றிச்சுற்றி வருகின்றனர்.
உணவில் ஒவ்வாமை? உணவு ஒவ்வாமை காரணமாக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களில் 4 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ்களில் வந்து சிகிச்சை அளித்துச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
-- நன்றி தினமணி