தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு வாரம் எக்கச்சக்கத் திருப்பங்கள். 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு... சூழும் அறிக்கைகளும், பிரேக்கிங் நியூஸ்களும்...'னு மொத்தத் தமிழ்நாடே மல்லுக்கட்டிக்கிட்டுக் கிடக்கு. `முதல்வர் பதவிக்காக இந்த ஒருவாரத்தில் அப்படி என்னதான் நடந்துச்சு..?' இதோ ஒவ்வொரு காட்சியாக பார்க்கலாம் வாங்க...
முதல்வர் ஓ.பி.எஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததும், 'சின்னம்மா' முதல்வராவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. செய்தியைக் கேள்விப்பட்டதும் மக்கள், 'என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை'ன்னு பொங்க ஆரம்பிக்கிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது. ஆளுநர் தமிழகத்துக்கு வரமுடியாத சூழல் நிலவுகிறது. ரெண்டு பக்கமும் அடி விழ, 'சின்னம்மா'வின் பதவியேற்பு தள்ளிப் போகிறது.
பிறகுதான் தொடங்குகின்றன ரணகள ட்விஸ்ட் காட்சிகள். திடீரென, அன்று இரவு அம்மா சமாதிக்குச் சென்று தியானம் செய்கிறார் ஓ.பி.எஸ். தன் ஞானக் கண்களைத் திறந்து விழித்ததும், ' ' சசிகலா என்னைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்'... அம்மா' ஆன்மாவின் உத்தரவுப்படி செயல்படுவேன். மக்கள் விரும்பினால் முதல்வராவேன்!'' என ஜென் துறவியாய் தியானம் செய்தவர் ஜெட்லீ போல பாய்ந்து பாய்ந்து அட்டாக் கொடுத்து போயஸ் கார்டனை கிடுகிடுக்க வைக்கிறார்.
'மிக்ஸர்' பன்னீர் மாஸ் காட்டிட்டார் எனப் பலவாறாகப் புல்லரிக்கிறார்கள் நெட்டிஸன்ஸ். ஓவர்நைட்டிலேயே #WeSupportOPS டேக்கில் பன்னீருக்கு பாராட்டுகள் தெறிக்கின்றன.
வெலவெலத்துப்போன அமைச்சர்கள் போட்டது போட்ட இடத்திலேயே கிடக்க, போயஸ் தோட்டத்துக்கு விரைகிறார்கள். போகும் வழியிலேயே ஓ.பி.எஸ்ஸைத் தாக்கிப் பேட்டி தட்டுகிறார்கள்.
ஃபுல் மேக்கப்போடு கேட்டுக்கு வெளியே வந்த 'சின்னம்மா', ''ஸ்டாலினும் ஓ.பி.எஸ் ஸும் சிரிச்சுக்கிட்டாங்க. அப்பவே எனக்கு சந்தேகம்..'' எனச் சின்னப்புள்ளைத் தனமாக அள்ளிப் போடுகிறார்.
பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்ஸை நீக்குவதாக அறிவிக்கிறார் சசிகலா. `'சிரிக்கிறதுலாம் ஒரு குத்தமாம்மா..? என்னை நீக்குறதுக்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அது 'அம்மா' கொடுத்த பதவி'' என ஓ.பி.எஸ் சரவெடியாய்த் தகிக்க உக்கிரமாகிறது அரசியல் களம்.
ஓ.பி.எஸ்-ஸுக்கு பரிதி இளம்வழுதி, மைத்ரேயன் உள்ளிட்ட சில அ.தி.மு.க பிரமுகர்களின் ஆதரவும் கிடைக்கத் தொடங்குகிறது. 'ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்' என உறுதி அளித்து எரியும் கொள்ளியில் கொஞ்சூண்டு பெட்ரோலையும் தெளிக்கிறார் பன்னீர்.
அந்தப்பக்கம் சசிகலா டீம் கலவரமாகிறது. அவசர அவசரமாக எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் மணப்பாறை எம்.எல்.ஏ நகர்ந்து டீ கடைக்குப் போக `ஆஹா... தப்பிச்சிட்டாரோ..?' எனத் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள். போனவர் சாவகாசமாக வந்து 'ஒரு டீ குடிக்கப் போனது ஒரு குத்தமாய்யா...' எனப் பம்முகிறார்.
சசிகலா சீக்கிரம் பதவியேற்க வேண்டும் என 'சொந்தக்கருத்து' சுப்ரமணியன் சுவாமி ட்வீட் போட்டு அவர் பங்குக்கு டன் டன்னாக மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். இவர் ஆட்டத்தில் 'ஜோக்கர்' எனத் தெரியாமலேயே எல்லா சீனிலும் வருவார் என்பதால் கண்டுக்காம அப்படியே கடந்து போய்டுங்க...
`இவிங்களை எல்லாம் இப்படியே விட்டா எஸ்கேப்பாய்டுவாய்ங்களே..?!' என எடக்குமடக்காக யோசித்தபின் ஆரம்பிக்கிறது ஷங்கர் பட க்ளைமாக்ஸ் அத்தியாயம்.
எல்லா எம்.எல்.ஏ க்களையும் இரண்டு பஸ்களில் ஏற்றி ஏரியாவைச் சுத்திக் காட்டுகிறார்கள். 'ஊட்டிக்கு டூர் போகும் ரேஞ்சில் படம் பார்த்துக்கொண்டு ஜாலியாக சென்னையைச் சுற்றித் திரிகிறார்கள் எம்.எல்.ஏ க்கள். நேரம் ஆக ஆக லேசாகத் தொண்டையைக் கவ்வத் தொடங்குகிறது.
மக்கள் ஓ.பி.எஸ் ஸுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்குகிறார்கள். கட்சித் தொண்டர்கள் மத்தியில் காட்சிகள் மாறுகின்றன. சேம் மொமெண்ட்டில், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தருபவர்களை எல்லாம் அடுத்த நிமிடமே பதவியில் இருந்து தூக்கி அடிக்கிறார் சசிகலா. `இப்படியே போனா நாம இருபது பேர்தான் இருப்போம்' எனத் தனக்குத் தானே கலாய்த்துக் கூலாகிக் கொள்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள்.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் இன்னொரு கேரக்டர் இருக்குமே... அதான் தீபா. வழக்கம்போல 'சிவனேனு' உட்கார்ந்து டி.வி நியூஸ் பார்த்து கலகலப்பாகிறார். 'பின்னால் அதிரடியாய் அறிவிப்பேன்!' என்று சொன்னவரின் பின்னால் வெட்டவெளியைப்பார்த்து சோகமாகிறான் தீபாவில் அம்மாவைப் பார்த்த அப்பாவி கழகத் தொண்டன்!
ஒருபக்கம் சசி உருவபொம்மை, இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ் உருவபொம்மைகள் என மாற்றி மாற்றி மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்தி விளையாடுகிறார்கள். எப்போவும் போல நம்ம கமல் தெள்ளுநடைத் தமிழில் ட்வீட்களைப் போட்டுப் பொளக்கிறார். அதைக் காப்பி பண்ணி ட்ரான்ஸ்லேட்டரில் போட்டுப் படிக்கிறான் தமிழன்.
அன்னிக்குப் பூராம், ஒவ்வொரு டி.வி கம்பெனியாப் போய் 'எக்ஸ்க்ளுசிவ்' பேட்டி தட்டுகிறார் பன்னீர். மக்கள் மத்தியில் பன்னீர் கெத்து காட்ட சசிகலாவும் மீடியா முன் வரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அன்று இரவே டி.வி. யில் வந்து கண்கலங்குகிறார் சசி. ``இது தி.மு.க சதி!'' எனவும் குற்றம் சாட்டுகிறார். 'ஏன்யா... இம்புட்டுநேரம் நல்லாத்தானே போச்சு.. உங்க பஞ்சாயத்துல எங்களை ஏன் இழுத்து விடுறீங்க' என குழம்பினார்கள் உடன்பிறப்புகள்.
சசிகலா அணியும், பன்னீர் அணியும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஆளுநருக்காகக் காத்திருந்தது. `இந்தா வாறேன்... அந்தா வாறேன்' என இழுத்தடித்து ஒரு வழியாக அடுத்த நாள் மாலை சென்னை வந்து சேர்ந்தார் ஆளுநர்.
அதற்குள் பஸ்ஸில் குண்டுக்கட்டாக ஏற்றப்பட்ட மொத்த எம்.எல்.ஏ க்களும் கூவத்தூரில் இருக்கும் கோல்டன் பே ரிசார்ட்டில் குதூகலமாகத் தங்கவைக்கப் பட்டனர். குனிந்து குனிந்து ட்ரெய்ன் ஆகியிருந்த எம்.எல்.ஏ க்களில் ஒருவர் அப்படியே அண்டர்க்ரவுண்டிலேயே தவழ்ந்தபடி எஸ்ஸாகி எதிரணியில் தஞ்சம் புகுந்தார்.
எம்.எல்.ஏ -க்கள் மொத்தமாகப் பதுக்கப்பட, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் முதல் தொகுதி மக்கள் வரை... எம்.எல்.ஏ க்கள் கடத்தப்பட்டதாகவும், பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் 'கண்டுபிடிச்சுத் தாங்க... நாங்க வெச்சு செஞ்சிக்கிறோம்...' எனக் கொந்தளித்து கமிஷனர் ஆபிஸில் கம்ப்ளெயின்ட்களைக் கொட்டினார்கள்.
இப்படி ஒருபக்கம் எம்.எல்.ஏ க்களைத் தேடிக் கொண்டிருக்க, ரிசார்ட் வட்டாரத்தில் `ஜெயக்குமாரைக் காணோம்' என வலைவீசித் தேடினார்கள். 'எங்க போயிடப்போறோம்... இந்தா உங்க பொடணிக்குப் பின்னாடிதான் நிக்கிறோம். ஓவர் ஓவர்!' எனக் குரல் கொடுத்தது ஜெயகுமார் தரப்பு.
'சின்னம்மா'வுக்கு சிந்துபாடிய 'பெரியக்கா' வளர்மதி, 'எம்.எல்.ஏ க்களுக்கு பன்னீர் தரப்பு போனில் மிரட்டல் விடுப்பதால்தான் சுவிட்ச் ஆஃப் பண்ணி வெச்சுருக்காங்க' என வகைதொகை இல்லாமல் அள்ளி வீச, 'ஏம்மா... நீ வாய வெச்சுக்கிட்டு சும்மாவாச்சும் இரும்மா..' என கார்டன் தரப்பே கொந்தளித்தது.
இது ஒருபக்கம் நடக்க, மதுசூதனனும் ஓ.பி.எஸ் பக்கம் ஜம்ப் அடித்தார். உடனே சின்னம்மா, 'மதுசூதனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிக்கை தட்ட, கொந்தளித்த மதுசூதனன், 'நீ என்ன என்னைத் தூக்குறது? அந்தம்மாவ நான் தூக்கிட்டேன்' என கிளைமாக்ஸ் வில்லன்போல் ரீ-ட்வீட் போட்டுக் கொந்தளித்தார்.
அடுத்தடுத்த நாட்களில் அரங்கேறியதெல்லாம் உச்சபட்ச ஸ்டன்ட். ``எம்.எ.ஏ-க்களை யாரும் கடத்தி வைக்கவில்லை. அவர்கள் விருப்பத்தோடுதான் ஹோட்டலில் தங்கியுள்ளனர். பன்னீர்செல்வம் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்'' என முந்தைய நாள் பேசிய மாஃபா.பாண்டியராஜன் அடுத்த நாள் ஆப்பொனன்ட் டீமுக்கு ஆதரவாக 'அவுட்' காட்டினார். 'இருக்கின்ற மேடையிலேயே கட்சி தாவும் துணிச்சலும் தைரியமும் அண்ணன் ஒருவருக்குத்தான் உண்டு...' என ரவுண்டுகட்டிக் கலாய்த்தார்கள் நெட்டிஸன்கள்.
ஒவ்வொருத்தராக எதிர் முகாமுக்குத் தாவ, செய்வதறியாமல் கலங்கிப் போன சசிகலா, அன்னைக்கு மத்தியானமே வண்டியைக் கூவத்தூருக்குக் கிளப்பினார். கொஞ்சம் ஆவேசமான 'சின்னம்மா' ஆளுநரையும் வம்பிழுக்க, 'ஹைய்யா... சின்னம்மா பயந்திடுச்சு...' என நிமிர்ந்து அமர்ந்தார்கள் எதிரணியினர்.
'சின்னம்மாவை ஶ்ரீராம் சிட்ஃஃபன்ட்ஸ்ல நாமினியா நியமிச்சிருக்காங்க... சின்னம்மாதான் அடுத்த வாரிசு' என 'அம்மா' சமாதியிலேயே வலுவான 'ஆதாரங்களோடு' அடித்துப் பேசிய பொன்னையன் அந்தர் பல்டி அடித்து, பன்னீர் வண்டியில் லிஃப்ட் கேட்க, 'இந்த பீஸையெல்லாம் இனி அடிச்சு என்ன ஆகப் போவுது..?' என வழிவிட்டு ஏற்றிக் கொண்டது பன்னீர் தரப்பு!
'பன்னீருக்கு பா.ஜ.க சப்போர்ட் இருக்கு...' என சசிகலா தரப்பு குமுறிக் கொண்டிருக்க, 'ஆமா... இப்போ அதுக்கு என்னான்ற..?' என ஓப்பன் டாக் கொடுத்தார் தமிழிசை.
ஒவ்வொரு நாளும் மாறும் காட்சிகளைப் பார்த்து 'சுர்ரென' ஏறிய சசிகலா, ``எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. ஓரளவுக்குத்தான் பொறுமை. நாங்க செய்யவேண்டியதைச் செய்வோம்''னு வாய்தவறிச் சொல்லிவிட... 'ஆஹகா' என உற்சாகமாகி 'செய்... செய்'யெனச் செய்து ட்ரெண்டாக்கினார்கள் சோஷியல் மீடியா நெட்டிசன்ஸ்.
ஓ.பி.எஸ் - சசிகலா பஞ்சாயத்துகளுக்கு மத்தியில், ஒரு க்ராஸ் டாக் (Talk) குறுக்கால புகுந்து ஓடிக்கொண்டிருந்தது. இதில் உச்சமாக 'ஆளுநர் மீது வழக்குப் போடுவேன்' என அள்ளி விட, 'மொத்த மேட்டரையும் இந்தாளு திருப்பி விட்ருவாரு போலயே'ன்னு 'சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்கும் பா.ஜ.கவுக்கும் சம்பந்தம் இல்லை' என அழாத குறையாக விம்மினார் தமிழிசை.
'இவரை நீங்க முதல்வராக்கலாமே ப்ரெண்ட்ச்...' என எகிடுதகிடாக ஆர்.நட்ராஜை முன்மொழிந்தார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு. 'நான் கேட்டேனா முருகேசா...' கணக்காக நட்ராஜ் அவரைப் பார்த்து முறைக்க, அதுவும் போகிறபோக்கில் நடக்கிற காமெடியாகக் கடந்தனர் தமிழக ஜனங்கள்.
பார்க்க நிழல்கள் ரவி போலவே இருப்பதாலோ என்னவோ நல்லவரா கெட்டவரா என குழப்பத்தை உண்டு பண்ணுகிறார் நம் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 'யார் வந்தாலும் அரைமணிநேரம்!' என கோட்டா ஒதுக்கி போஸ் கொடுத்து மர்மத்தை நீட்டிப்பதெல்லாம் நீ...ட்...டு!
இதற்கிடையே, எம்.எல்.ஏ க்கள் ஓ.பி.எஸ் பக்கம் தாவுவதைத் தடுக்க, பொறுமையாகப் போயஸுக்கும், கூவத்தூருக்கும் மாறிமாறி அலைந்து கொண்டும், காருக்குள் உட்கார்ந்தபடி வின்டோ சீட் பேட்டி தட்டிக் கொண்டும் பொழுதைப் போக்குகிறார் `மாண்புமிகு' சின்னம்மா!
``வந்தவங்களுக்கு எல்லாம் சாப்பாடு இருக்கு... சாப்பிட்டப்புறம் வரக்காப்பி இருக்கு... பின்னாடி கொல்லை இருக்கு!'' என ஊரிலிருந்து வந்தவர்களை உபசரித்தபடி டயர்டாகாமல் பேட்டி தட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஓ.பி.எஸ்!
-- நன்றி விகடன்