மிகுந்த பரபரப்புக்கு இடையில், தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிச்சாமி, தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருப்பதாக, சட்டசபை சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.
இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 பேர் ஓட்டளித்துள்ளதாகவும்; எதிர்ப்பாக 11 பேர் ஓட்டளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். சபையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பழனிச்சாமிக்கு ஓட்டளித்தவர்களாக காட்டப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பாதிக்கும் அதிகமானோர், மனது மயக்கப்பட்ட நிலையில் சபைக்கு வந்து ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளித்த எம்.எல்.ஏ., ஒருவரிடம் கேட்டபோது, அவர் யதார்த்தத்தைக் கூறியதாவது:
எல்லோரும் எங்கள் நிலை புரியாமல் எங்களை தாறுமாறாக விமர்சிக்கின்றனர். எங்கள் மனநிலையில் அல்லது, எங்களுக்கு அமைந்த சூழ்நிலையில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பர். ஜெயலலிதா மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டதற்காக சந்தோஷப்பட்டது என் போன்ற எம்.எல்.ஏ.,க்கள்தான். இதற்காகவே, அவர் இல்லம் சென்று, அவருக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களையும்; பாராட்டுதல்களையும் சொல்லி வந்தோம். என்றைக்கும் உங்கள் பின்னால், பக்கபலமாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறி வந்தோம்.
அதற்கு தகுந்தார் போல, அவரும், ஒரு முதல்வராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். சில விஷயங்களில், மறைந்த ஜெயலலிதாவை விட சிறப்பாகவும்; சாதுர்யமாகவும் செயல்பட்டார். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், தமிழக நலன் களுக்கு ஏற்ற வகையில் அவர் செயல்பட்டது ரொம்பவே பிடித்திருந்தது. பொதுமக்களாலும் பாராட்டப்பட்டது.
ஆனால், என்னதான் சசிகலா தரப்பு நெருக்கடி என்றாலும், அவர், தனது முதல்வர் பதவியை பொசுக்கென்று ராஜினாமா செய்தது எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மிரட்டி ராஜினாமா எழுதி வாங்கி இருந்தால், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளிவந்த மறு நொடியே, அவர் கவர்னரை நேரில் சென்று சந்தித்து, என்னுடைய முழு சம்மதத்தோடு, ராஜினாமா கடிதம் அளிக்கப்படவில்லை; மிரட்டி எழுதி வாங்கி, கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களையும் அழைத்து நடந்ததையெல்லாம் விவரித்திருக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாத பன்னீர்செல்வம், போயஸ் தோட்டத்தில், ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்த கையோடு, தலைமைக் கழகத்துக்கு வந்து, சட்டசபை கட்சித் தலைவராக சின்னம்மாவை முன்மொழிகிறேன் என்று சொல்லி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் ஆதரவையும் கோரியபோது, எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? பன்னீர்செல்வமே, விருப்பப்பட்டுத்தான், சசிகலாவுக்கு தன் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டார் என நாங்கள் இருந்து விட்டோம். ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அங்கு தியானம் செய்த பின்னால், பத்திரிகையாளர்களிடம், நடந்ததையெல்லாம் சொல்கிறார்.
அதற்கு, தமிழக மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் மீது ஒருவித பரிதாபம் ஏற்பட்டதே தவிர, கவர்னர் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது ஏற்றுக் கொண்டதுதானே. ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அடுத்த முதல்வர் பதவி ஏற்கும் வரை, காபந்து முதல்வராகவும் செயல்பட கேட்டுக் கொண்டு விட்டார்.
இந்த சூழ்நிலையில் கவர்னராலோ, ஊர் உலகமெல்லாம் பேசும் பன்னீருக்கு ஆதரவான மத்திய அரசாலோ என்ன செய்து விட முடியும். பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை திரட்டி வந்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என நிலைத்து, காலம் கடத்தினார் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஆனால், 10 எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்ப முடிந்ததே தவிர, பன்னீர்செல்வத்தால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்பும் முயற்சியில், சிறு துரும்பையும் அசைக்க முடியவில்லை.
ஆனால், பன்னீர்செல்வம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர் என்றதும், சசிகலா தரப்பினர் எவ்வளவு வேகமாக செயல்பட்டனர் என்பதெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும்.
கிட்டத்தட்ட 127 எம்.எல்.ஏ.,க்களை குண்டுகட்டாக, கூவத்தூர் ரிசார்ட்டுக்குக் கொண்டு சென்றனர். அங்கு எங்களை பதினோரு நாட்கள் தங்க வைத்தனர். அங்கு, எங்களுக்கு எல்லாமே கிடைத்தது. அதெல்லாம், விவரமாக பட்டியல் போட முடியாது; வெளியிலும் சொல்ல முடியாது. துவக்கத்தில் எங்களுடைய சுதந்திரம் பறிபோவதாகத்தான் நினைத்தோம்.
ஆனால், நாட்கள் நகர நகர அவர்கள் தரப்பில் இருந்து வந்த செங்கோட்டையன், தினகரன், திவாகரன், பழனிச்சாமி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு என மூத்த தலைவர்களெல்லாம் கொடுத்த தகவல்களும்; அளித்த உறுதி மொழிகளும், அது நிறைவேற்றப்படும் வேகமும் எங்களை முழுமையாக அவர்கள் பக்கம் திருப்பியது.
முக்கியமாக அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எங்களையெல்லாம் ரொம்பவும் யோசிக்க வைத்தது. பழனிச்சாமிக்கு கிட்டதட்ட 125 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது என்பது நிஜம் என்று சொல்லி, அங்கு கூடியிருந்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களின் பெயரையும் வாசித்து, அதை நிஜம் என நம்ப வைத்தனர்.
இப்படி ஒருபக்கம் 125 எம்.எல்.ஏ.,க்கள் உறுதியாக இருக்கும்போது, அவர்களை விடுத்து வேறு யாரால் ஆட்சி அமைக்க முடியும்? வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற போது, ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து, சில மாதங்களிலேயே தேர்தலை கொண்டு வருவதில் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?
ஆக, இந்த இக்கட்டைப் பயன்படுத்தி, எங்கள் தரப்பிலிருந்தும் பணம், தங்கம், வாகனம், அமைச்சர் பொறுப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், சிலவற்றை யாராலும், செய்து கொடுக்க முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அதனால், சில விஷயங்களில் நாங்களும் கெடுபிடி காட்டவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்களில் பலரும் எங்களுக்கு போன் செய்து, அவர்கள் விருப்பத்தைக் கூறினர். மனசாட்சிப் படி, சட்டசபையில் ஓட்டளிக்கவில்லை என்றால், ஊர் பக்கம் வர முடியாது என, அன்போடு மிரட்டல் விடுத்தனர். அது பொதுமக்களின் எதிர்பார்ப்புதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்தால், இன்னோரு தேர்தலை சந்திப்பது, எங்களைப் போன்ற எம்.எல்.ஏ.,க்களுக்குத்தான் நெருக்கடி என்பது, அவர்களுக்கு தெரியாது; அது பற்றிய அக்கறையும் அவர்களுக்கு தேவையில்லை.
எட்டு மாதங்களுக்கு முன், கிட்டதட்ட ஐந்து கோடிக்கும் மேல் செலவு செய்து எம்.எல்.ஏ., ஆன என்னைப் போன்றவர்கள், இன்னும் விதைத்த பணத்தை எடுக்கவே இல்லை. அதற்குள் இன்னொரு தேர்தல் என்றால், பணத்துக்கு எங்கே செல்வது? யார் கொடுப்பர்? இந்த இடத்தில் இன்னொரு கேள்வி கேட்கப்படும்…
இத்தனையையும் மீறி, ஐந்து வருடம் சென்று, நீங்கள் தொகுதிக்குச் சென்று, தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் ஓட்டளிப்பரா என்று. அதெல்லாம், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தானே… அதற்குள் இன்னும் என்னவெல்லாம் அரசியல் ரீதியில் நடக்குமோ. நான் கு ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போவதை, இப்போது கணிக்கவும் முடியாது. அதற்காக, இப்போதிலிருந்தே கவலைப்படவும் முடியாது.
எப்படியோ, ஓ.பன்னீர்செல்வம் புண்ணியத்தில், பழனிச்சாமி ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறோம். அந்த வகையில், பன்னீருக்காக உதவி செய்ய முடியவில்லை என்றாலும், அவருக்கு கட்டாயம் நன்றி சொல்லவே கடமைபட்டிருக்கிறோம்.
எதற்கெடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்கிறவர்களுக்கு, ஒரே ஒரு கேள்வியையும் இந்த நேரத்தில் கேட்க ஆசைப்படுகிறேன். இப்படியெல்லாம், கேள்வி கேட்க முற்படும் பொதுமக்கள், ஒவ்வொரு தேர்தலின்போதும், கூடுதலாக யார் பணம் கொடுப்பார் என எதிர்பார்த்து, ஏங்கி, அது கிடைத்ததும் தானே ஓட்டு போடுகின்றனர். அவர்கள் தரப்பில் இருந்து, நாங்கள் செய்வதை நியாயமா… தர்மமா என்று எப்படி கேட்க முடியும்.
இவ்வாறு நடந்த நிகழ்வுகள் குறித்து கூறினார்.