சென்னை : தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் உத்தரவுப்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைகோரும் தீர்மானம் நேற்று தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட நிலையில், தி.மு.க.வினர் சபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷமிட்ட தி.மு.க.வினர், அவரது இருக்கையை உடைத்ததோடு, காகிதங்களை கிழித்தெறிந்தனர். சபாநாயகரை பேசவிடாமல், மைக்கின் மின் இணைப்பையும் துண்டித்தனர். அவரது சட்டையை பிடித்து இழுத்தனர். சபாநாயகர் இருக்கையில் தி.மு.க எம்.எல்.ஏ. கு.க. செல்வம், ரெங்கநாதன் ஆகியோர் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது நிலைமை விபரீதமாகவே, சபைக் காவலர்கள் சபாநாயகரை பாதுகாப்பாக அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறப்புக் கூட்டம்:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழக சட்டசபையில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைகோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்காக நேற்று காலை 11 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு:
பேரவைக் கூட்டம் தி.மு.க.வினரின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே தொடங்கியது. அவர்கள் தெரிவித்த புகாரைக் கேட்டுக்கொண்ட சபாநாயகர் தனபால், உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தனது பொறுப்பு என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அனைத்து சூழலையும் கருத்தில் கொண்டே வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும், சட்டப்பேரவை விதியின்படியே தாம் செயல்படுவதாகவும், அனைவரும் சுதந்திரமாக வாக்களிக்கலாம் என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
கோரிக்கை நிராகரிப்பு:
இந்நிலையில், பன்னீர்செல்வம் அணியினர், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்து கோரிக்கை விடுத்தனர். இதேபோல தி.மு.கவினரும் கோரிக்கை வைத்தனர். மேலும் வாக்கெடுப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள் வற்புறுத்தினர். ஆனால் சபாநாயகர் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
தி.மு.க.வினர் பெரும் ரகளை:
இந்த சூழ்நிலையில், வாக்கெடுப்பு குறித்து சர்ச்சையை எழுப்பிய தி.மு.க. உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு, கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை உடைக்கப்பட்டதோடு, அவரின் மைக்கின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேஜையை தள்ளி, தி.மு.க.வினர் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, சட்டமன்ற செயலாளரின் மேஜையில் இருந்த தாள்களை கிழித்து, சபாநாயகரை நோக்கி எறிந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் வேதனை:
தொடர்ந்து தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இந்த நிலைமை சுமார் 2 மணிநேரம் நீடித்தது. ஆனால் சபாநாயகரால் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து சபைக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, சபாநாயகர் பாதுகாப்பாக அவருடைய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக மதியம் 1 மணி வரை சபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் சபையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை யாரிடம் சொல்வது. அதை எப்படி சொல்வது என்று சபாநாயகர் வேதனையோடு தெரிவித்தார்.
தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்:
பின்னர் மீண்டும் சபை கூடியபோதும் அதே நிலை நீடித்தது. இதையடுத்து தி.மு.க வினரை சபையைவிட்டு வெளியேற்றுமாறு அவைகாவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் தி.மு.க வினரை காவலர்களால் வெளியேற்ற முடியவில்லை, அவர்கள் உள்ளேயே இருந்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதையடுத்து சபை மீண்டும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைபட்ட நேரத்தில் சபையில் மைக் சரிசெய்யப்பட்டு, அவையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அதே நேரத்தில் அதிரடிப்படை போலீசார் சபைக்கு வெளியே குவிக்கப்பட்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு சபை கூடியபோது அப்போதும் தி.மு.க வினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உட்பட் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அரசுக்கு ஆதரவாக 122 வாக்குகள்:
அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக 122 வாக்குகளும், அரசுக்கு எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. அதாவது இந்த 11 வாக்குகளையும் பன்னீர்செல்வம் அணியினர் பதிவு செய்தனர். எண்ணிக்கை அடிப்படையில் நடந்த இந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.