அத்தை ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டம் இல்லம், அவரது ரத்த சொந்த வாரிசுகளான எனக்கும் சகோதரி தீபாவுக்கும்தான் சொந்தம்; இதில், வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், பரபரப்பாக ஊடகங்கள் மூலம் பேசத் துவங்கி உள்ளது, சசிகலா வட்டாரங்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
தீபக் அளித்த சிறப்பு பேட்டி:
அத்தை ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் கூடவே இருந்து பணியாற்றியவர் சசிகலா. அவரையும் நான் ஒரு அத்தையாகத்தான் நினைக்கிறேன். அதனால், அவர் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. அதனால்தான், அத்தை இறந்ததும், அவர் கட்சியை நிர்வகிக்கும் பொறுப்புக்கு வருவதை நானும் வரவேற்றேன்.
ஆனால், சசிகலா ஜெயிலுக்குப் போனதும், கட்சியை நடத்தும் பொறுப்பில், அதாவது, கட்சியின் துணைப் பொதுச் செயலர் பொறுப்பிற்கு, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் நியமிக்கப்பட்டிருப்பதை என்னால் ஏற்க முடியாது. கட்சித் தொண்டர்கள் யாரும் அதை ஏற்கவில்லை. சசிகலாவின் குடும்ப சொத்துப் போல, அ.தி.மு.க.,வை அவரது குடும்பத்தினர் ஆக்க முயல்கின்றனர். அது தவறு. இதற்கு, சசிகலா இசைவு இருந்திருக்கிறது என்று சொன்னாலும், அதை ஏற்க முடியாது.
கட்சியை வழிநடத்துவது, ஓ.பன்னீர்செல்வம் போன்ற மூத்த தலைவராகத்தான் இருக்க வேண்டும். அவருக்கு, கட்சியை வழிநடத்தக் கூடிய எல்லா தகுதியும்; திறமையும் இருக்கிறது. அவர், கட்சியை விட்டு பிரிந்து போய் விட்டார். அவர் எப்படி, கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்றெல்லாம் கேட்கவே தேவையில்லை. சிற்சில மன வருத்தங்களால், அவர், இப்போது கொஞ்சம் விலகி நிற்கலாம். ஆனால், அவரும்; நாங்களும் அ.தி.மு.க., என்னும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர், பேசுகிறவர்கள் பேசினால், அடுத்த நிமிடமே, அ.தி.மு.க., நிலை பெற, எல்லோருடனும் சேர்ந்து செயல்பட வந்துவிடுவார். இதில் எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை.
தீபாவைப் பொறுத்த வரையில், அவரின் அரசியல் ஆர்வம் எனக்குப் பிடிக்கவில்லை. அவர் தனிக் கட்சி துவங்குவேன் என்று சொல்வதும்; செயல்படுவதும் தேவையில்லாதது. அவரிடமும் சமாதானமாகப் பேசினால், அவரும் அ.தி.மு.க., என்னும் இயக்கத்தை சிதைக்கவோ, அ.தி.மு.க.,வுக்கு எதிராகவோ செல்ல மாட்டார்; செயல்பட மாட்டார்.
அத்தை ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்றால், விசாரணைக் கமிஷன் அமைப்பதில் தவறில்லை. அதற்காக, மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கூறவில்லை. பலரும் சந்தேகம் கொள்கிறார்கள். அதைப் போக்குவதற்காக, விசாரணை கமிஷன் அமைப்பதில் தவறில்லை. அத்தை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, நான் மருத்துவமனை சென்று பார்த்தேன். அதில் மாற்றம் இல்லை.
நான் அத்தை சசிகலா மீது, மிகுந்த மரியாதை வைத்திருப்பதால், மூர்க்கத்தனமாக அவர்களை எதிர்க்க விரும்பவில்லை. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குடும்ப அரசியல் செய்யக் கூடாது என்று தான் சொல்கிறேன்; எதிர்க்கிறேன்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் தண்டத் தொகை செலுத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் வலியுறுத்தி உள்ளது. அதற்காக, தெரிந்தவர்கள் மூலம், அதற்கான பணத்தை திரட்டிக் கொண்டிருக்கிறேன். கடனாக வாங்கி விட்டு பின் கொடுக்கலாம் என்பதற்காக, அதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறேன். முதலில் தண்டத் தொகையை செலுத்தி விட்டு, சொத்துக்களை காப்பாற்ற வேண்டும். அந்த வகையில், போயஸ் தோட்டத்தையும் காப்பாற்றி விட்டு, அந்த வீட்டில் குடியேற வேண்டும். பின், அரசுத் தரப்பில், அதை நினைவு இல்லமாக்க வேண்டும் என்று விரும்பினால், தீபாவுடன் சேர்ந்து அது தொடர்பாக முடிவெடுப்பேன்.
ஜெயலலிதா மறைந்த சூழ்நிலையில், கட்சியில் பொறுப்பு பெற முயற்சி தோல்வியடைந் ததாலேயே, திடுமென சசிகலா குடும்பத்தினரை எதிர்ப்பதாக சொல்வது தவறு. எனக்கு அரசியலே பிடிக்கவில்லை; ஆர்வமும் இல்லை என்று சொல்லிவிட்டேன். எனது சகோதரியும் கூட அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவது தவறு என்று சொல்லும் நான், அரசியலில் பதவி வாங்கி என்ன செய்யப் போகிறேன்.
ஆட்சி நிர்வாகத்தின் தலைமையாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். அதில் தவறில்லை. தேவையென்றால், பின்னாளில், அந்த பொறுப்புக்கு வேறு தகுதியான நபரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு அவசரம் தேவையில்லை. நான் யாருடைய பின்புலத்திலும், இதுநாள் வரையில் இயங்கவில்லை. எனக்கு என்று சுயமான சிந்தனை இருக்கிறது. என் உள்ளுணர்வு சொல்லும் விஷயங்களைத்தான் நான் செயல்படுத்துகிறேன். ஆலமரமாக அத்தை வளர்த்தெடுத்த கட்சியில் எத்தனையோ பெரியவர்கள்; தியாகம் செய்து விட்டு காத்திருக்க, அவர்களுக்கெல்லாம் இல்லாமல், தினகரன், துணைப் பொதுச் செயலர் பதவிக்கு எங்கேயிருந்து வந்தார்? அதைத்தான் ஏற்க முடியவில்லை. நெஞ்சு கொதித்தது. உள்ளுணர்வு, வெறுப்பை வெளியே சொல் என்றது. சொல்லி விட்டேன். மற்றபடி, யாருக்காகவும் இதை நான் சொல்லவில்லை; யாருக்கு எதிராகவும் சொல்லவில்லை.
சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பு குறித்தெல்லாம் விரிவாக இப்போது பேசத் தேவையில்லை. அது குறித்து, மிகப் பெரிய சர்ச்சை, ஆளும் தரப்புக்கும், எதிர்கட்சி தரப்புக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. சட்டம் என்ன சொல்கிறதோ, அதை வைத்து, கோர்ட்டோ, ஜனாதிபதியோ தீர்ப்பு சொல்லட்டும். அதனால், அது தொடர்பாக, நான் கருத்து சொல்லவில்லை.
நான் திடீரென என் கருத்துக்களை சொல்வதால், உடனே, என்னை பன்னீர்செல்வம் தரப்பு இயக்குகிறது என சொல்வது தவறு. யாருடைய பிடியிலும் நான் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே என் மனசு சொல்வதை கேட்டு, அதன்படிதான் செயல்படுகிறேன். எனக்குத் தெரிந்து, தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் இயக்கமாகத்தான், அத்தை ஜெயலலிதா, அ.தி.மு.க.,வை வளர்த்திருக்கிறார். அதனால், இந்த இயக்கத்தின் மீது மாறாத பற்று கொண்ட கோடிக்கணக்கான தொண்டர்களும்; மக்களும் இருக்கிறார்கள். அதனால், இந்த இயக்கத்துக்கு சோதனைகள் வரலாம்; ஆனால், இயக்கம் ஒரு நாளும் அழியாது. காப்பாற்றப்படும். அத்தையும் ஆன்மாவும், எல்லோரையும் வழி நடத்தும். அதனால், அ.தி.மு.க.,வினர் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது. ஒற்றுமையாக இருந்து, அத்தையின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.