போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள, ஏ.டி.எம்.,ல் இருந்து எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில், வரிசை எண் இல்லாமல் இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள், பல்வேறு இடங்களில் சிக்கின. இதற்கிடையில், டில்லியில் உள்ள, ஏ.டி.எம்.,ல், பணம் எடுத்தவர்களுக்கு 2,000 ரூபாய்க்கு பதிலாக, அதே நிறத்தில், வடிவத்தில் இருக்கும் குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் கிடைத்தன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ள மத்திய பிரதேசத்தின் தாமோ பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., சென்ற பள்ளி ஆசிரியர், 1,000 ரூபாயை எடுத்துள்ளார். தனக்கு கிடைத்த, இரண்டு, 500 ரூபாய் நோட்டுகளை பார்த்தபோது, அதில், வரிசை எண்கள் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வரிசையில் காத்திருந்தவர்களிடம் இது குறித்து விவாதித்து கொண்டிருந்தார்.
இதனிடையில், அவருக்கு பின்னால் நின்றிருந்தவருக்கு கிடைத்த பணத்திலும், வரிசை எண்கள் இல்லாமல் இருந்தது. இது தொடர்பாக வங்கியில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், உடனடியாக பணத்தை மாற்றித் தர முடியாதென, வங்கி கூறியுள்ளது.
என்ன செய்யலாம்?
இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இதுபோன்று ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டுகள், வரிசை எண் இல்லாத நோட்டு போன்ற பிரச்னைக்குரிய நோட்டுகள் கிடைத்தால், உடனடியாக அந்த ஏ.டி.எம்.,க்கு சொந்தமான வங்கிக் கிளையை அணுகி, எழுத்து மூலம் புகார் அளிக்க வேண்டும்.வங்கி அதிகாரிகள் சரியான பதில் அளிக்காவிட்டால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம். அதனடிப்படையில் விசாரணை நடக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.