சென்னை : இலங்கை கடற்படையினரால் தற்போது பிடித்துச்செல்லப்பட்ட 13 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக கடிதம் எழுதியுள்ளார். மேலும் இலங்கை சிறையில் உள்ள 48 மீனவர்களையும் பிடித்துவைக்கப்பட்டுள்ள 122 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் சிறைபிடிப்பு:
அன்றாட பிழைப்புக்காக தமிழக கடல்பகுதியில் மீன்படிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினரும், மீனவர்களும் சேர்ந்து கொல்வதும், அவர்களை அடித்து கொடுமைப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. அதோடுமட்டுமல்லாது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விசைப்படகுகள் மற்றும் வலைகள், உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துவிடுகின்றனர். மேலும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் இழுத்துச்சென்று காங்கேசன் துறைமுகம் போன்ற இலங்கை சிறையில் வைத்து சித்ரவதை செய்கின்றனர். அவர்களை வருடக்கணக்கில் அடைத்துவைத்து கொல்லாமல் கொன்று வருகின்றனர்.
முதல்வர் கடிதம்:
கடந்தமாதம் கடைசி வாரத்தில் தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் பலரை அடித்ததோடு அவர்களை பிடித்துச்சென்றுவிட்டனர். அதோடு மட்டுமல்லாது அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். அவர்களை உடனடியாக விடுக்கக்கோரியும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை மீட்டுத்தரும்படியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
13 மீனவர்கள் கைது:
மற்றொரு பெரிய அட்டூழியத்தில் இலங்கை கடற்படையினர் ஈவு இரக்கமின்றி ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் சேர்ந்து ஒரு விசைப்படகில் பாக்ஜலசந்தி பகுதியில் நேற்று மீன்படித்துக் கொண்டியிருந்தனர். மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து 4 மீனவர்கள் அதே பகுதியில் ஒரு விசைப்படகில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் விரைந்து வந்து அந்த 13 மீனவர்களையும் அடித்து துன்புறுத்தியதோடு அவர்களை பிடித்துக்கொண்டு காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். மேலும் இந்த 13 மீனவர்களின் 2 விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துகொண்டுசென்றனர்.
இந்த 13 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரசக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
கடற்படையினர் அட்டூழியம்:
நாகை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களும் நேற்று பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்தனர். அப்போது அங்கு வந்த வெறிபிடித்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 13 பேர்களையும் அடித்து துன்புறுத்தியதோடு அவர்களை பிடித்து காங்கேசன் துறைமுக சிறைக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிகிறது. அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுவிட்டனர் என்பதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். இப்படி தொன்றுதொட்டு தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்தியும் படுகொலை செய்தும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு கவலை:
இப்படி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொடுமைக்கு ஆளாகுவதும், அவர்களின் மீன்பிடி உடமைகளை பறித்து செல்வதும் வாடிக்கையாக கொண்டியிருப்பது தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - இலங்கை இடையே மீன்பிடி சர்வதேச கடல் எல்லை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு தன்னை ஒரு வாதியாக இணைத்துக்கொண்டுள்ளது.
ரூ.1650 கோடி:
ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்கள், அதற்கான நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள், விசைப்படகுகள் வாங்க ரூ.1650 கோடி ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதை இந்தக்கடிதத்திலும் வலியுறுத்தி தாங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த தொகையை விரைவாக ஒதுக்கினால் மீனவர்கள் நலம் பெறுவதோடு அவர்களின் பொருளாதார நிலையும் உயரும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறையில் 48 மீனவர்கள்:
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 48 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 122 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறித்து சென்று இலங்கை அரசு பாதுகாப்பில் வைத்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் ஏற்கனவே உள்ள தமிழக மீனவர்களையும் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும் இலங்கை மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் வந்தார். இதனையொட்டி தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால் இதுவரை அந்த மீனவர்களையும் படகுகளையும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் அந்த மீனவர்களின் குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கும் கஷ்டத்திற்கும் ஆளாகி உள்ளனர்.
நடவடிக்கை எடுங்கள்:
இதைப்போக்க இலங்கை உறுதிமொழி அளித்தபடி நேற்று பிடித்துச்செல்லப்பட்ட மீனவர்கள் 13 பேர், ஏற்கனவே சிறையில் உள்ள மீனவர்கள்களையும் சேர்த்து 48 பேர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 122 படுகுகளையும் விடுவிக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் பயன்படுத்தாமல் இருப்பதால் துர்ப்பிடித்து கெட்டு வருகிறது. இன்னும் நாளாக நாளாக அவைகள் மேலும் பழுதடையும். அதனால் அவைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இனிமேலும் தமிழக மீனவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதையும் அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவதையும் நிரந்தரமாக தடுத்து நிறுத்த தங்கள் தலைமையில் உள்ள மத்திய அரசு தூதரக ரீதியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் எந்தவித அச்சமுமின்றியும், பாதுகாப்பாகவும் மீன்பிடித்து திரும்ப உத்தரவாதம் அளிக்கும். இவ்வாறு அந்த கடித்ததில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.