இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாகக் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கர்நாடகாவில் மட்டும் நேற்று 5,000-க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 84 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.34 லட்சத்தைத் தாண்டியுள்ளது.எடியூரப்பா ட்வீட்
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை அவருக்குத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்துள்ளது. அதில், நேற்று எடுக்கப்பட்ட சோதனையின் முடிவு பாசிட்டிவ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read: `தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ - உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!
கர்நாடக முதல்வரின் பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு 10 மணிக்குக் கிடைத்துள்ளன. அதில், கொரோனா உறுதி செய்யப்பட்டதும் அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயதான முதல்வரின் உடல்நிலை சீராகவே உள்ளது, கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை என முதல்வரின் சமூக வலைத்தளக்குழு தெரிவித்துள்ளது.எடியூரப்பா
கடந்த ஒரு மாதமாகக் கர்நாடகாவில் வைரஸ் பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள், ஆலோசனைக் கூட்டங்கள், மாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்கள் என அனைத்திலும் முதல்வர் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு வந்துள்ளார். கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை கடந்த வெள்ளிக்கிழமை, நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வில் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மியும் முதல்வருடன் இருந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது முதல்வராக எடியூரப்பா உள்ளார். முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌக்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RcvmVc
http://dlvr.it/RcvmVc