கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு மண்ணில் புதையுண்டது. இச்சம்பவத்தில் 70 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். ஆகஸ்ட் 7ம் தேதி முதல் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மழை, காற்று என மோசமான வானிலை மீட்புப் பணியில் குறுக்கிட்டாலும், மீட்புக் குழுவினர் தொடர்ந்து உடல்களை தேடி வருகின்றனர்.மீட்புக் குழு
சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருக்கும் ஓடைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மீட்புக் குழுவினர் உடல்களை தேடி வந்தனர். சிறுமி உடல் உட்பட சிலரது உடல்கள் அந்த நீரோடையில் மீட்கப்பட்டது. இதுவரை 65 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 நபர்களின் உடல் பற்றிய எந்த தகவலும் இல்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீரோடை வழியில் பூதக்குழி எனும் அடர் வனப்பகுதி உள்ளது. நேற்று முன் தினம் அப்பகுதியில் மீட்புக் குழுவினர் உடல்களை தேடிவந்த போது வனத்திற்குள் இருந்து திடீரென நீரோடையில் தண்ணீர் குடிக்க புலி ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. புலியைப் பார்த்த மீட்புக் குழுவினர் அச்சமடைந்துள்ளனர்.
Also Read: மூணாறு நிலச்சரிவு: `நீரோடையில் 12 உடல்கள்...’ - கைவிடப்படுகிறதா தேடுதல் பணி?பெட்டிமுடி
வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பூதக்குழி வனப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுவது, மீட்புக் குழுவினரை ஆபத்தில் தள்ளுவது போல என விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து, தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜேந்திரன் தலைமையில், நேற்று மூணாறில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூணாறு கலெக்டர் தினேசன், டி.எஃப்.ஓ கண்ணன், மூணாறு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, மீட்புக் குழுவினர் மற்றும் பெட்டிமுடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வனப்பகுதியில் ஓடக்கூடிய நீரோடையில் பெரிய பாறைகள் இருப்பதாலும், அடிக்கடி புலி உட்பட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும், உடல்களை தேடும் பணியை கைவிடலாமா அல்லது தொடரலாமா என ஆலோசிக்கப்பட்டது. தகுந்த பாதுகாப்போடு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபடலாம் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், 5 நபர்களின் உடல்கள் கிடைக்கும் வரை மீட்புப் பணியை தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.பெட்டிமுடி
Also Read: மூணாறு: `சிதைந்துபோன உடல்கள்; டி.என்.ஏ பரிசோதனை’ - சர்ச்சையாகும் பூங்கா திறப்பு
இந்நிலையில், குரங்கணி தீ விபத்தின் போது, சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து காட்டுத்தீயில் சிக்கி உயிருக்குப் போராடிய நபர்களை மீட்ட, கேரளா அட்வென்சர்ஸ் குழுவினர், பூதக்குழி வனப்பகுதியில் களம் இறங்கியுள்ளனர். இவர்களோடு வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை என சுமார் 50 பேர் கொண்ட குழு, பூதக்குழி வனப்பகுதியில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
http://dlvr.it/RfD1h6