தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோஷமஹால் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ டைகர் ராஜா சிங்கின் ஃபேஸ்புக் கணக்கை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. எம்.எல்.ஏ டி. ராஜா சிங் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய பதிவை நீக்க ஃபேஸ்புக் நிறுவனத்தின், சர்ச்சைக்குரிய கருத்து (Hate Speech Policies) கொள்கையை பயன்படுத்தி நீக்க அந்நிறுவனத்தின் இந்திய கொள்கைத் தலைவர் அங்கி தாஸ் மறுத்துவிட்டதாக கடந்த மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டிருந்தது. அதனையடுத்து ‘இந்தியாவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்துகின்றன' என ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு விளக்கமளித்த ஃபேஸ்புக் நிறுவனம் ‘எந்தவித அரசியல் அமைப்பையோ அல்லது கட்சிகளையோ சாராதது ஃபேஸ்புக். வன்முறையைத் தூண்டும் மற்றும் உலகளவில் செயல்படுத்தப்படும் சர்ச்சைக்குரிய கருத்து மற்றும் உள்ளடக்கத்தை வெளியிடுவதை கொள்கை அடிப்படையில் எங்கள் நிறுவனம் தடை செய்கிறது. நேர்மை மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்த வழக்கமான தணிக்கைகளை மேற்கொள்கிறோம்’ என தெரிவித்திருந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் "எங்களது நிறுவனத்தின் ஊடாக வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துகளை பகிரப்படுவதை தடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து (Hate Speech Policies) கொள்கையை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அதை மீறியதற்காக நாங்கள் ராஜா சிங்கை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கியுள்ளோம்" என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று ஃபேஸ்புக் அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தனக்கு ஃபேஸ்புக்கில் கணக்கே இல்லை என கடந்த மாதம் ட்விட்டரில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. Courtesy: https://www.ndtv.com/india-news/facebook-bans-bjp-mla-t-raja-singh-named-in-report-that-sparked-hate-speech-row-2289674?pfrom=home-topscroll
http://dlvr.it/RfvBZz
http://dlvr.it/RfvBZz