முல்லைப்பெரியாறு உள்பட கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே தண்ணீர் தொடர்பான பல பிரச்னைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, பரம்பிக்குளம் – ஆழியாறு, ஆணை மலையாறு, பாண்டியாறு – புன்னம்புழா உள்ளிட்ட தண்ணீர் பிரச்னைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவது உள்ளிட்ட பிரச்னைகளும் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இருந்துவருகின்றன. தீர்வு காணப்படாத இந்தப் பிரச்னைகளால், பருவமழைக் காலத்தில் கிடைக்கும் பெருவாரியான மழைநீர் இரு மாநில மக்களுக்கும் பயன்படாமல் கடலில் கலந்துவருகிறது.பவானி ஆறு
கேரளா மற்றும் தமிழ்நாடு இடையே தண்ணீர் தொடர்பான பிரச்னைகளில் இரு மாநிலங்களிலும் ஆதரவு நிலை, எதிர்ப்பு நிலை என இரண்டுமே இருந்துவருகின்றன. கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டுக்குத் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு மாநில விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அப்போது, கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகத் தீர்வுகாணப்படாமல் இருக்கும் தண்ணீர் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கோரிக்கையை பினராயி விஜயன் ஏற்றுக்கொண்டார்.
Also Read: `எங்கள் சாதனைகளை எடுத்துச் சொல்ல ஸ்டாலின் உதவுகிறார்!’ - எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive
நதிநீர் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு மாநில முதல்வர்களும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. தமிழக பொதுப்பணித் துறை மற்றும் கேரள பொதுப்பணித் துறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதைத் தொடர்ந்து இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுவதென்று முடிவுசெய்யப்பட்டது.பினராயி விஜயன்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கடந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மின் துறை அமைச்சர் தங்கமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் சாய்குமார் ஆகியோரும் சென்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மற்றும் பொதுப்பணித் துறை, மின் துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமான முறையில் நடந்துமுடிந்தது. இரு மாநில அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. அதன் பலனாக, தமிழ்நாடு விவசாயிகளுக்குப் பயனளிக்கக்கூடிய பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் கூட்டாக முடிவுசெய்துள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள தோவாலா, இரண்டாவது சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. அங்கு, ஆண்டுக்கு சராசரியாக 7,000 மி.மீ மழை பெய்கிறது. தோவாலா, பந்தலூர், ஓவேலி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் பாண்டியாற்றில் கலக்கிறது. பாண்டியாறு, மேற்கு நோக்கிப் பாய்ந்து கேரளாவில் உள்ள சாலியாற்றில் கலந்து, நிலாம்பூர் வழியாக கோழிக்கோடு அருகே கடலில் கலக்கிறது. தமிழகத்தில் உருவாகி கேரளாவில் கடலில் கலக்கும் பாண்டியாற்று தண்ணீரை முறையாகப் பயன்படுத்தினால், தமிழ்நாட்டுக்குத் தேவையான நீராதாரம் மேம்படும். எனவே, இந்தத் தண்ணீரைத் தமிழகத்துக்குப் பயன்படும் வகையில் திருப்பிவிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது.எடப்பாடி பழனிசாமி
1967-ம் ஆண்டு பாண்டியாறு – புன்னம்புழா நீர்த்தேக்கத்திட்டம் குறித்து கேரள அரசுடன் தமிழ்நாடு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. `கேரளாவில் கடலில் கலக்கும் பாண்டியாற்று தண்ணீரை தமிழகத்துக்குத் திருப்பினால், இங்கு பல வகைகளில் அது பயன்படும். தண்ணீர் தேவையை அது நிறைவேற்றுவதுடன், மின்சாரம் தயாரிக்கவும் பயன்படும். தமிழ்நாடு - கேரளா எல்லையில் தடுப்பணைக் கட்டி, கிழக்கு நோக்கி பாண்டியாற்றைத் திருப்பினால் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். மேலும், பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தால் கிடைக்கும் தண்ணீர் பவானி பாசனங்களின் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கும்’ என்று தமிழக விவசாயிகள் கூறிவருகின்றனர்.
Also Read: ‘ராம ஜென்மபூமி’க்கு அடுத்து ‘கிருஷ்ண ஜென்ம பூமி’யா?'
கடந்த ஆண்டு இரு மாநில முதல்வர்களும் திருவனந்தபுரத்தில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. அதன் பிறகு, இப்போது இரு மாநில அதிகாரிகளுக்கும் இடையே நேற்று (செப்டம்பர் 11-ம் தேதி) பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நீர்ப்பாசனத்துறை மற்றும் மின்சாரத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையில், மேற்கு மாவட்டங்களுக்கு பயனளிக்கக்கூடிய பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.ஆழியாறு
இது குறித்து தமிழக அரசின் அதிகாரிகளிடம் பேசியபோது, ``இரு மாநில அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். முதலில், இந்தப் பிரச்னைகள் தொடர்பாக தமிழக விவசாயிகளும் சில அமைப்புகளும் முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து கேரள உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல்வர் உத்தரவிட்டார். அத்துடன், அவரே கேரளாவுக்குச் சென்று அந்த மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஈகோ இல்லாத முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருப்பதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிவருகிறது” என்றனர்.
இந்தப் பிரச்னைகளில் முழுமையாக சாதிக்க வேண்டுமென்றால், இந்தப் பேச்சுவார்த்தை நடவடிக்கையை கேரளாவுடன் இன்னும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
http://dlvr.it/RgW0GH