கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா, ஸரித், சந்தீப் நாயர் உள்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தங்கக் கடத்தலின் தொடக்க மற்றும் இறுதிப்புள்ளிகளை தேடி என்.ஐ.ஏ, சுங்கத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை விசாரணை நடத்திக்கொண்டே இருக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்வப்னா கூறும் ஒவ்வொரு தகவல்களும் பூகம்ப அதிர்வை ஏற்படுத்திவருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன், ஸ்வப்னாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவசங்கரனிடம் சுங்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியதில், ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கி லாக்கரில் கட்டுகட்டாக கரன்சிகளை வைத்திருப்பதாக புட்டு புட்டு வைத்திருக்கிறார். ஸ்வப்னாவின் இரண்டு வங்கி லாக்கர்களை விசாரணை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 1.5 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், சுமார் ஒரு கிலோ தங்க நகைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது என விசாரித்தபோது, கேரள அரசின் 'லைஃப் மிஷன்' எனும் வீடு கட்டும் திட்டத்தில் ஒப்பந்ததாரரிடம் இருந்து கமிஷனாகப் பெற்ற தொகை என அதிரவைத்திருக்கிறார் ஸ்வப்னா.ஸ்வப்னா சுரேஷ்
கேரள முதல்வர் பினராயி விஜயன் சேர்மனாக இருக்கும் 'லைஃப் மிஷன்' திட்டத்தில், கடந்த மார்ச் மாதம் 2,14,262 வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இந்த திட்டத்தில், திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரி பகுதியில் வீடுகட்ட வளைகுடா நாடுகளைச் சேர்ந்த ஓர் அமைப்பு முன்வந்திருக்கிறது. சுமார் 18.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அந்த ஒப்பந்தத்தை யுனிடாக் என்ற நிறுவனம் எடுத்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் சுமார் 4.25 கோடி ரூபாயை யு.ஏ.இ தூதரக ஊழியர் ஒருவருக்கும், ஸ்வப்னா டீமிற்கும் கமிஷனாகக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய அரசுக்கு தெரியாமல் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றிருப்பதால், இதுபற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வடக்கஞ்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் அக்கரா புகார் அளித்தார். அதன்பேரில் சி.பி.ஐ வழக்குபதிவு செய்து விசாரணையையும் தொடங்கியது.
Also Read: கேரளா: ஸ்வப்னா சுரேஷ்... ஐபோன் கிஃப்ட்! - சர்ச்சையில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா
யுனிடாக் நிறுவனத்தின் எம்.டி சந்தோஷ் ஈப்பனிடம் சி.பி.ஐ நடத்திய விசாரணையில், திருவனந்தபுரத்தில் உள்ள கரமனா ஆக்ஸிஸ் வங்கி கிளை மூலம் யு.ஏ.இ-யில் இருந்து, சந்தோஷ் ஈப்பனின் நிறுவனத்துக்கு நான்கு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் பணபரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும். அதே வங்கி கிளையில் இருந்து 68 லட்சம் ரூபாயை ஸ்வப்னாவின் நண்பர் சந்தோஷ் நாயரின் வங்கி கணக்குக்கு மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர, ஸ்வப்னா டீமிற்கு சில கோடிகள் கரன்சியாக கைமாறியதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒப்பந்தம் பெற்றதற்கு கமிஷனாக ஐந்து ஐபோன்களை ஸ்வப்னாவுக்கு வாங்கி கொடுத்திருப்பதாகவும் சந்தோஷ் ஈப்பன் ஒப்புக்கொண்டுள்ளார்.கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா
சந்தோஷ் ஈப்பன் இதுகுறித்து, "2019-ம் வருஷம் டிசம்பர் 2-ம் தேதி யு.ஏ.இ நேஷனல் டே திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்தில் நடந்தது. அதில் சீப் கெஸ்ட்டா கலந்துகொள்ளும் கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா போன்றோருக்கு கொடுக்கிறதுக்காக ஐந்து ஐபோன் வேண்டும் என ஸ்வப்னா கேட்டிருந்தாங்க. நான் எர்ணாகுளத்தில உள்ள ஒரு மால்ல இருந்து ஐபோன்களை வாங்கி ஸ்வப்னாகிட்ட ஒப்படைச்சேன்" என தெரிவித்திருக்கிறார்.
Also Read: கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ - ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்
இதையடுத்து ஸ்வப்னாவிடம் ஐபோன் கிஃப்டாக வாங்கியதாக கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா மீது புகார் எழுந்தது. "அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன், ஆனால், நான் ஐபோன் வாங்கவில்லை. அன்று நடந்த குலுக்கலில் சி.பி.எம் மாநில பொதுச்செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், அவருக்க உதவியாளராக இருந்த ஒருத்தருக்குத்தான் அந்த ஐபோன் பரிசு கிடைத்தது. மற்ற ஐபோன்களை யார் பயன்படுத்துகிறார்கள் என போலீஸ் விசாரணை செய்ய வேண்டும்" என்கிறார். மேலும், ஐபோன்கள் எங்கே என்பது குறித்து விசாரிக்க சட்ட நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறார் ரமேஷ் சென்னித்தலா. ஸ்வப்னா சுரேஷ்
இதற்கிடையில், 'லைஃப் மிஷன் வீடு கட்டும் திட்டம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தக் கூடாது' என்று எர்ணாகுளம் ஐகோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இது முதல்வர் பினராயி விஜயனை விமர்சனத்திற்குள்ளாக்கியிருக்கிறது. இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், "சி.பி.ஐ விசாரணையில் சில சட்டரீதியான பிரச்னைகள் உள்ளதாக சட்ட ஆலோசனைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் கோர்ட்டில் மனு அளிக்க சி.இ.ஓ-விற்கு அனுமதி அளிக்கப்பட்டது. லைஃப் மிஷனுக்காக வெளிநாட்டில் இருந்து ஒரு தொகையும் பெறப்படவில்லை" என்றார். தங்கம் கடத்தல் வழக்கில் மத்திய அரசு பலமான விசாரணை நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார் பினராயி விஜயன். இப்போது அவர் சேர்மனாக இருக்கும் லைஃப் மிஷன் திட்டத்தில் எழுந்துள்ள முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரிக்கக்கூடாது என்பது என்ன நியாயம் என எதிர்கட்சிகள் கொந்தளிக்கின்றன.
ஸ்வப்னா சூறாவளி, கேரளத்தில் பலத்த சேதாரங்களை ஏற்படுத்தாமல் ஓயாது போலிருக்கிறது!
http://dlvr.it/Rj5pwp
http://dlvr.it/Rj5pwp