இந்தியாவில் டி.ஆர்.பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் - TRP) கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) நிறுவனம் செய்துவருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கீழ் இயங்கிவரும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம், BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களைவைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது.
டி.ஆர்.பி. கணக்கிடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக கோல்டன் ராபிட் கம்யூனிகேஷன்ஸ் (Golden Rabbit Communications) என்ற ஊடக மற்றும் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான கமல் ஷர்மாவின் புகாரின் அடிப்படையில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் (Hazratganj) காவல் நிலையத்தில் உத்தரப்பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
கமல் ஷர்மா தன் புகாரில், ``ஊடகத்துறையில் சிலர் ஏமாற்ற முயற்சிக்கும் குற்றச் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். டி.ஆர்.பி-க்கள் என பொதுவாகக் குறிப்பிடப்படும் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகளைக் கையாளுவதன் மூலம் நம்பிக்கையை மீறுதல், மோசடி செய்தல் உள்ளிட்ட தவறுகளைச் செய்திருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.டி.ஆர்.பி
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ல் எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரையும் குறிப்பிடாமல், ஓப்பன் எஃப்.ஐ.ஆர் ஆகவே அது பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 பி (கிரிமினல் சதி), 34 (பொதுவான நோக்கம்), 406, 408 மற்றும் 409 (அனைத்தும் குற்றவியல் நம்பிக்கை மீறுவதைக் கையாளும்) மற்றும் பிரிவு 420 (மோசடி) உள்ளிட்ட பிரிவுகளில் எந்த ஒரு தொலைக்காட்சி சேனலையும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது,
முன்னதாக, டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக மோசடி நடந்திருப்பதாக ரிபப்ளிக் டி.வி., மராத்தி சேனல்களான `Fakt Marathi', `பாக்ஸ் சினிமா' உள்ளிட்ட சேனல்கள் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி நடத்திவந்தனர்.
இந்த மோசடி வழக்கில் தங்கள் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து ரிபப்ளிக் டி.வி நிர்வாகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `மும்பை உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்’ என்று உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில், மும்பை காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாகச் சிலரைக் கைதுசெய்ததுடன், ரிபப்ளிக் டி.வி-யின் முக்கிய அலுவலகப் பொறுப்பாளர்களுக்கும் சம்மன் அனுப்பியது.
இந்தநிலையில், புதிதாக உ.பி-யில் பதிவான டி.ஆர்.பி வழக்கு, நேற்று அம்மாநில அரசின் பரிந்துரையின் பெயரில் மத்திய புலனாய்வு பிரிவுக்கு (CBI) மாற்றப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
அக்டோபர் 17-ம் தேதி உ.பி. காவல்துறையினரால் டி.ஆர்.பி வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தாய் நிறுவனமான ஏ.ஆர்.ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த ரிட் மனுவில், `மும்பை காவல்துறையினர் அறிக்கையைப் பொய்யாகக் சித்திரிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்’ என்றும், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவில் ரிபப்ளிக் டி.வி-யின் ஆலோசகர் ஹரிஷ் சால்வே, ``கேபிள் டி.வி ஆபரேட்டர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக நிறுவனங்கள், விளம்பரதாரர்கள் மற்றும் இந்தியா முழுவதுமுள்ள அனைத்துப் பங்குதாரர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மையான சதித்திட்டத்தை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ போன்ற நிறுவனம், இந்தியா முழுவதும் விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகிறது" என்று கூறியிருக்கிறார். BARC Rating
மேலும், ``அனைத்துப் பங்குதாரர்களின் நம்பிக்கையையும் மறுபரிசீலனை செய்ய சி.பி.ஐ-யிடம் விசாரணையை ஒப்படைப்பது முக்கியம் என்றும், மும்பை காவல்துறையினர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முறையில் மனுதாரர்களை சிக்கவைப்பதற்கு, விசாரணைகளுக்கு மிகவும் தவறான முன்மாதிரியை கையாளுகின்றனர்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
பால்கர் கூட்டுத் தாக்குதல் வழக்கு உள்ளிட்ட பிற நிகழ்வுகளின் அறிக்கைகள் தொடர்பாக ரிபப்ளிக் டி.வி மற்றும் அதன் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மகாராஷ்டிரா காவல்துறையினர் சில எஃப்.ஐ.ஆர்-களை பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்ட சால்வே, கோஸ்வாமிக்கு எதிராக மகாராஷ்டிரா சட்டமன்றக்குழுவால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் வழக்கு குறித்துத் தகவல் தெரிவித்த சி.பி.ஐ அதிகாரி ஒருவர், ``டி.ஆர்.பி. வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உ.பி காவல்துறையால் பதிவுசெய்யப்பட்ட வழக்கின்படி, குறிப்பாக யாருக்கும் எதிராக இல்லாமல் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
http://dlvr.it/Rk2wS3
http://dlvr.it/Rk2wS3