கேரளாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த 158 குழந்தைகளின் தற்கொலை குறித்து ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் தலைமையிலான குழு செய்த ஆய்வின் அறிக்கை வெளிவந்துள்ளது. மே 11 மாலை 5 மணியளவில், பதனம்திட்டாவின் சித்தார் வனப்பகுதியில் 17 வயது சிறுமி தனது வீட்டின் வளாகத்தில் இறந்து கிடந்தார். தனது தாயின் மற்றும் வளர்ப்பு தந்தையின் குடிப்பழக்கத்தை சமாளிக்க முடியாமல் போனதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு, திருச்சூரில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோர் விவாகரத்து செய்துகொள்ளும் முடிவெடுத்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். மேலும் 13 வயதான பெண் தனது சகோதரர் செல்போனை பிடுங்கிய காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார். பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கு படிக்காததற்காக அம்மா திட்டியதால் 15 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். இதுபோன்ற தொடர் தற்கொலைகள் கேரளாவில் கடந்த சில மாதங்களில் நடந்தன. இது தொடர்பாக ஆய்வுசெய்ய மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவுக்கு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் பணிப்பாளர் டிஜிபி ஆர்.ஸ்ரீலேகா தலைமை தாங்கினார். இந்த காலகட்டத்தில் நடந்த 158 குழந்தை தற்கொலை வழக்குகளை இந்த குழு ஆய்வு செய்து சில முக்கியமான விசயங்களை கண்டறிந்தது. இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் (90 பேர்) மற்றும் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் (106 பேர்). குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் படிப்பில் சிறந்தவர்கள் (ஒருவர் இந்திய ஜனாதிபதியிடமிருந்து ஒரு விருதைப் பெற்றார்). பெரும்பாலான குழந்தைகள் தங்கள் வீட்டு வளாகத்திற்குள் தற்கொலை செய்து கொண்டனர் (137 வழக்குகள்). சிலருக்கு மனநல பிரச்சினைகள் இருந்தன (24), மற்றவர்கள் அதிகளவு மொபைல் போன் பயன்படுத்துபவராக இருந்தனர். 19 குழந்தைகள், பெற்றோர்கள் திட்டுவதால் அவர்களின் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 14 குழந்தைகள் உறவு சிக்கல்களால் தற்கொலை செய்துகொண்டனர். வீட்டு வன்முறை மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக 12 தற்கொலைகள் நடந்துள்ளன. மொபைல் போன் போதை 11 பேரின் உயிரைப் பறித்தது.ஆனால் மிகவும் கவலையான தகவலாக, 40 வழக்குகளில் தற்கொலைக்கான காரணம் 'தெரியவில்லை'. கவலைக்குரிய மற்றொரு காரணம், 91% குழந்தைகள் கீழ் மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், நிதி மன அழுத்தம் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜூலை 9 ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், குழந்தை தற்கொலை விவகாரத்தை ஆய்வு செய்யும் குழுவை அமைப்பதாக அறிவித்தார். இருப்பினும், வீட்டுக்குள்ளே அடைத்தலும் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை என்று குழு முடிவு செய்தது. கல்வி வசதிகள் இல்லாததால் மலப்புரத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகிறது. தற்கொலைகளில் பெரும்பாலானவை மலப்புரத்தைச் சேர்ந்தவை (22), இது கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை விட இருமடங்காகும். திருவனந்தபுரத்தில் 21, திருச்சூரில் 18, பாலக்காடில் 15 தற்கொலைகள் நடந்துள்ளன.பெற்றோரின் பராமரிப்பில், பெரும்பாலும் வீட்டில் இருந்தபோதுதான் பல குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது கவலைக்குரியது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060 .
http://dlvr.it/RkQ3YV
http://dlvr.it/RkQ3YV