இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆளும் ஒரே மாநிலமான, கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணி (Left Democratic Front - LDF), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை முக்கியத் தலைமையாக வைத்துச் செயல்படுகிறது. எல்.டி.எஃப் கூட்டணியே தற்போது ஆட்சியிலும் இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (United Democratic Front - UDF) கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்தில் இயங்கிவருகிறது. கடந்த முறை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, கடைசி நேரத்தில் சோலார் பேனல் மோசடி உள்ளிட்ட சர்ச்சைகளால் ஆட்சியை இழந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையிலான யு.டி.எஃப் அரசாங்கத்தின் ஆட்சியின்போது சோலார் பேனல் வழக்கு வெடித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கியப் பெண் மூலம், ஆளும் கூட்டணியின் பல அரசியல் புள்ளிகள் சிக்கினர்.ஸ்வப்னா சுரேஷ்
இந்தநிலையில், கேரள மாநிலம் தேர்தலைச் சந்திக்க இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் விவகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணனின் இளைய மகன் பினீஷ் கொடியேறி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் தற்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு அடுத்த முறை ஆட்சி அமைப்பது சவாலாகிவருகிறது.
இதையடுத்து, நேற்று மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கேரளா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சோலார் பேனல் வழக்கில் புகார்தாரரான பெண் குறித்து விமர்சித்துப் பேசினார்.
இது குறித்து முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ``ஒவ்வொரு நாள் காலை எழுந்திருக்கும்போதும், இந்தப் பெண் தன்னை யாரோ பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறிக்கொண்டே எழுந்திருக்கிறார். எல்.டி.எஃப் தீவிர முயற்சியாக ஒரு பாலியல் தொழிலாளியை யு.டி.எஃப்-க்கு எதிராகக் கொண்டு வந்து கதைகளைச் சொல்ல வைத்திருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் அவர்களே, இந்த விளையாட்டு எங்களிடம் வேலை செய்யாது, இந்த பிளாக்மெயில் எங்களிடம் செல்லாது. ஒரு பெண் ஒரு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அவர் பலமுறை வன்கொடுமை செய்யப்படுவதாகக் கூறுகிறார். ஒரு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலே சுய மரியாதையுடனுள்ள ஒரு பெண் இறந்துவிடுவார் அல்லது மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொள்வார்" என்று முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறினார்.முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
தொடர்ந்து அதே மேடையில், `எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால், நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன். இதைப் பெண்கள் விரோதமாக சித்திரிக்கச் சில பகுதிகளில் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. அது உண்மையல்ல, என்னுடைய கருத்து பெண் விரோதமாக இருந்தால் வருந்துவதாகவும்’ கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து தன் முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, ``பாலியல் வன்கொடுமை என்பது மிகவும் மோசமான குற்றம் என்பதை நாங்கள் அறிவோம்.பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுமதியின்றி அவர்களின் மனதைத் தாக்குவது ஒரு கொடூரமான குற்றம். கே.பி.சி.சி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறிய கருத்து சமூகத்துக்கு அவமானகரமானது. நம்மில் பெரும்பாலோர் சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றி, தாக்குபவரை தண்டிக்க விரும்புகிறவர்கள். வழிநடத்த வேண்டிய ஓர் அரசியல் தலைமை இப்படி இழிவான கருத்துகளை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.
கடந்த ஜூன் மாதம், அமைச்சர் ஷைலாஜாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட்ட முல்லப்பள்ளி ராமச்சந்திரன், அவரை `கோவிட் ராணி', `நிபா இளவரசி' என்று அழைத்தார். COVID-19-ஐ கையாண்டதற்காக ஷைலாஜாவை ஒரு `ராக் ஸ்டார்’ என்றும் அழைத்து அவர் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RksvSX