பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் பரிச்சயாமன நவாஸுதீன், இந்தியாவின் நல்ல நடிகர் என்ற பெயர் பெற்றவர்களில் ஒருவர். சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு முன்பு சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வந்தார். அப்போது நடந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட நவாஸுதீன், 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்ததை நினைவுகூர்ந்துள்ளார். நவாஸுதீன், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். இதனை பல மேடைகளில் உதிர்த்துள்ளார். கமல்ஹாசன் படங்கள் ஒவ்வொன்றையும் விடாமல் பார்த்துவிடும் நவாஸுதீனுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பே கமல் உடன் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. 'ஹே ராம்' படத்தில்தான் கமல் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறிய வேடம்தான் என்றாலும் கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்பது போல, தனது ஆஸ்தான நாயகனின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனே அதனை ஒப்புக்கொண்டு நடித்துக்கொடுத்துள்ளார். சொல்லப்போனால் நவாஸுதீனுக்கு இது முதல் படமும் கூட. ஆனால் காலம் நவாஸுதீனுக்கு சோதனையாக இருந்துள்ளது. நடித்து முடித்துகொடுத்து விட்டு படம் வெளியாகும் முன் பிரீமியர் ஷோவை பார்க்க தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். பிரீமியர் ஷோ தொடங்குவதற்கு சற்று முன்பு, படத்தின் நீளம் கருதி நவாஸுதீன் பாகம் நீக்கப்பட்டுவிட்டதாக கமல்ஹாசனே நேரில் கூறியுள்ளார். எனினும் துவண்டு விடாத அவர், தொடர்ந்து போராடியதால் பாலிவுட்டில் தற்போது தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். மேலும் அன்று, கமல் சொன்ன அட்வைஸ்தான் தன்னை இவ்வளவு தூரம் கொண்டுவந்துள்ளது என்றும் மனம் திறந்துள்ளார் நவாஸ். மேலும், தனக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசனுடன் பணிபுரிவது குறித்து 'Pinkvilla'-வுக்கு அளித்த பேட்டியில் பேசிய நவாஸ், ``கமல் ஜியின் நடிப்பில் இன்றும்கூட ஈர்க்கப்படுகிறேன். அவர் ஒரு சிறந்த நடிகர். என்னைப் பொறுத்தவரை அவர் ஆன்டணி ஹாப்கின்ஸ்க்கு சமமானவர், நல்லவர். எந்த மட்டத்திலும் கமல்ஹாசன் எனக்கு ஹாப்கின்ஸை விட குறைவாக இல்லை. மேலும் கமல்ஹாசன், நசீருதீன் ஷா மற்றும் திலீப் குமார் போன்ற மூன்று நடிகர்களின் படங்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாதவை" என்று கூறியிருக்கிறார். அத்துடன், தான் துணை நடிகராக இருந்த காலகட்டத்தை விட தற்போது துணை நடிகர்களுக்கான பார்வை மாறியிருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவிக்கிக்கிறார் நவாஸ். அதில், ``இது ஒரு பெரிய மாற்றம் மற்றும் வரவேற்கத்தக்க மாற்றம். இந்த திறமையான நடிகர்களின் மதிப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இது அற்புதம். இந்த மாற்றம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்று நம்புகிறேன்" என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
http://dlvr.it/RlMRkg
http://dlvr.it/RlMRkg