வரும் ஜனவரி மாதம் முதல் வர்த்தக செயல்பாடுகளை முழு வீச்சில் தொடங்க இருப்பதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் ரக க்ரூஸர் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தனது வர்த்தகத்தை மறுசீரமைக்கும் வகையில், இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக திடீரென அறிவித்தது ஹார்லி டேவிட்சன். எதிர்பார்த்த அளவு இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனை இல்லாததால், இந்த முடிவை எடுத்ததாக ஹார்லி டேவிட்சன் அறிவித்தது. மேலும், ஹரியானாவில் செயல்பட்டு வந்த ஆலையையும் மூடியது. இது அந்நிறுவனத்தின் இந்திய பணியாளர்கள், டீலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனையை மீண்டும் துவங்குவதற்கு ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் வர்த்தக செயல்பாடுகள் முழு வீச்சில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாரண்டி மற்றும் ஹார்லி உரிமையாளர் குழுக்களுக்கான செயல்பாடுகளை தொடர முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விற்பனை, சர்வீஸ், வாரண்டி மற்றும் உரிமையாளர் குழுக்களின் செயல்பாடுகள் மீண்டும் துவங்கப்படும் என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் வளரும் ஆசிய நாடுகளுக்கான பிரிவின் நிர்வாக இயக்குனர் சஜீவ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RmBCPt
http://dlvr.it/RmBCPt