நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள பிதர்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தீபாவளியை முன்னிட்டு இதே பகுதியிலுள்ள ஒரு தனியார் துணிக்கடையில், தன் மனைவிக்குப் புடவை ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு வாங்கி வந்த புடவையைப் பிரித்துப் பார்த்த மனைவி, அதில் தமிழ்நாடு அரசின் முத்திரை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், இது தமிழக அரசு வழங்கிய விலையில்லா சேலை என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அந்த சேலையை எடுத்துக்கொண்டு அதே கடைக்குச் சென்று முறையிட்டிருக்கிறார்கள். தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூறி, அந்தப் புடவையை ரகசியமாக வாங்கி வைத்துவிட்டு, வேறொரு சேலையை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் கடைக்காரர்கள்.
மேலும் அந்தத் தொழிலாளி இது குறித்து நுகர்வோர் அமைப்புகளிடமும் புகார் கொடுக்க, தாசில்தார் தலைமையிலான குழுவினர் அந்தத் துணிக்கடையில் ஆய்வு செய்தனர். ஆய்வில், அதிரவைக்கும் பல முறைகேடுகள் தெரியவந்திருக்கின்றன.விலையில்லா வேட்டி சேலைகள்
பாதிக்கப்பட்ட நபர் இது குறித்துப் பேசுகையில், ``மக்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அவசரமா புடவையை வாங்கிட்டு, வீட்டுக்குப் போயிட்டேன். விடியக் காலையில பார்த்தா, இலவச வேட்டி சேலையில இருக்கற மாதிரி மார்க் போட்டிருக்காங்க. அரசாங்க சேலையை ஏமாத்தி 275 ரூபாய்க்கு வித்துட்டாங்க. அதுக்கு அப்புறம் போயி வேற குடுங்கன்னு மாத்திட்டு வந்துட்டேன்" என்றார் அப்பாவியாக.
இந்த முறைகேடு குறித்து கூடலூர் வருவாய்த்துறை அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், ``தமிழக அரசின் விலையில்லா சேலையை இதே பகுதியைச் சேர்ந்த மேலும் சிலருக்கு 300 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கிறார்கள். இந்தச் சேலைகள், தமிழகத்திலிருந்து கேரளா கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூ வேலை செய்யப்பட்டு, விற்பனை செய்ய அனுப்புகின்றனர். இந்தக் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, எட்டு விலையில்லா சேலைகளை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் கேரளாவுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள முடிவுசெய்திருக்கிறோம்" என்றனர்
இந்த விவகாரம் குறித்துக் கடை உரிமையாளர், ``கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியிலிருந்து புடவைகளை மொத்தமாக கொள்முதல் செய்தேன். அதில், இந்தச் சேலைகளும் கலந்து வந்திருக்கின்றன. வேறு எதுவும் எனக்குத் தெரியாது" என்றார்.விலையில்லா வேட்டி சேலைகள்
கூடலூர் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ``தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளைச் சட்டவிரோதமாக, ஒரு சில அதிகாரிகளின் உடந்தையுடன் மொத்தமாக வாங்கி, மூட்டை மூட்டையாகக் கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர். அங்கு கொண்டு சென்ற பிறகு, அரசு லோகோவை அழித்து, சில பூ வேலைப்பாடுகளைச் செய்து கடைகளில் விற்கின்றனர். இதை அறியாத அப்பாவிப் பழங்குடிகளும்,தோட்டத் தொழிலாளர்களும் வாங்கி ஏமாறுகின்றனர்" என்றனர்.
http://dlvr.it/Rm7Xw2