தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த நிலையில், அணை பலவீனமாக இருப்பதாகவும் எனவே இந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கேரள அரசு தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.விவசாயிகள்
கம்பத்தில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசுகையில், ``உச்சநீதிமன்றமும், பல்வேறு ஆய்வு குழுக்களும், நிபுணர்களும் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று ஒரு முறைக்கு பலமுறை சான்றளித்த பின்னரும் கேரள அரசும், அரசியல் கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவோம் என்ற பிடிவாதத்திலேயே இருந்து வருகின்றனர்.
மேலும் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு பசுமை தீர்ப்பாயத்திடமும், மத்திய நீர்வளத் துறையிடம் அனுமதி பெற்று புதிய அணை கட்டுவதற்காக நில அளவீடு செய்யத் தொடங்கியுள்ளது. புதிய அணை என்கிற கேரள அரசின் பிடிவாதம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதனால் மத்திய மாநில அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய அணை கட்டுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரளாவிற்கு கொடுத்த, தாக்க மதிப்பீட்டு வரைவுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.விவசாயிகள்
மேலும் முல்லைப்பெரியாறு நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கேரள மாநில அரசின், அரசியல் சாசன அமர்வுக்கு எதிரான போக்கினை கண்டித்தும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரியும், வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி தொடர் ஜோதி பயணம் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தொடங்கி சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக தேனிவந்து சீலையம்பட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, உத்தமபாளையம், கம்பம் வழியாக லோயர்கேம்ப் பென்னிகுயிக் மண்டபத்தில் நிறைவு பெறும்" என்றார்.
இந்நிகழ்ச்சியின்போது ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், பொதுச் செயலாளர் பொன்காட்சிக்கண்ணன், செயலாளர் சலேத்து, பொருளாளர் லோகநாதன், இணைச்செயலாளர் ரஞ்சித்குமார் உடனிருந்தனர்.
http://dlvr.it/Rmcy8l
http://dlvr.it/Rmcy8l