தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே கடனில் தவிக்கும் தமிழக அரசால் இதை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 100 ரூபாயில் தொடங்கிய பொங்கல் பரிசு பணம் தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புதான் என்றாலும்கூட கொரோனா, புயல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிதி நிலைமையையும் பார்க்க வேண்டியது அவசியம். தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை 4.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்நிலையில், கொரோனா காலத்துக்கான செலவினங்கள், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் என்று அடுத்தடுத்து நிதிச்சுமை ஏறிக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு பணம் வழங்கப்பட்டபோது தமிழக அரசின் மொத்த செலவினம் 2 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் இந்த ஆண்டு பரிசு பணம் 2 ஆயிரத்து 500 ரூபாயாக வழங்கப்படுகிறது. கூடுதலாக அரிசி, வெல்லம், முழு கரும்பு வழங்கப்பட இருப்பதால் அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதனால் செலவினங்களை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொடக்கம், ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்திருப்பது, டாஸ்மாக் மூலம் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றை வைத்து பொங்கல் செலவினத்தை சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன்மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் 4.5 லட்சம் கோடி நிதி சுமை இருக்கும் போது தற்போது 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவு என்பது, கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு கூடுதல் செலவுதான். ஆனாலும் இது மக்கள் நலன் சார்ந்தது என்பதால் அரசு இதை சமாளிக்க போதுமான நிதி நிலையுடன் இருப்பதாகவே தெரிகிறது.
http://dlvr.it/Rp39wf
http://dlvr.it/Rp39wf