நாட்டின் மீது அக்கறை கொண்டவர் குலாம் நபி ஆசாத் என பிரதமர் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த கூட்டத்தொடரோடு நிறைவடைகிறது. அவர்களுக்கு பிரியாவிடை அளித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசினார். “குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் இருந்தபோது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கியிருந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காஷ்மீர் முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத் ஆகியோரை நான் தொடர்பு கொண்டேன். அப்போது அந்த அளவுக்கு இருவரும் உதவி செய்தனர். குலாம் நபி ஆசாத் அடிக்கடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக்கொண்டே இருந்தார். என்றும் நான் குலாம் நபி ஆசாத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்” என உணர்ச்சி வசப்பட்டார். மேலும், அந்த சுற்றுலாப்பயணிகளை குலாம் நபி ஆசாத் தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உதவி செய்தார் என பிரதமர் மோடி கூறும்போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். சிறிது நேரம் பேசமுடியாமல் பிரதமர் மோடி அமைதியாக நின்று பின்னர் தண்ணீர் அருந்தினார். தொடர்ந்து பேசிய அவர், “குலாம் நபி ஆசாத் எத்தனையோ பதவிகளை வகித்திருந்தாலும் அவருக்கு தலைக்கனம் இருந்தது இல்லை. ஒருமுறை நாடாளுமன்ற வளாகத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதை பத்திரிகையாளர்கள் பார்த்துவிட்டு நான் சென்றவுடன் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நாங்கள் ஒரு குடும்பமாக பழகி வருகிறோம் என்றும் நீங்கள்தான் அரசியல் ரீதியிலாக பல்வேறு செய்திகளை எழுதுகிறீர்கள் என்றும் கூறினார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து மற்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி பிரியாவிடை அளித்தார்.
http://dlvr.it/RsL6hR
http://dlvr.it/RsL6hR