`எம்.எஸ்.தோனி’ படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் சேர்ந்து நடித்தவர் சந்தீப் நஹர் (32). நடிகர் அக்ஷய் குமாருடன் `கேசரி’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் தூக்கில் தொங்கிய அவரை, அவரின் மனைவி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைச் சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர் தற்கொலைக்கு முன்பு நீண்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருக்கிறார் அவர். சந்தீப் நஹர்
அதோடு மிகவும் மனவேதனையோடு ஒரு வீடியோவையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், `நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். எனது தற்கொலைக்கு எனது குடும்பத்தில் யாரும் பொறுப்பு கிடையாது’ என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது ஃபேஸ்புக் பதிவில், `எனது மனைவியுடனான சண்டையால் வாழ்க்கையை வெறுத்துவிட்டேன். எனவே உயிருடன் இருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. நான் நல்ல நாள்கள் மற்றும் மோசமான நாள்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை என்னால் சமாளிக்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம் என்று எனக்கு தெரியும். நான் வாழ விரும்புகிறேன். ஆனால், மகிழ்ச்சி, சுயமரியாதை இல்லாமல் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
என் மனைவியும் மாமியாரும் என்னைப் புரிந்துகொள்ள முயலவில்லை. ஒவ்வொரு நாளும் நடக்கும் வாக்குவாதத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது தற்கொலைக்கு எனது மனைவி காரணம் இல்லை. அவர் நடந்துகொள்ளும் விதம் அவருக்குச் சாதாரணமாகத் தெரிகிறது. ஏனென்றால், அது அவரது இயற்கையான குணம். ஆனால், அது எனக்குச் சாதாரணமானதாக இல்லை. நான் மும்பையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். மோசமானவற்றைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நொடிந்துபோனது இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read: `எனை நோக்கிப் பாயும் தோட்டா', வெப்சீரிஸ் நடிகர் தற்கொலை... காரணம் என்ன?
போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு அவரின் மனைவியை அழைத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். சந்தீப், மும்பையின் மேற்கு பகுதியிலுள்ள கோரேகாவ் மேற்குப் பகுதியில் தனது மனைவி கஞ்சன், மாமியாருடன் வசித்துவந்தார். தற்கொலைக்கு முன்பு தனி அறையில் அமர்ந்து சந்தீப் மது அருந்திக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பின்னர் தூக்குப் போட்டுக்கொண்டார். அவரின் மனைவி அவரைத் தூக்கிக்கொண்டு முதலில் ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சையளிக்க மறுத்ததால் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எற்கெனவே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் என்ன காரணத்துக்காகத் தற்கொலை செய்தார் என்று இன்னும் போலீஸாரும், சி.பி.ஐ-யும் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர். தற்போது அவருடன் சேர்ந்து நடித்த சந்தீப் நஹரும் தற்கொலை செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
http://dlvr.it/Rsp4k4
http://dlvr.it/Rsp4k4