அதிமுகவினரை சசிகலா அழைக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது. அவர் அமமுகவினரைத்தான் அழைத்துள்ளார். சரத்குமார் - ராதிகா அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சியமைப்போம். பொது எதிரி திமுகவை வீழ்த்துவோம்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சசிகலாவை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், “‘நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. நான் 10 ஆண்டுகளாக சசிகலாவோடு பயணித்துள்ளேன். சசிகலாவுடன் அதிமுகவினரும் நல்ல உறவோடு இருந்திருக்கிறார்கள். அதை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.” என்றார்.
http://dlvr.it/RtNr5T
http://dlvr.it/RtNr5T