ஒவ்வொரு நாளும் மஸ்தான் துறைமுகத்துக்குள் செல்லும்போதும், ஷெர்கான் பதானின் அட்டூழியத்தை கவனித்தார். துறைமுகத் தொழிலாளியாக இல்லாத ஒருவர் உள்ளே வந்து தொழிலாள்ர்களை மிரட்டிப் பணம் வசூலிப்பதை முடிவுக்கு கொண்டுவர, மஸ்தான் திட்டம் தீட்டினார். எந்தவித வம்பு தும்புக்கும் போகாதவராக இருந்த நிலையில், தொழிலாளர்களுக்காக இந்தக் காரியத்தில் இறங்க மஸ்தான் முடிவு செய்தார். தொழிலாளர்களில் நல்ல வாட்டசாட்டமாக இருக்கும் சிலரைத் தேர்வு செய்தார். ஷெர்கானும் நம்மைப் போன்ற ஒரு மனிதன்தான் என்றும், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் ஷெர்கானை ஒழிக்க முடியும் என்றும் சொன்னார். தொழிலாளர்கள் அவர் பக்கம் நின்றனர். மும்பை
ஷெர்கான் Vs ஹாஜி மஸ்தான்
வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஷெர்கான் தொழிலாளர்களிடம் பணம் வசூலிக்க வந்தான். அவனுடன் நான்கு அடியாட்களும் வந்திருந்தனர். ஷெர் கான் வந்ததுதான் தாமதம், மஸ்தான் களத்தில் இறங்கினார். தான் சேர்த்திருந்த பத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து ஷெர்கானையும் அவனது அடியாட்களையும் அடித்து உதைக்க ஆரம்பித்தார். இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஷெர்கான். அவனிடம் கத்தி இருந்தது. ஆனால், அவனுடன் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். மஸ்தானோ பத்துப் பேருடன் இருந்தார். லத்தி மற்றும் இரும்பு செயின் போன்றவையும் இருந்தன. ஷெர் கானும் அவனுடைய அடியாட்களும் எதிர்த்துப் போராடினர். ஆனால் முடியாது என்ற ஒரு நிலை வந்தபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றனர். ஷெர் கான் காயத்துடன் தப்பிச் சென்றுவிட்டான். மீண்டும் திரும்பவே இல்லை. துறைமுகத்தில் அவனது தொந்தரவு இல்லாமல் போனது.
முதன்முறையாக அடிதடியில் இறங்கிய மஸ்தானின் இந்தச் செயலால் தொழிலாளர்கள் மத்தியில் அவரது மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. ஷேக்கும் மஸ்தானைத் தனது தொழில் பங்குதாரராக சேர்த்துக்கொண்டார். தங்கத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் எப்படி விற்பனை செய்து பணமாக்குவது என்ற தொழில் ரகசியத்தைக் கற்றுக்கொடுத்தார். அதைப் பயன்படுத்திக்கொண்ட மஸ்தான், தங்கக் கடத்தலிலும் வாழ்க்கையிலும் மளமளவென்று முன்னேறிக்கொண்டிருந்தார். 1952-ம் ஆண்டு மும்பை மாகாணத்தின் முதல்வராக இருந்த மொரார்ஜி தேசாய் திடீரென மது விற்பனைக்குத் தடைவிதித்தார். இந்தத் தடை அற்புதமான ஒரு வணிக வாய்ப்பைத் திறந்துவிட்டது. மதுக் கடத்தல்கார்ர்கள் கணிசமாக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டவர்களில் மஸ்தானும் ஒருவர்.மஸ்தான்
கள்ளச் சாராயம், தங்கக் கடத்தல்:
ஷேக்குடன் சேர்ந்துகொண்டு மஸ்தான் கள்ளச் சாராயம் மூலம் பணமழையில் நனைந்தார். இருசக்கர வாகனம் மற்றும் சொந்த வீடு வாங்கி, தான் எதிர்பார்த்திருந்த வாழ்க்கையை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்தார் மஸ்தான். ஆனால், எதிர்பாராத விஷயம் ஒன்று நடந்தது. மஸ்தானின் வளர்ச்சியில் முக்கியப் பங்குவகித்த ஷேக் கைதுசெய்யப்பட்டார். வரி ஏய்ப்பு மற்றும் தங்கக் கடத்தல் தொடர்பாக ஷேக்கை போலீஸார் கைதுசெய்தனர். மஸ்தானுக்கு பேரதிர்ச்சி. எனினும், மஸ்தானுக்கு இன்னுமொரு பிரகாசமான வாய்ப்பை ஷேக்கின் கைது உருவாக்கிக் கொடுத்தது. ஷேக் கைது செய்யப்பட்டதன் மூலம் அந்த இடத்துக்கு மஸ்தான் வரக்கூடிய வாய்ப்பு உருவானது.
ஷேக் சிறையிலிருந்த காலத்தில் மஸ்தான் தங்கக் கடத்தலில் தனக்கென தனிப் பாதையை ஏற்படுத்திக்கொண்டார். கடத்தல் என்றாலே மஸ்தான்தான் எனச் சொல்லுமளவுக்கு மும்பையில் செல்வாக்குடன் இருந்தார். பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யவும் மஸ்தான் தவறவில்லை. மூன்று ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியில் வந்த ஷேக், மிகவும் கஷ்டத்தில் இருந்தார். இருந்த பணமெல்லாம் வழக்குகளுக்குப் போய்விட்டது. இருந்த சொத்துகளை விற்றுவிட்டு சொந்த ஊரான துபாய் செல்வதா அல்லது குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டுவதா என்ற குழப்பத்திலிருந்தார். அந்தச் சமயத்தில் ஷேக்குக்கு வேறு வழியிருக்கவில்லை. மஸ்தானைச் சந்தித்துப் பேசினார். அப்போது மஸ்தான் அவருடைய தந்தை கற்பித்திருந்த நேர்மைக்கு உதாரணமான ஒரு விஷயத்தைச் செய்தார்.தங்கம்
தெற்கு மும்பையிலுள்ள மதன்புரா என்ற இடத்திலிருந்த பாழடைந்த ஒரு குடிசைக்கு ஷேக்கை அழைத்துச் சென்றார் மஸ்தான். அங்கு கிடந்த பழைய துணிகளையெல்லாம் அகற்றிவிட்டு, உள்ளே இருந்த ஒரு பெட்டியை மஸ்தான் ஷேக்குக்குக் காட்டினார். அதைத் திறந்தார் ஷேக். உள்ளே கண்ணைப் பறிக்கும் தங்க பிஸ்கட்கள்! ஷேக் கைதுசெய்யப்பட்டபோது தங்கக்கட்டிகள் அடங்கிய பெட்டி ஒன்றை ஷேக்கிடம் கொடுப்பதற்காக துறைமுகத்திலிருந்து மஸ்தான் வாங்கியிருந்தார். மஸ்தான் நினைத்திருந்தால் அந்த தங்க பிஸ்கட்கள் இருந்த பெட்டியைத் தானே வைத்துக்கொண்டு பணம் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், தனது தந்தை சொன்னபடி தொழிலில் நாணயம் வேண்டும் என்பதை மனதில்கொண்டு ஷேக்கின் தங்க பிஸ்கட்கள் இருந்த பெட்டியைத் திறக்காமல் அப்படியே வைத்திருந்தார். ஷேக்குக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மஸ்தானைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர்மல்கினார்.
`எப்படி போலீஸாரிடமிருந்து தங்கத்தைக் காப்பாற்றினாய்?’ என்று ஷேக் கேட்டார். பழைய துணிகள் போடப்பட்டிருந்த அறையை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அங்கு மறைத்துவைத்ததாக மஸ்தான் தெரிவித்தார். மொத்த வாழ்க்கையும் முடிந்துபோனதாக நினைத்த ஷேக்குக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. தன்னுடன் தொழில் பார்ட்னராக மஸ்தானும் சேர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் ஷேக். மஸ்தானும் அவரது அன்பு வேண்டுகோளைத் தட்ட முடியாமல் ஏற்றுக்கொண்டார். 1955-ம் ஆண்டு மஸ்தானுக்குக் கிடைத்த 50 சதவிகித தங்கத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் கிடைத்தது. தனது துறைமுகத் தொழிலாளர் வேலையை விட்டுவிட்டு முழுநேர கடத்தல்காரராக மாறினார் மஸ்தான். துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்ற ஷேக் தங்கத்தை அனுப்பிக்கொண்டிருந்தார். மும்பையில் வரி கட்டாமல் துறைமுகத்திலிருந்து வெளியில் எடுத்து வந்து அந்தத் தங்கத்தை விற்பனை செய்தார் மஸ்தான்.மஸ்தானின் 8 வயது கனவு வாழ்க்கை கைக்கெட்டியது. ஆடம்பர காரில் வலம்வந்த மஸ்தான் எப்போதும் சிகரெட்களை புகைத்துக்கொண்டே இருப்பார்.
கடத்தல் தொழிலிலும் நேர்மை
செய்வது கடத்தல் தொழிலாக இருந்தாலும், அதில் நேர்மை இருக்க வேண்டும் என்று மஸ்தான் விரும்பக்கூடியவர். கடத்தலுக்காக யாருக்கும் அவர் துரோகம் செய்தது கிடையாது. இதனாலேயே கடத்தல்காரர்கள் மத்தியில் மஸ்தானுக்கு நல்ல பெயர் கிடைத்தது. பணமும் கொட்ட ஆரம்பித்தது. சிறிய அளவில் தங்கம் கடத்திக்கொண்டிருந்த மஸ்தான், ஷேக் வெளிநாட்டிலிருந்து தங்கம் அனுப்ப ஆரம்பித்த பிறகு இந்தியா முழுக்கத் தொழிலை விரிவாக்கினார். மும்பையிலிருந்து இந்தியா முழுக்க தங்கத்தை அனுப்ப ஆரம்பித்தார். குஜராத் அருகிலுள்ள தாமன் துறைமுகம் வழியாகவும் தங்கம் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
1956-ம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய தங்கக் கடத்தல்காரராக இருந்த சுகுர் நாராயண் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் கடத்தலில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்வது என்று முடிவு செய்துகொண்டனர். மும்பை துறைமுகத்துக்கு வந்து இறங்கும் சுகுரின் கடத்தல் பொருள்களை மஸ்தான் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவார். தாமன் துறைமுகத்தில் வந்து இறங்கும் மஸ்தானின் பொருள்களை சுகுர் பத்திரமாக வெளியில் கொண்டு வந்தார். இருவரும் கடத்தல் தொழிலை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு செயல்பட்டனர். மஸ்தானுக்கு போதுமான அளவுக்குப் பணம் வந்தது. ஆனால் மும்பையில் பெரிய ஆளாக இருக்க, பணம் மட்டும் போதுமானது இல்லை. மும்பையில் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கரீம் லாலா மற்றும் வரதராஜ முதலியார் ஆகியோரிடம் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக்கொண்டார். ஒருபோதும் யாரையும் கொலை செய்யும் அளவுக்கு மஸ்தான் சென்றது இல்லை. கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ கையில் எடுத்தது கிடையாது. அதேசமயம், மும்பையில் நடந்த அனைத்துக் கடத்தல்களுக்கும் மூல காரணமாக மஸ்தான் இருந்தார். மாஃபியாக்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளிடமும் நல்ல தொடர்பில் இருந்தார் மஸ்தான்.பால் தாக்கரே
சஞ்சய் காந்தி அடிக்கடி மஸ்தானை வந்து பார்ப்பார். சிவசேனா தலைவர் பால் தாக்கரேவிடமும் மஸ்தானுக்கு நல்ல தொடர்பு இருந்தது. இதை அவருடைய வளர்ப்பு மகனான சுந்தர் சேகர் ஒருமுறை உறுதிபடுத்தினார். பால் தாக்கரே மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நல்ல தொடர்பு இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மஸ்தான் ஏதாவது வேலையாக மும்பையிலுள்ள தலைமைச் செயலகமான மந்த்ராலயா சென்றால், அனைத்து ஊழியர்களும் தங்களது வேலையைப் போட்டுவிட்டு அவரைப் பார்க்கக் கீழே இறங்கி வந்துவிடுவார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் மஸ்தான் கடத்தல் தொழில் செய்கிறார் என்று தெரிந்தாலும் அவரை ஒருபோதும் கைதுசெய்ததில்லை.
ஏழைகளின் நாயகன்
ஹாஜி மஸ்தானுக்குப் பணம் மழையாகக் கொட்ட ஆரம்பித்த பிறகு ஏழைகளுக்கு அதிக அளவில் தானம் செய்தார். தினமும் அவரது வீட்டில் ஏராளமானோர் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக் கேட்டு காத்து நிற்பார்கள். மஸ்தான், ஒரு ராபின் ஹுட் போல் செயல்பட்டு வந்தார். மும்பையில் மஸ்தான் கடத்தல், கள்ளச் சாராயம் போன்றவற்றில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருந்தார். அவரின் வழியில் மற்ற மாஃபியாக்களான வரதாபாய், கரீம் லாலா ஆகியோர் குறுக்கிடவில்லை. அதோடு மஸ்தான் எதையும் அன்பால் சாதிக்கக்கூடியவராகவே இருந்தார். எந்த ஒரு சமாதானப் பேச்சுவார்த்தையாக இருந்தாலும் மஸ்தான்தான் முன்னின்று நடத்திவந்தார்.
Also Read: நிழலுலக ராஜாக்கள்: ஹாஜி மஸ்தான் - மும்பையை ஆண்ட ஒரு தமிழன் | பகுதி 1
சமாதானத்தை முன்னிறுத்திய மஸ்தான், வன்முறைக்குத் துணை போக வேண்டிய நேரம் வெகு விரைவிலேயே வரவிருந்தது. அதற்கு முக்கியமான ஒரு நபரின் அறிமுகமும் கிடைக்கவிருந்தது.
(தொடரும்)
- மும்பையிலிருந்து நமது நிருபர்
http://dlvr.it/Rxjm6Q
http://dlvr.it/Rxjm6Q