மும்பை அருகிலுள்ள டோம்பிவலியில், பலவா சிட்டி என்ற ஒர் ஆடம்பரக் குடியிருப்பு வளாகம் இருக்கிறது. இந்தக் குடியிருப்பு வளாகத்திலுள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இரண்டு படுக்கையறைகொண்ட வீட்டில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மண் இல்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்ப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை பரேலில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கணேஷ், அமீன் ஆகிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது டோம்பிவலியில் வீட்டில் கஞ்சா வளர்ப்பதாக போலீஸாருக்குத் தெரியவந்தது. ரேஹன் கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு படுக்கை அறைகொண்ட வீட்டில் ஜாவேத் ஜஹாங்கிர் ஷேக், அர்ஷத் இருவரும் சேர்ந்து மண்ணில்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் யாருக்கும் தெரியாமல் கஞ்சா வளர்த்துவந்தனர். ஜாவேத்
இதில் ஷேக்குக்கு ஹைட்ரோபோனிக் முறையில் செடிகளை வளர்க்கத் தெரியும். அர்ஷத் அப்படி வளர்க்கப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்யும் தொழிலைச் செய்துவந்தார். போலீஸார் திடீரென இவர்களின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் வாட்டர் பம்ப், பி.ஹெச்.ரெகுலேட்டர், தாவரங்களுக்கான உணவு போன்ற ஹைட்ரோபோனிக் முறையில் செடிகளை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா வளர்ப்பதற்குத் தேவையான விதைகளை ஆம்ஸ்டர்டாம் மற்றும் நெதர்லாந்தின் இதர நகரங்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். பொதுவாக ஒரு விதை 10 முதல் 15 டாலருக்க்கு கிடைக்கும். ஆனால் இவர்கள் ஒரு விதையை கள்ளச்சந்தையிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இதற்கு பிட்காயின்களையும், அமெரிக்க டாலரையும் கொடுத்துள்ளனர். வீட்டில் விளையும் கஞ்சா செடிகளை சமூக வலைதளம் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடி விற்பனை செய்துவந்தனர். ஹைட்ரோபோனிக் முறையில் விளைவிக்கபட்ட கஞ்சாவை ஒரு கிராம் 8,000-லிருந்து 10,000-க்கு விற்பனை செய்துள்ளனர். அவர்களது வீட்டிலிருந்து 80 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொழிலைக் கடந்த ஒரு வருடமாகச் செய்துவருவதாகத் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் வேலை இல்லாததால் வீட்டிலேயே வேலை செய்யலாமென்று கருதி இதைச் செய்துள்ளனர். ரேஹன் கான் சவுதி அரேபியாவில் இருக்கிறார். அவர்தான் இந்தத் தொழிலுக்கு தேவையான நிதியுதவி செய்து வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கஞ்சா
இதற்கு முன்பு மும்பை செம்பூரில் நிகில் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 2019-ம் ஆண்டு ஹைட்ரோபோனிக் முறையில் வீட்டிலேயே கஞ்சா பயிரிட்டு பிடிபட்டார். அவர் இன்டர்நெட்டில் பார்த்து தனது வீட்டில் கஞ்சா வளர்த்ததாகப் பின்னர் விசாரணையில் தெரியவந்தது. மும்பை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாக இருப்பதோடு, போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் மும்பை டோங்கிரியில் தாவூத் இப்ராஹிம் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் கூட்டாளி போதைப்பொருள் தொழிற்சாலை நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடக்கும் பார்ட்டிகளில் சப்ளை செய்வதற்கான போதைப்பொருள் இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இதில் இளம்பெண் ஒருவரும் தொடர்புகொண்டிருந்தார். அவரையும் போலீஸார் பொறிவைத்து, கைதுசெய்துள்ளனர். சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் ஆஜராகிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rxs75s
http://dlvr.it/Rxs75s