மும்பை அருகில் உள்ள வாங்கினி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை ரயில்வே ஊழியர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் 6 வயது சிறுவனை ரயிலில் அடிபடாமல் காப்பாற்றிய சம்பவம் இந்தியா முழுக்க பெரிய அளவில் பேசப்படுகிறது. சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேயின் செயலை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், தொழிலதிபர் அதானி என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ரயில்வே அமைச்சகம் மயூர் ஷெல்கேயின் துணிச்சலான செயலை பாராட்டி ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி இருக்கிறது. அந்த பணத்தில் 50 சதவீதத்தை தான் காப்பாற்றிய சிறுவனுக்கும், கண் தெரியாத அவனது தாயாருக்கும் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் மயூர். அவரின் இந்த துணிச்சலான செயல் குறித்து கேட்டு தெரிந்து கொள்வதற்காக வாங்கனி ரயில் நிலையத்தில் மயூர்ஷெல்கேயை சந்தித்து பேசினோம். அப்போது அவர் கூறுகையில், ``நான் சம்பவத்தன்று ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்திற்கு கீழே ரயிலுக்கு சிக்னல் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். அந்த நேரம் கண்பார்வையற்ற பெண் தனது 6 வயது சிறுவனுடன் பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பிளாட்பார ஓரத்தில் நடந்து சென்றதால் சிறுவன் கால் தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டான். அவன் தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்தில் ஏற முயன்றான். ஆனால் அவன் மிகவும் சிறியவனாக இருந்ததால் முடியவில்லை. அந்நேரம் மெயில் ஒன்று அதே தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. நான் நின்ற இடத்தில் இருந்து 60 மீட்டர் தூரத்தில் சிறுவன் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தான். மயூரை பாராட்டும் அரசியல்வாதிகள்
இந்த நேரத்தில் ரயிலுக்கு சிவப்பு சிக்னல் கொடுத்து வண்டியை நிறுத்தவும் முடியாது. எனவே என்ன விலை கொடுத்தேனும் சிறுவனை காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்து சிறுவனை நோக்கி ஓடினேன். ஆனால் பாதி வழியில் செல்லும் போது ரயில் மிகவும் நெருங்கிவிட்டதால் என்னை பயம் தொற்றிக்கொண்டது. ஆனாலும் துணிச்சலுடன் சிறுவனை தூக்கி பிளாட்பாரத்தில் போட்டுவிட்டு நானும் குதித்து பிளாட்பாரத்தில் ஏறிவிட்டேன். சில நொடிகள் தாமதித்து இருந்தாலும் நான் தப்பித்து இருக்க முடியாது. பிளாட்பாரத்தில் சிறிது நேரம் என்ன நடந்தது என்ற சுயநினைவுவே இல்லாமல் இருந்தேன். 15 நிமிடத்திற்கு பிறகுதான் ஓரளவு சுயநினைவுக்கு வந்தேன். சிறுவனை காப்பாற்றிவிட்டதாக எல்லோரும் என்னை பாராட்டினர். நான் சிறுவனை காப்பாற்றிவிட்டேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை. சிறுவனை காப்பாற்றவே நான் அங்கு நின்றதாக கருதுகிறேன்.
சிறுவனின் தாயார் கண்பார்வையற்றவர் என்பதால் எனக்கு ரயில்வே கொடுக்கும் பரிசுப்பணத்தில் 50 சதவீதத்தை சிறுவனுக்கும் அவனது தாயாருக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளேன்” என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். சிறுவன் சாஹிலை அவனது தாயார் ரயில் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வந்திருந்தார். அச்சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக சேவகர்கள் நேரில் சந்தித்து பண உதவி மற்றும் பரிசுகளை வழங்கி வருகின்றனர். ராஜ் தாக்கரே கட்சியை சேர்ந்த ஒருவர் அச்சிறுவனின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
சிறுவனின் தாயார் சங்கீதாவிடம் இது குறித்து கேட்டதற்கு, ``எனது மகனுக்கு மறுபிறவி கிடைத்துள்ளது. இந்த மறுபிறவியை மயூர் சார்தான் கொடுத்துள்ளார். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எனது மகன் பிறந்த சில நாட்களில் எனது கணவர் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதிலிருந்து எனது மகனுடன் நான் தனியாகத்தான் இருக்கிறேன். புறநகர் ரயில்களில் சிறுசிறு பொருட்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்துகிறேன்” என கண்ணீர் மல்க தெரிவித்தார். காப்பாற்றிய சிறுவன், அவரின் தாயாருடன் மயூர்
ரயில் நிலையத்திற்குள் ரயில் வரும் போது 105 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய வினோத் குமார் இது குறித்து கூறுகையில், ``ரயில் வாங்கினி ரயில் நிலையத்தை நெருங்கிய போது தண்டவாளத்தில் சிறுவன் ஒருவன் நிற்பதை கவனித்தேன். அதோடு அவனை காப்பாற்ற ஒருவர் ஓடி வந்தார். அதனை பார்த்தவுடன் ரயிலின் வேகத்திற்கு குறைக்க பிரேக் போட்டேன். இதனால் 105 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ரயில் ரயில் நிலையத்திற்குள் வரும் போது 85 கிலோமீட்டர் வேகத்திற்கு மாறியது. இதனால் சிறுவனை காப்பாற்றிய மயூருக்கு தன்னை காப்பாற்றிக்கொள்ள சில விநானடிகள் கூடுதலாக கிடைத்திருக்கும்” என்றார். அரசியல்வாதிகள் போட்டோ எடுக்கும் போது தெரிவிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் சிறுவன் மூலம் அவனின் தாயாருக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
http://dlvr.it/RyGwrc
http://dlvr.it/RyGwrc