கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா என்ற ஊரைச் சேர்ந்தவர் சித்திக் காப்பன். பத்திரிகையாளரான இவர், கேரளா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க ஹத்ராஸ் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பனை, உத்தரப் பிரதேச போலீஸார் கைது செய்தனர்.ஹத்ராஸில் கொல்லப்பட்ட பெண்
அவருடன் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்த மூன்று பேர் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் சித்திக் காப்பனுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றம்சாட்டி அவரை மதுரா சிறையில் அடைத்தனர். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) பாய்ந்தது.
சித்திக் காப்பன் குற்றமற்றவர் என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேரளா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கோரியது. அது தொடர்பாக, அந்த சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு கடந்த நவம்பரில் விசாரணைக்கு வந்தபோது, சித்திக்கை சிறையில் சந்திப்பதற்கு அவரின் வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, சித்திக்கை அவரின் வழக்கறிஞர் சிறையில் சந்தித்தார். அப்போது, அவர்களுக்கு இடையிலான அரை மணி நேர உரையாடல் குறித்த பிரமாணப் பத்திரத்தில், “கடந்த அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் சித்திக் காப்பனை மூன்று முறை காவலர்கள் தாக்கினர். மூன்று முறை கண்ணத்தில் அறைந்து, அவரை இழுத்துச்சென்றனர். அவரை உளவியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டது.யோகி ஆதித்யநாத்
உ.பி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “சித்திக் காப்பான், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகச் செயலாளர். கேரளாவைச் சேர்ந்த தேஜஸ் என்ற பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி அடையாள அட்டையை அவர் காண்பித்தார். ஆனால், அந்த நிறுவனம் 2018-ம் ஆண்டிலேயே மூடப்பட்டுவிட்டது” என்று குறிப்பிடப்பட்டது. கேரளா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சித்திக் காப்பன் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகச் செயலாளர் என்ற குற்றச்சாட்டு மறுக்கப்பட்டது.
சித்திக் காப்பனின் மனைவியான ரைஹாந்த் காப்பன். தன் கணவரை விடுதலை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், தன் கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் தலைமைச்செயலகம் எதிரே தர்ணா போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார். அவருடன், சித்திக்கின் மூன்று பெண் குழந்தைகள், சித்திக்கின் சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் உறவினர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.பினராயி விஜயன்
“என் கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவரை பல மாதங்களாக சிறையில் அடைத்துவைத்துள்ளனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசி, என் கணவரை விடுதலை செய்வதற்கான முயற்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொள்ள வேண்டும்” என்று என்று ரைஹாந்த் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். இந்த நிலையில், சித்திக் காப்பன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மதுராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் இரும்பு சங்கிலியால் கட்டிலுடன் சித்திக் பிணைத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
“என் கணவர் தவறு செய்திருந்தால், அதற்கான ஆதாரத்தை உ.பி போலீஸ் தாக்கல் செய்யப்பட்டும். எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் அவரை சிறையில் அடைத்துவைத்திருக்கிறார்கள். என் கணவர், ஏப்ரல் 20-ம் தேதி சிறையில் மயங்கிவிழுந்திருக்கிறார். அதில் அவருக்கு முகத்திலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மறுநாள் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதைடுத்து, மதுராவில் உள்ள கே.எம்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். சிறுநீர் கழிப்பதற்கு ஒரு பாட்டில் கொடுத்திருக்கிறார்கள். அவர் ஒரு மனிதர் இல்லையா. கழிப்பறைக்கு செல்லக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.
அவரது உடல் நிலை குறித்து சிறை அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. கடந்த வாரம் ஒரு நாள் அவரிடம் தொலைபேசியில் பேசினேன். என்னால் அவரிடம் இரண்டு நிமிடங்கள்தான் பேச முடிந்தது. அதன் பிறகுதான், அவரது உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள முடிந்தது. அவர் சாதாரண வார்டில் இருக்கிறாரா, ஐ.சி.யூ-வில் இருக்கிறாரா என்பதுகூட எனக்கத் தெரியவில்லை. அதைக் கேட்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது” என்று ரைஹாந்த் காப்பன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.என்.வி.ரமணா
இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மருத்துவமனையில் என் கணவர் ஒரு மனிதராகவே நடத்தப்படவில்லை. ஒரு விலங்கைப் போல நடத்துகிறார்கள். கட்டிலுடன் அவரை ஒரு இரும்புச்சங்கிலியால் பிணைத்துவைத்துள்ளனர். அவரால் சாப்பிட முடியவில்லை... கழிப்பறைக்கு செல்ல முடியவில்லை. அவரது உடல்நிலை மிக மோசமான நிலையில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். தங்கள் குடும்பத்தினரால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஆறு மாதங்களாக கிடப்பில் இருக்கிறது என்பதையும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: ஆக்ஸிஜன் அரசியல்... என்னதான் நடக்கிறது?
தற்போது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “சித்திக் காப்பனுக்கு நீரிழிவு நோயும் இதயக் கோளாறுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் கொரோனா தொற்றுக்கு ஆளான பிறகு, மதுராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை மிக மோசமாக இருக்கும் நிலையிலும்கூட, அவர் கட்டிலுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு நிபுணத்துவத்துடன்கூடிய மருத்துவ சிகிச்சை அவசியப்படுகிறது.மேலும், உயிர் காக்கும் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மற்றொரு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டிய அவசியமும் இருக்கிறது” என்று பினராயி விஜயன் குறிப்பிட்டிருக்கிறார்.உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில், உபா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட சித்திக் காப்பன் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறும், இடைக்கால நிவாரணம் வழங்குமாறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கேரளாவைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சித்திக் காப்பனுக்கு உடனடியாக தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கவில்லையென்றால், அவர் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக அவரின் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கிறார்கள்.
http://dlvr.it/RyVXmY