நன்னீரில் நெல் சாகுபடி பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உப்புத் தண்ணீரில் நெல் சாகுபடி பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். கேரளத்தில் உப்புத் தண்ணீரில் சாகுபடி செய்வதற்கென்றே பிரத்யேகமான ஒரு நெல் ரகம் இருக்கிறது. கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், ஆலப்புழை, திருச்சூர் மாவட்டங்களில் காணப்படும் மூவாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு நெல் வகை பொக்காளி ஆகும். உப்புத் தண்ணீரில் வளரும் இந்த நெல் வகை சுமார் 6 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. சாதாரண நெல் ரகங்களைவிட உயரமாகவும், பல வேறுபாடுகளை உடைய ஒரு நெல் ரகமாகவும் விளங்குகிறது இந்தப் பொக்காளி நெல்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காட்டு நெற்புல்லாக இருந்து வந்த ஒரு தாவரம், மழை வெள்ளத்தில் கடலோரப் பகுதிக்கு வந்தடைந்தது. பின்னர், அங்கு நிலவும் உப்பு நீர் மற்றும் சூழலை ஏற்று வளரத் தொடங்கியது.ஆட்களால் அறுவடை
பின்னர், அதுவே தற்போது சுமார் பன்னிரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பொக்காளி நெல் விவசாயமாக இருந்து வருகிறது. கேரளத்தில் மத்திய பகுதியில் மட்டுமே காணப்படும் இந்த நெல், பிற பகுதிகளில் சிலருக்கு பெயரளவில் கூட அறிமுகம் இல்லை. கேரளத்தை விட்டு வெளி மாநிலங்களில் இதைக் குறித்து யாவரும் அறிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.
இந்த நெல் மழைக்காலமான ஜூலை முதல் நவம்பர் வரை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. 120 நாட்கள் வயது கொண்டது. நெற்பயிர் வளர்ந்து நிற்கும்போது நிலத்தில் தண்ணீர் நின்றால்கூட (பயிர் 5, 6 அடி உயரத்துக்கு இருக்கிறது என்றால் நீர்மட்டம் 4, 5 அடி இருக்கும் நிலையில்கூட) மகசூல் நன்றாகக் கொடுக்கும் தன்மை கொண்டவை. மழைக் காலங்களில் நீரின் உப்புத் தன்மை குறைந்து காணப்படும். எனவே, அந்தக் காலமே இந்த நெல் ரகம் சாகுபடிக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
அதன் பின்னர் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இறால் வளர்ப்பு நடைபெறுகிறது. ஏப்ரல் மாதத்தில் ஒரு முறை நீர் வெளியேற்றப்பட்டு, நிலம் காயப்போடப்படுகிறது. இதன் மூலம் நிலத்தில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியேறி உப்புத் தன்மை குறைகிறது. பின்னர், நிலம் அடுத்த நெல் சாகுபடிக்கு தயார் செய்யப்படுகிறது. சாகுபடியின்போது எந்த விதமான வேதிப்பொருள்களும் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கக முறையில் (ஆர்கானிக்) வளர்க்கப்படுகிறது. அறுவடையின்போதும் நீரின் மட்டம் உயர்ந்திருந்தால்கூட விளைச்சல் கொடுக்கும்.
அறுவடைக்கு இயந்திர தேவை அதிகமாகவே இருந்து வருகிறது. எனினும், குறைந்த இயந்திரங்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. சாதாரண நெல்லைவிட மாறுபட்டச் சூழலில் இருக்கும் இந்த நெல் சாகுபடியில், வழக்கமான நெல் இயந்திரங்கள் கை கொடுப்பதில்லை. தனி ரகமான இயந்திரங்களே பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது.உப்புத் தண்ணீர்
இயந்திரம் இல்லாத காரணத்தாலும், தொழில் மயமாதல், பறவைகளின் தாக்குதல், மீன் வளர்ப்பு ஆகிய காரணங்களாலும் பொக்காளி நெல் சாகுபடி குறைந்து காணப்படுகிறது. அரசாங்கமும், வேளாண் துறையும், தொண்டு நிறுவனங்களும் பொக்காளி நெல் சாகுபடியை அதிகப்படுத்த இயன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன.
பொக்காளி நெல்லிலிருந்து வரும் அரிசியின் சுவையும் மணமும் அந்தப் பகுதி மக்களால் பெரிதும் நினைவுகூரப்படுகிறது. இந்த நெல்லில் கிடைக்கும் அரிசியில் உள்ள புரதச்சத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம்ம ஊர் மாப்பிள்ளைச் சம்பாவுக்கு இணையானது. மேலும் பல சத்துகளை உடைய உணவாகவும் விளங்குகிறது. அறுவடை முடிந்த சில காலங்களே இது பொது மக்கள் வாங்க சந்தையில் கிடைக்கிறது. விளைச்சல் குறைவின் காரணமாகவும், தேவையின் காரணமாகவும் பற்றாக்குறையே நிலவுகிறது. எனவே, விவசாயிகள் இதைச் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பார்க்க முடியும்.
உப்புத்தன்மை கொண்ட நீரிலும் சாகுபடி செய்ய பாரம்பர்ய நெல் ரகங்கள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே இந்த நெல் ரகம் பற்றியான தகவலைச் சொல்லி இருக்கிறேன். கடல் நீர் உட்புகுதல், இயற்கை விவசாயம், சுழற்சி முறை சாகுபடி ஆகிய விஷயங்கள் நமக்கும் பொதுவானவை. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள இயலும் என்று சிந்திப்பதே மேலான காரியம். இது போல நாட்டின் பல பகுதிகளில், தமிழகத்திலும் கூட பாரம்பர்ய நெல் சாகுபடி இருந்து வருகிறது.சாகுபடி வயல்
இந்தப் பொக்காளி நெல் ரகம் குறித்து கேரளாவின் தணல் அமைப்பின் திட்ட இயக்குநர் ஶ்ரீதரனிடம் பேசியபோது, ``உப்பு தண்ணீரில் விளையும் நெல் ரகம் என்பதற்காக இதை உப்புத் தண்ணீர் இருக்கும் எல்லா இடங்களிலும் விளைவித்து விட முடியாது. கொச்சி, எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் கடல் நீர் உள்ளே நுழையும் இடங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இந்த விவசாய முறைக்கே பொக்காளி முறை என்றுதான் பெயர். அந்தப் பெயரிலேயே நெல் ரகமும் அழைக்கப்படுகிறது. இந்தப் பயிர் வளர்ந்தால் தண்ணீருக்கு மேல் கதிர்கள் வெளியே தெரியும். படகில் சென்று அறுவடை செய்வதும் உண்டு. பிராக்கிஷ் வாட்டர் (brackish water) என்றழைக்கப்படும் உவர் நீர் உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது” என்றார்.
- சி.ரத்தினவேல்
முதுகலை தொழில்நுட்ப மாணவர் (எம்.டெக்),
பண்ணை இயந்திரவியல் மற்றும் ஆற்றல் பொறியியல் துறை,
கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம், மலப்புரம், கேரள மாநிலம்.
http://dlvr.it/Rz3Zw1