தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கொரோனா பரவல் காரணமாக சென்னை கிண்டி ராஜ்பவனில் இதற்கான பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகை வருகை தந்தார். பின்னர் பதவியேற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அத்துடன் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும்..’ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார் ஸ்டாலின். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவி பிரமாணம் ஏற்று வருகின்றனர். இந்த விழாவில் திமுக எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்ய இருக்கிறார். மறைந்த திமுக நிர்வாகி சிட்டி பாபுவின் இல்லத்திற்கு சென்று அவரின் உருவ படத்திற்கும் மரியாதை செய்ய உள்ளார். தொடர்ச்சியாக கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற இருக்கிறார் மு.க.ஸ்டாலின். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும்...’ > கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியினருக்கு 1953-ல் பிறந்தார். > சோவியத் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக தந்தை கருணாநிதியால் சூட்டப்பட்ட பெயர்தான் 'ஸ்டாலின்'. > 14 வயதிலேயே அரசியல் ஆர்வம் தென்படத் தொடங்கியது. சென்னை - கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். > சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றார். > மேடை நாடகங்கள், சில திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடரிலும் நடிகராக வலம் வந்தவர். > 1968-ல் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவுக்காக பரப்புரையில் ஈடுபட்டார். > 1973-ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார். > 1976-ல் அவரச நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடும் சித்ரவதைக்கு ஆளானார். அதன்பின் திமுகவினர், மக்கள் மத்தியில் அறிமுகமும் மதிப்பும் கூடியது. > திமுகவில் தொடங்கப்பட்ட இளைஞரணியில் ஓர் அமைப்பாளராக 1982-ல் நியமிக்கப்பட்டார். பின்னர், அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் ஆனார். > 1984-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முறையாக களம்கண்டார். ஆனால், வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் 1989, 1996, 2001, 2006-ல் அதே தொகுதியில் வெற்றிகண்டார். இடையே 1991-ல் மட்டும் தோல்வி கண்டார். > 1996, 2001-ல் சென்னை மாநகராட்சி மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல மேம்பாலங்களை கட்டி, நகரின் உள்கட்டமைப்பை பலப்படுத்தினார். > 2003-ல் திமுக துணைப் பொதுச் செயலாளரார் ஆனார். > 2008-ல் கட்சியின் பொருளாளராக தேர்வானார். > 2009-ல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதன்மூலம் 'தமிழகத்தின் முதல் துணை முதல்வர்' எனும் சிறப்பு பெற்றார். > 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். > 2017-ல் திமுக செயல்தலைவர் ஆனார். > தலைவரும் தந்தையுமான கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, 2018-ல் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். > இவர் தலைமையில் 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், 39-ல் திமுக வெற்றிபெற்றது. > 2019-ல் இருந்து திமுக தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். > இவர் தலைமையில், நடந்து முடிந்த 2021 தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். > மே 7, 2021-ல் தமிழக முதல்வராக பதவியேற்றார்.
http://dlvr.it/RzFWmQ
http://dlvr.it/RzFWmQ