நாட்டிலேயே அதிக கொரோனா தொற்றை கொண்டிருந்த மகாராஷ்டிரா இப்போது படிப்படியாக அதிலிருந்து விடுபட்டு வருகிறது. மும்பை ஓரளவுக்கு கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் பலர் மருந்து கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் தம்பதி ஒன்று உதவி செய்து வருகிறது. டாக்டர் மார்கஸ் ரேன்னியும், அவரது மனைவி டாக்டர் ரெய்னாவும் சேர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் மருந்தை வாங்கி தேவைப்படும் ஏழை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். டாக்டர் தம்பதி
இது குறித்து டாக்டர் மார்கஸ் கூறுகையில், ``கொரோனா பாதித்து சிகிச்சை முடிந்தவர்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் மருந்தை வாங்கி தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கும் திட்டத்தை கடந்த ஒன்றாம் தேதியில் இருந்துதான் தொடங்கினோம். குடியிருப்பு கட்டடங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கொரோனா மருந்தை சேகரித்து அதனை தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து வருகிறோம்” என்றார்.
இது குறித்து டாக்டர் ரெய்னா கூறுகையில், ``என்னிடம் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களுக்கு மருந்து தேவைப்பட்டது. ஆனால் கொரோனா சிகிச்சை மருந்துகள் அதிக கட்டணத்தில் விற்கப்படுகிறது. அந்நேரம் கொரோனாவில் இருந்து சிலர் குணமடைந்தனர். உடனே அவர்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் மருந்தை வாங்கி கொடுக்க முடிவு செய்தோம். அதன் பிறகு பக்கத்து கட்டடங்களில் வசிக்கும் 8 பேரின் உதவியுடன் தனி கமிட்டி ஒன்றை அமைத்து வெளியில் மருந்து வாங்க முடியாத கொரோனா நோயாளிகளுக்கு இம்மருந்தை வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்தார். இத்தம்பதி கடந்த 10 நாட்களில் இதுவரை 20 கிலோவுக்கும் அதிகமான மருந்தை சேகரித்துள்ளனர்.
இம்மருந்துகள் அனைத்தும் கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வழங்கப்படும். தற்போது 100 குடியிருப்பு கட்டடங்களுடன் டாக்டர் தம்பதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இக்கட்டடங்களில் யாருக்காவது கொரோனா ஏற்பட்டு குணமடைந்திருந்தால் அவர்கள் பயன்படுத்தாமல் இருக்கும் மருந்தை நேரடியாக டாக்டர் தம்பதிக்கு அனுப்பி விடுகின்றனர். இதுவரை சேகரித்த மருந்தை பேக்கிங் செய்து தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளனர். இந்த சேவை திட்டத்திற்கு மெட்ஸ் பார் மோர் என்று பெயரிட்டுள்ளனர். மருந்து மட்டுமல்லாது கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களையும் சேகரித்து வருகின்றனர்.
இதே போன்று மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொரோனா பாதித்தவர்களை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து செல்கிறார். கொரோனா ஆரம்பித்ததில் இருந்து இது வரை 15 ஆயிரம் பேரை தனது ஆட்டோவில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக ஜிதேந்திர ஷிண்டே தெரிவித்துள்ளார். அதில் ஆயிரம் பேர் கொரோனா அறிகுறியுள்ளவர் என்றும் அவர் குறிப்பிட்டார். ``கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஓட்டுவதால் என்னிடம் யாரும் வரவே பயப்படுவார்கள். எந்த நோயாக இருந்தாலும் அவர்களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன். இதற்கான தினமும் எனக்கு போனில் அழைப்பு வந்துகொண்டேதான் இருக்கிறது. ஆட்டோ டிரைவர் ஷிண்டே
நாட்டில் முதல் முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட 2020 மார்ச் 24ம் தேதியில் இருந்து இப்பணியை செய்து வருகிறேன். மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்று சொல்பவர்களிடம் முதலில் என்ன பிரச்னை என்று கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வேன். 70 கர்ப்பிணி பெண்களை ஒரு ஆண்டில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளேன்” என்று தெரிவித்தார். இலவமாக ஆட்டோ ஓட்டுவதோடு மட்டுமல்லாமல் தேவைப்படும் நோயாளிகளுக்காக இதுவரை தனது சொந்த பணம் 1.50 லட்சத்தையும் செலவு செய்து இருப்பதாக குறிப்பிட்டார். யாரும் எனக்கு உதவி செய்வதில்லை. நானும் எதிர்பார்ப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://dlvr.it/RzVXph
http://dlvr.it/RzVXph