'கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுங்கள்' என மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்கள் கங்கை யமுனை உள்ளிட்ட ஆறுகளில் வீசப்படுவது சம்பந்தமான செய்திகளும் வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் எரிப்பதற்கு போதிய இடங்கள் இல்லாமல் உடல்கள் ஒன்றாக குவிக்கப்பட்டு இருப்பதும் சாலைகள் பூங்காக்களில் எரிக்கப்பட்டு வந்த சம்பவங்களும் நாடு முழுவதும் நிகழ்ந்தது. தொடர்ச்சியான இப்படியான சம்பவங்களை தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதில் தற்பொழுது கவனம் செலுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, உடல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம். அதில், * சடலங்கள் வரிசையாக காத்திருப்பதை தடுக்க தாற்காலிக தகன மேடை அமைக்க வேண்டும். * இடுகாடு /எரியூட்டும் மேடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரொனாவால் இறந்தவரின் சடலங்களை கையாள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். * சடலங்களை தொடாமல் நடைபெறும் மதசடங்குகளை நடத்த அனுமதி அளிக்கலாம். மத நூல்களில் இருந்து வசனம் வாசிக்கவும், புனித நீர் தெளிக்கவும் அனுமதிக்கலாம். * இறந்தவரின் உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய முடியாதபோது அவரின் மத, கலாச்சார அம்சங்களை கருத்தில் கொண்டு மாநில/ உள்ளாட்சி நிர்வாகங்கள் அதனை மேற்கொள்ள வேண்டும். * மின்மயானங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிந்தவரை புகை இல்லாத வகையில் உடல்களை எரிக்கும் முறையை பின்பற்ற வேண்டும். இதன் மூலமாக புகையின் மூலமாக ஏற்படும் பிரச்சனைகள் தீர்வு காணப்படும். * இறந்தவரின் கண்ணியத்தை மீறும் வகையில் மொத்தமாக சடலங்களை அடக்கம் / எரியுட்டல் செய்யக்கூடாது. * இறந்தவரின் அடையாளம் மற்றும் தகவல்களை சேகரிக்க வேண்டும். * சடலங்களை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். * மயானத்தில் பணி புரிபவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும். மேலும், தடுப்பூசி போடுவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். * இறந்து போனவர்களின் சடலங்களின் புகைப்படத்தை நேரடியாக காண்பிக்க்கூடாத என்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் விதிக்கப்பட்டுள்ள ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்கிறது. அப்புகைப்படங்களை, மங்கலாக பதிவு செய்தபின் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. உடன், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அடுத்த நான்கு வாரங்களுக்கு அறிக்கையாக தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. - நிரஞ்சன் குமார்.
http://dlvr.it/RzgssL
http://dlvr.it/RzgssL