மும்பையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தென்மும்பையில் உள்ள காமாத்திபுராவில் அதிக அளவில் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். 6 தெருக்களில் அவர்கள் வசித்து வருகின்றனர். மும்பை முழுக்க கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் பாலியல் தொழிலாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போட்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு காரணமாக அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மொத்தம் 1,500 பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் பகுதியில் கொரோனாவோ, அது தொடர்பான மரணங்களோ இதுவரை நடக்கவில்லை. தொழில் வழக்கம்போல் நடக்கிறது. தடுப்பூசி
இவர்களின் வாடிக்கையாளர்கள் டாக்சி டிரைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தாம். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதனால் தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் உணவுப் பொருள்களைக் கொண்டு பாலியல் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். பாலியல் தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மாநகராட்சி வார்டு அதிகாரி மகரந்த் தகத்கர் திட்டமிட்டார். ஆனால், அவர்கள் இதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதோடு அவர்களிடம் தடுப்பூசி குறித்த ஓர் அச்சம் இருந்தது. மேலும், தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியம். ஆனால், ஆதார் கார்டு பெரும்பாலான பாலியல் தொழிலாளர்களிடம் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து, ஆதார் கார்டு இல்லாமல் பாலியல் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போட அனுமதி கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரி மகரந்த் மத்திய அரசிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். மத்திய அரசும் இதற்கு சிறப்பு அனுமதி கொடுத்தது. இதையடுத்து உள்ளூர் எம்.எல்.ஏ அமின்பட்டேல் பாலியல் தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து கொரோனா தடுப்பூசி குறித்து இருக்கும் சந்தேகத்தைப் போக்கினார். அதிகமான பாலியல் தொழிலாளர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று பயப்படுவதாகத் தெரிவித்தனர். ``அதுபோன்று ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உங்களுக்குத் தேவையானதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.பாலியல் தொழிலாளர் - representaional image
இதையடுத்து பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர். 1,364 பாலியல் தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கின்றனர். அவர்களில் 650 பேரிடம் மட்டும் ஆதார் கார்டு இருக்கிறது. மற்றவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லை. அவர்களுக்காக மூன்று நாள்கள் சிறப்புத் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலியல் தொழிலாளர்கள் தாங்கள் தங்கி இருக்கும் 2X6 பரப்புள்ள அறைக்கு தினமும் ரூ.250 வாடகை கொடுக்கின்றனர். இது தவிர சாப்பாட்டையும் பார்க்க வேண்டியிருக்கிறது. கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சங்கர் தெரிவித்தார்.
http://dlvr.it/S0ntYG
http://dlvr.it/S0ntYG