தனது நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தான் தாவூத். டோங்கிரியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.
ஒருமுறை தங்கக்கடத்தல் மன்னன் ஹாஜி மஸ்தான், தாவூத்தின் ஆட்கள் இரண்டு பேரை பத்தான் கும்பலை கொண்டு அடித்து உதைத்தார். ஹாஜி மஸ்தான் என்ன காரணத்திற்காக தன் ஆட்களை அடித்தார் என்பது தாவூத்துக்கு தெரியவில்லை. தன் பகுதிக்குள் நுழைந்திருக்கும் ஹாஜி மஸ்தானுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தாவூத் நினைத்தான். 1972-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி தனது நண்பர்களை அழைத்து தாவூத் ஆலோசனையில் ஈடுபட்டான். அடுத்த சில நாட்களில் ஹாஜி மஸ்தானின் கருப்பு பணம் காரில் கொண்டு செல்லப்படுவதாக தாவூத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த பணத்தை கொள்ளையடித்து மஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட தாவூத் முடிவு செய்தான்.
தாவூத் உள்ளிட்ட எட்டு பேர்கொண்ட ஓர் அணி உருவாக்கப்பட்டது. பெரிய அளவில் திருடப்போகும் முதல் திருட்டாக இருந்ததால் தாவூத் கவனமாக திட்டம் தீட்டினான். பணம் கொண்டு வரப்படும் சாலையில் போலீஸார் இல்லாத இடத்தில் காரை மறித்து கொள்ளையடிப்பது என்று முடிவு செய்யப்ப்பட்டது. பணத்துடன் வரும் கார் செல்லும் கர்னாக் பந்தர் பகுதி எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பகுதி. மொத்த வியாபாரக் கடைகள் ஆயிரக்கணக்கில் இருந்தன. எப்போதும் லாரிகள் வருவதும் போவதுமாக இருக்கும்.
எனவே கர்னாக் பந்தரில் கைவிட்டுவிட்டு கர்னாக் பந்தர் மேம்பாலத்தில் தங்களது வேலையை செய்ய முடிவு செய்தான் தாவூத். பாலத்தின் இரு முனையிலும் தேவையான ஆட்களை தாவூத் நிறுத்தினான். அனைவரும் எப்படி கொள்ளையடிக்க வேண்டும் என சினிமாக்களை பார்த்து தெரிந்துகொண்டு தொழிலில் இறங்கினர்.
1974-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கார் பணத்துடன் மேம்பாலத்தில் வந்தது. தாவூத்தும் அவனது ஆட்களும் காரை வழிமறித்தனர். துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி 4.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தாவூத்தின் முதல் கொள்ளை வெற்றி பெற்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பணம் ஹாஜி மஸ்தானுக்கு சொந்தமானது இல்லை. வங்கி ஒன்றுக்கு சொந்தமான பணம் அது. மும்பையில் நடந்த மிகப்பெரிய கொள்ளையாக அது கருதப்பட்டது. கொள்ளையர்கள் யார் என்ற விபரத்தோடு மறுநாள் நியூஸ் பேப்பரில் செய்தி வந்தது. அதை பார்த்த இப்ராகிம் மனம் உடைந்து போனார்.
இப்ராகிம் மிகவும் நேர்மையான போலீஸ் அதிகாரி என்று அவர் வசித்த பகுதியில் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒருவரின் மகன் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வந்ததும், இப்ராகிம் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். நண்பர்களை பார்க்கவே வெட்கப்பட்டார். கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் பிடிபட்ட நிலையில் தாவூத்தும் அவனது சகோதரனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
உள்ளூர் போலீஸ் அதிகாரி இப்ராகிமை அழைத்து பேசினார். ‘சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்’ என்று இப்ராகிம் சொன்னார். தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அவர்கள் இருவரும் எங்கு இருக்கின்றனர் என விசாரித்தார். பைகுலாவில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. உடனே அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்தார் இப்ராகிம். பெல்ட்டால் தாவூத்தையும் சபீரையும் இரவு பகல் பாராமல் ரத்தம் வரும் வரை சரமாரியாக அடித்து உதைத்தார். அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. யார் சொல்லியும் இப்ராகிம் நிறுத்தவே இல்லை. கடைசியாக இரண்டு பேரையும் குற்றப்பிரிவு போலீஸார் முன்பு கொண்டு நிறுத்தி தன்னை மன்னித்துவிடும்படி இப்ராகிம் கேட்டுக்கொண்டார். இப்ராகிமின் நேர்மைக்காக இரண்டு பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டனர். ஆனால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கொள்ளை சம்பவத்திற்கு பிறகு தாவூத் மேலும் பிரபலமானான். அவனுக்கு இக்பால் நாதிக் என்ற உள்ளூர் பத்திரிக்கையாளரின் அறிமுகம் கிடைத்தது. அப்பத்திரிக்கையாளர் தாவூத்திற்கு தேவையான வழிகாட்டியாக இருந்தார். போலீஸாரிடம் நல்ல அறிமுகம் இருந்தது. சொந்தமாக பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். ஒரு முறை பட்டப்பகலில் பத்தான் ஒருவரை தாவூத் நடுத்தெருவில் அடித்து உதைத்தான். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தாவூத் மீது நடவடிக்கை எடுக்காமல் அவனை தனது காரில் ஏற்றிச்சென்று வீட்டில் விட்டார்.
இச்சம்பவத்தால் கோபம் அடைந்த அமிர்ஷதா என்ற பத்தான், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தாவூத்தின் நண்பர் இக்பாலை இரவில் அழைத்து சென்று மாகிம் பகுதியில் அடித்துப்போட்டான். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இக்பால் இறந்து போனார். இச்சம்பவம் தாவூத்திற்கு பத்தான்கள் மீதான கோபத்தை மேலும் அதிகரித்தது. மறுபுறம் போலீஸாரும் பத்தான்களை ஒழிக்க தீவிரம் காட்டி வந்தனர். அவர்கள் தாவூத்திற்கு இவ்விவகாரத்தில் மறைமுகமாக உதவ ஆரம்பித்தனர். இதனால் பத்தான்களின் ஆட்களும், தாவூத் ஆட்களும் அடிக்கடி மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
இரண்டு கும்பலுக்கு இடையே நடந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தங்கக் கடத்தல் மன்னன் ஹாஜி மஸ்தான் முடிவு செய்தார். பாட்ஷா படத்தில் வருவது போன்று 1980-ம் ஆண்டு ஜூலை மாதம் ரெளடிகள் அனைவரையும் பேச்சுவார்த்தைக்காக தனது வீட்டிற்கு அழைத்திருந்தார்..ஹாஜி மஸ்தான்
தாவூத் தனது சகோதரர் சபீருடன் வந்திருந்தான். பத்தான்களின் தலைவனாக கருதப்படும் கரீம் லாலா தலைமையில் அவரது அணியினர் அனைவரும் வந்திருந்தனர். மஸ்தான் வழக்கமான தனது சிகரெட்டை புகைத்துக்கொண்டே தொடக்க உரை ஆற்றினார். ‘ஒரே மதத்தில் இருந்து கொண்டு அடிக்கடி தெருக்களில் சண்டை போட்டுக்கொள்வது நமக்கு நல்லதல்ல, ரத்தம் சிந்துவது நமது தொழிலுக்கு ஏற்றதல்ல, இதனால் அரசுக்குதான் லாபம், அதற்கு நாம் ஏன் வழிவிட வேண்டும்’ என்று பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே சபீர் எழுந்தான்.
”அங்கிள்... நாங்கள் யாரையும் தாக்குவதில்லை. நாங்கள் எங்களது வழியில் சென்று கொண்டிருக்கிறோம். அதே சமயம் யாராவது எங்களை தாக்கினால் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று கர்ஜித்தான்.
ஆத்திரமடைந்த அமிர்ஷதா எழுந்து, ”எங்களின் வளர்ச்சியால் உங்களுக்கு பொறாமை. நாங்கள் பல ஆண்டுகளாக மும்பையை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்” என்றான்.
”எங்களுக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் கரீம் அங்கிள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதிப்பு வைத்திருக்கிறோம். அதற்காக எத்தனை நாட்களுக்கு பொறுமையாக செல்வது?” என்றான் சபீர் கோபத்துடன்.
அமிர்ஷதா, ”உங்களால் என்ன செய்ய முடியும்? அதை இப்போதே செய்யுங்கள்” என்று கூறி தாவூத்தை நோக்கி பார்த்தான்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த சபீர், அதனை எதிர்கொள்ள தயாரானான். ஆனால் தாவூத் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது இருக்கையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான். சபீர் செய்வதறியாமல் தாவூத்தை பார்த்தான். திடீரென தாவூத் தனது இருக்கையில் இருந்து எழுந்தான். நேராக மஸ்தான் இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.
மயான அமைதி நிலவியது.
மஸ்தான் வழக்கமான 555 சிகரெட்டை புகைத்துக்கொண்டிருந்தார். சிகரெட்டை வாங்கி மேஜையின் மத்தியில் இருக்கும் சிகரெட் ஆஷ்ட்ரேவில் சிகரெட் முழுவதையும் போட்டான். பின்னர் தாவூத் பேச ஆரம்பித்தான்.தாவூத் இப்ராஹிம்
“தீயை எப்படி கையாளவேண்டும் என்று எங்களுக்கு தெரியும். விரலால் தீயை அணைத்துவிடுவோம். நமக்குள் பகைமையோ அல்லது சவாலோ தேவையில்லை. எங்களை நாங்களே காயப்படுத்திக் கொள்வோம். ஆனால் கவுரவத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம்” என்றான்.
அவனது பேச்சு முதன்முறையாக அனுபவசாலியின் பேச்சை போலிருந்தது. தாவூத்தின் பேச்சை தொடர்ந்து இரு கும்பலுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதில்லை என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். கரீம்லாலாவும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்.
முஸ்லிம்களின் புனித நூலான குரானில் கை வைத்து ‘ஒப்பந்தத்தை மீறமாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரு கும்பலுக்கும் இடையே ஏற்படவிருந்த யுத்தத்தை மஸ்தான் முடிவுக்கு கொண்டு வந்தார்.
ரெளடிகளுக்குள் சமரசம் ஏற்பட்டதால் தாவூத் தனது தொழிலில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தான். மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றோடு கடத்தல் தொழிலிலும் ஈடுபட ஆரம்பித்தான். தாவூத்திற்கு கடத்தல் தொழில் புதிதாக இருந்தாலும் சரியாக செய்தான். பல வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கொங்கன் பகுதியில் நடுக்கடலில் கப்பலை நிறுத்தி படகு மூலம் கரைக்கு கொண்டு வரச் செய்தான். அங்கிருந்து பின்னர் அவை மும்பை கொண்டு வரப்படும்.
கப்பல் மட்டுமல்லாது விமானங்களிலும் தங்கம் கடத்தப்பட்டது. துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் தங்கம், மிட்டாய் பெட்டியில் வைத்து பேக்கிங் செய்யப்படும். தங்கத்தை கடத்தி வருபவர் சுங்க அதிகாரிகள் சோதனையிடும் முன்பாக அந்த பெட்டியை அங்கு இருக்கும் குப்பை தொட்டியில் போட்டு விடுவார். அதனை துப்புரவுப்பணியில் ஈடுபட்டுள்ள நபர் குப்பை தொட்டியோடு வெளியில் கொண்டு வந்து அதில் இருக்கும் தங்கம் இருக்கும் பெட்டியை மட்டும் எடுத்து தாவூத் ஆட்களிடம் கொடுத்து தனக்கான கமிஷனை பெற்றுக்கொள்வார்.
இவ்வாறு தங்கம் கடத்தி கொண்டு வருவதற்காகவே ஏராளமானோர் தாவூத் கூட்டத்தில் சேர்ந்தனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திக் கொண்டு வரும்போது கணிசமான அளவு பணம் கிடைத்தது. மும்பை நிழலுகில் முக்கியமான இடத்தை அடைந்த தாவூத் கடத்தலிலிருந்து கூடிய விரைவிலேயே அடுத்த கட்டத்துக்கு செல்லவிருந்தான்.
பகுதி 7க்கு செல்ல....
Also Read: நிழலுலக ராஜாக்கள் - மண்ணின் மைந்தனாக இருந்து மும்பையை நடுங்கவைத்த தாவூத் இப்ராஹிம் - பகுதி 7
http://dlvr.it/S16nsg
http://dlvr.it/S16nsg