இந்தியாவில் 'டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு' நிலவிவருவதன் காரணமாக, 'கோவின்' செயலியின் செயல்பாடுகள் அனைத்தும் தடம்புரள வாய்ப்பிருக்கிறது. இதன் பின்னணியை, இங்கே தெரிந்துக்கொள்வோம். செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய 'செயலி' (APP) ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும் வசதி சாத்தியமா? இதையே வேறு விதமாக கேட்பது என்றால், செல்போன் வைத்திருக்காதவர்கள் செயலியை அணுகச்செய்வது எப்படி? கொரோனா சூழலை மனதில் கொண்டு யோசித்தால், இந்தக் கேள்விகளுக்கான தேவையைப் புரிந்துகொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்கான 'கோவின்' செயலியையே எடுத்துக்கொள்வோம். இணைய வசதி கொண்ட செல்போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலி வழியே தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்து கொள்ளலாம். (இவர்களே திண்டாடுவது வேறு விஷயம்). ஆனால், செல்போன் வசதி இல்லாத ஏழை மக்கள், விளிம்பு நிலையில் இருப்பவர்கள், தொழில்நுட்ப வசதி இன்னமும் எட்டிப்பார்க்காத பகுதிகளில் வசிப்பவர்கள் எல்லாம் 'கோவின்' செயலியை எப்படி அணுகுவார்கள்? கொரோனாவுக்கு எதிரான ஒரே பாதுகாப்பு தடுப்பூசி எனும் நிலையில், தகுதி உடைய அனைவரும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனும்போது, தடுப்பூசி பற்றிய தகவல்களும், அதற்கு பதிவு செய்து கொள்ளும் வசதியும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா? ஆனால், செல்பேசி வசதி இல்லாதவர்கள், தடுப்பூசி பதிவுக்கான 'கோவின்' செயலியை எப்படி அணுக முடியும்? இந்த இடத்தில்தான், 'கோவின்' செயலியை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்கை அடைவது 'கோவின்' போன்ற செயலிகள் மூலம் சாத்தியம் இல்லை. இதில் விடுப்பட்டு நிற்பவர்கள் கணிசமாக இருப்பார்கள். இந்தப் பிரசனையைதான், இணைய உலகில் டிஜிட்டல் இடைவெளி அல்லது டிஜிட்டல் பாகுபாடு என்கின்றனர். அதாவது, டிஜிட்டல் வசதிகளை அணுக வாய்ப்புள்ளவர்களுக்கும், அத்தகைய வாய்ப்புள்ளாதவர்களுக்கமான நவீன ஏற்றத்தாழ்வு, கண்ணுக்குத்தெரியாத பெரும் பள்ளமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் இடைவெளியை கடந்து செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டதாக கோவின் செயலி இல்லாதபோது, அதன் பலன் யாருக்கானது எனும் கேள்வியை நாம் கேட்கத்தானே வேண்டும். பெரும்பாலும் நகர்புற மக்கள், இணைய வசதியை அணுக கூடியவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த செயலி அனைவருக்கமானது அல்ல என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக, கோவின் போன்ற செயலிகளே வீண் என்று புரிந்து கொள்ளக்கூடாது. நிச்சயம், இதுபோன்ற செயலிகள் அவசியமானவை. தகவல்களை அளிக்கவும், சேவைகளை பதிவு செய்யவும் செயலிகள் தேவைதான். ஆனால், இந்தியா போன்ற டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு நிதர்சனமாக உள்ள நாட்டில், கோவின் போன்ற செயலிகளை உருவாக்குவதோடு அரசு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து விடுவதுதான் பிரச்சனை. இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து செயல்படுவதற்கு பதிலாக, செயலியை உருவாக்கி விட்டோம், தடுப்பூசி போட்டு வருகிறோம் என சொல்வது, பெருந்தொற்று காலத்தில் பெருந்தவறாகும். இந்த இடத்தில் கூடுதலாக இன்னும் சில விஷயங்களையும் பொருத்திப்பார்க்க வேண்டும். தடுப்பூசி பற்றாக்குறையால், கோவின் செயலியில் தடுப்பூசிக்கு பதிவு செய்துகொள்வது நகர்புறத்தில் வசிப்பவர்களுக்கே சவாலாக இருப்பதால், தடுப்பூசி கிடைக்கும்போது தகவல் அளிப்பதற்காக என்றே, கோவின் செயலி சார்ந்த பல்வேறு துணை சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவின் செயலியில் பதிவுசெய்து கொண்ட பிறகு, இந்த சேவைகளிலும் பதிவுசெய்து கொண்டால், தடுப்பூசி எப்போது கிடைக்கத் துவங்குகிறதோ அப்போது, இந்த சேவைகள் தகவல் அளிக்கும். அதுவரை, பயனாளிகள் சார்பில் கோவின் செயலியை இந்த சேவைகள் கண்காணித்துக்கொண்டே இருக்கும். இது பெரிய விஷயம் அல்ல, ஏனெனில், இதற்காக எழுதப்பட்ட புரோகிராம் இந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றி விடும். தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதமாகும்போது, பயனர்கள் சார்பில் காத்திருந்து தகவல் தெரிவிக்கும் புரோகிராம்களும், சேவைகளும் மிகவும் தேவையானவைதான். ஆக, நாம் உருவாக்கும் துணை சேவைகளும் நகர்புறத்து மக்கள் சார்ந்ததாகவே அமைகின்றன. தடுப்பூசி பற்றி தகவல் கூட தெரிந்து கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் எந்த செயலியில் பதிவு செய்து கொண்டு வரிசையில் வந்து காத்திருப்பார்கள்? இந்த கேள்வி உலுக்கி எடுத்தபோதுதான், செல்போன் இல்லாமலே அணுக கூடிய செயலியை உருவாக்க முடியுமா எனும் கேள்வி எழுந்தது. இணைய யுகத்தில், தகவல்களை அளிக்கவும், சேவைகள் வழங்கவும் செயலிகள் முக்கியமானவை. அந்த வகையில் அரசு தரப்பில் உருவாக்கப்படும் ஆரோக்கிய சேது, கோவின் போன்ற செயலிகளை வரவேற்கவே செய்யலாம். ஆனால், இந்த செயலிகளை அணுக வாய்ப்பில்லாதவர்களுக்கு சேவை அளிப்பது எங்ஙனம்? என நாம் யோசிக்க வேண்டும். இதற்கான பதிலாக தான், செல்போன் இல்லாத செயலி அமைகிறது. அதாவது, ஒரு பயனுள்ள செயலி சாதனம் இல்லாமலும் அணுக கூடியதாக இருக்க வேண்டும். கோவின் செயலியையே எடுத்துக்கொள்ளுங்கள், செல்போன் வைத்திராத ஏழைகளும் அதை அணுக முடிந்தால் எப்படி இருக்கும்? இத்தகைய அற்புதத்தை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் இன்னமும் கைகூடவில்லை என்றாலும், முற்றிலும் சாத்தியமில்லை என கூறுவதற்கில்லை. எந்த திரையையும் தொடுதிரையாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம் மூலம், கிராமவாசிகளின் உள்ளங்கையை கூட ஒரு செயலியை செயல்பட வைக்கலாம். இதைவிட நடைமுறைச்சார்ந்த வழி என்பது, சுகாதார ஊழியர்கள் அல்லது தன்னார்வலர்கள் கோவின் செயலி நிறுவப்பட்ட சாதனங்களோடு கிராமங்களுக்குச்சென்று தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்வதாகும். மைக்ரோ ஏடிஎம்களை வைத்துக்கொண்டு குக்கிராமத்தில் உள்ளவர்களுக்கும் பண பரிவர்த்தனை செய்வதை இதற்கான முன்னுதாரணமாக கொள்ளலாம். அல்லது இ-சேவை மையங்கள் போன்ற மையங்களை கிராமங்களில் அமைத்து, ஒரு பொது செல்போனில் கிராம மக்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்துகொள்ள வைக்கலாம். விஷயம் என்னவென்றால், தடுப்பூசி பதிவு வசதியை நாம் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனில், அது, அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான், டிஜிட்டல் இடைவெளியால் செயலிகளும், சேவைகளும் எல்லா மக்களுக்கும் கிடைக்காமல் போகும் அவலத்தை மாற்ற முடியும்! இது ஒரு முன்னோடி... தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு செல்வதற்கான மெனக்கெடல் தொடர்பாக ஒரு பழைய உதாரணத்தை இங்கே இணைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், டி.இ.கே எனும் பெயரில் ஒரு புதுமையான பிரவுசர் அறிமுகமானது. இமெயில் பிரவுசர் என அழைக்கப்பட்ட இந்த சேவையை இமெயில் தேடியந்திரம் என்றும் சொல்லலாம். இந்த டி.இ.கே பிரவுசர் என்ன செய்தது என்றால், இணைய வசதி இல்லாத ஏழை மக்கள் இணையத்தில் தேடி தகவல் பெறும் வசதியை இமெயில் வாயிலாக வழங்கியது. இணைய வசதியை அணுக முடியாதவர்கள், இணையத்தில் தேட விரும்பும் தகவலை கேள்வியாக இந்த பிரவுசர் மூலம் சமர்பிக்கலாம். இதற்கேற்ப இமெயில் வடிவத்தில் இந்த பிரவுசர் அமைந்திருக்கும். இந்த கோரிக்கையை பெறும் சர்வர் அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலையில் அமைக்கப்பட்டிருந்தது. அங்குள்ளவர்கள், இந்த கோரிக்கைக்கான பதிலை தேடியந்திரங்களில் தேடி, பொருத்தமான பதிலை தேர்வு செய்து, அவற்றை இமெயில் வடிவில் அனுப்பி வைப்பார்கள். மறுமுனையில் இருப்பவரின் தேடலுக்கான விடையாக இந்த மெயில் அமையும். ஆக, இணைய வசதி இல்லாதவர்கள் இணைய தேடலை பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக இந்த இ-மெயில் பிரவுசர் தேடியந்திரம் உருவாக்கப்பட்டது.- http://tek.sourceforge.net/index.shtml ஆரம்ப காலத்தில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் ஏழை மாணவர்களுக்கு கைகொடுக்கவும் செய்தது. பின்னர், இணைய இணைப்பு பரவலான ஆண்டுகளில், இந்த இமெயில் தேடல் சேவை கைவிடப்பட்டது. இப்போது திரும்பி பார்க்கும் போது இந்த சேவை சாதாரணமானதாக தோன்றலாம். ஆனால், இணைய வசதியின் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் உருவாக்கப்பட்ட சேவை இது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த காலத்திலும் சரி இனி வருங்காலத்திலும் சரி இதே போன்ற புதுமையான சேவைகள் தேவை. ஏனெனில், தொழில்நுட்பம் என்பது எப்போதும், எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். - சைபர்சிம்மன்
http://dlvr.it/S1G40J
http://dlvr.it/S1G40J