உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுலப் ஸ்ரீவஸ்தவா. பத்திரிகையாளரான இவர் ABP செய்தி நிறுவனத்தின் பிரதாப்கர் மாவட்டச் செய்தியாளராக பணியாற்றிவந்தார். புலனாய்வுச் செய்தியாளரான ஸ்ரீவஸ்தவா, மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் சாராய கடத்தல்களில் ஈடுபட்டுவரும் மாஃபியா கும்பல் தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகத் தகவல்களைச் சேகரித்து ABP தொலைக்காட்சியின் ப்ரைம் டைம் ஸ்டோரிக்கு 'சாராய மாஃபியா' குறித்துப் புலனாய்வு செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
ஸ்ரீவஸ்தவாவின் சாராய மாஃபியா குறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு ABP செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருக்கிறது. பிரதாப்கர் மாவட்டத்தில், சாராயக் கடத்தல் கும்பல்களின் அட்டூழியத்தை அம்பலமாக்கிய ஸ்ரீவஸ்தாவின் செய்தி, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரையும் அலறவைத்திருக்கிறது. ஸ்ரீவஸ்தவாவின் எக்ஸ்க்ளுசிவ் ஸ்டோரி மிகப்பெரிய அளவில் ரீச்சாகவே, அவருக்குப் பாராட்டுகள் குவிந்திருக்கின்றன. ஆனால், பாராட்டுகள் கிடைத்ததைவிடவும் செய்தியாளர் ஸ்ரீவஸ்தவாவுக்கு மிரட்டல்கள்தான் அதிகம் வந்திருக்கின்றன. அதுவரை எந்தப் பத்திரிகையும், தொலைக்காட்சியும் வெளிக்கொண்டு வராத சாராய மாஃபியா விவாகரத்தை ஸ்ரீவஸ்தவா அம்பலமாக்கியதால், பிரதாப்கர் மாவட்டத்தின் முக்கியச் சாராயக் கடத்தல் புள்ளிகள் கொதித்துப்போயிருக்கின்றனர். சாராய மாஃபியா
அதையடுத்து, கடந்த சில தினங்களாக ஸ்ரீவஸ்தவாவுக்கு தொலைபேசி வாயிலாகக் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சாராயக் கும்பல் தன்னை மிரட்டுவதைக் கண்டு பயந்துபோன செய்தியாளர் ஸ்ரீவஸ்தவா, அது தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் புகார் மனு அளித்திருக்கிறார்.
அதில், "பிரதாப்கர் மாவட்டத்தின் சாராய மாஃபியாக்கள் குறித்து நான் பணிபுரிந்துவரும் நிறுவனத்துக்குச் செய்தி அனுப்பியிருந்தேன். அந்தச் செய்தி கடந்த 9-ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதிலிருந்து, என்னைச் சுற்றி பல்வேறு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. யார் யாரோ என்னை மிரட்டுகின்றனர். வீட்டைவிட்டு வெளியேறினால் யாரோ என்னைப் பின்தொடர்வது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நான் வெளியிட்ட செய்தியால் சாராயக் கும்பல் என்மீது கடும் கோபத்தில் இருக்கிறது. அவர்கள் எந்த நேரத்திலும் என்னைத் தாக்கலாம். என் குடும்பத்தினரும் பயத்தில் இருக்கின்றனர். என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டிருந்தார். செய்தியாளர் ஸ்ரீவஸ்தவா
நேற்று முன்தினம் போலீஸாரிடம் ஸ்ரீவஸ்தவா புகார் அளித்திருந்த நிலையில், அவர் நேற்றிரவு 11 மணியளவில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, செங்கல் சூளை ஒன்றின் அருகே மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகி வாகனத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறார். விபத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை செங்கல் சூளை பணியாளர்கள் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஸ்ரீவஸ்தவா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
சாராய மாஃபியாக்கள் குறித்துச் செய்தி வெளியான அடுத்த சில நாள்களில், செய்தி வெளியிட்ட செய்தியாளர் ஸ்ரீவஸ்தவா மர்மமான முறையில் உயிரிழந்தது சக பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து, மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பலரும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால், காவல்துறை தரப்பில் ஸ்ரீவஸ்தவா வாகன விபத்தில்தான் உயிரிழந்ததாக உறுதியாகக் கூறப்பட்டிருக்கிறது. செய்தியாளரின் மரணம் தொடர்பாக மாவட்ட காவல்துறை உயரதிகாரி சுரேந்திர திவேதி கூறுகையில், "செய்தியாளர் ஸ்ரீவஸ்தவா சாலை விபத்தில்தான் உயிரிழந்திருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியிருக்கிறது.
சாலையில் வேகமாக வந்துகொண்டிருக்கும்போது அவரது வாகனம் சாலையோர தண்ணீர்க் குழாய் ஒன்றில் பலமாக மோதியிருக்கிறது. அதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இருப்பினும், நாங்கள் வேறு கோணத்திலும் விசாரித்துவருகிறோம். முன்னதாக சாராயக் கும்பல் மிரட்டுவதாக அவர் புகார் அளித்தபோது, அவரைப் பின்தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பளிக்குமாறு உள்ளூர் போலீஸாரை வலியுறுத்தியிருந்தோம்" என்றார்.பிரியங்கா காந்தி - யோகி ஆதித்யநாத்
போலீஸார் செய்தியாளரின் இறப்பு இயற்கையானதுதான் என்று சான்றளித்தாலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சந்தேகத்தைத் தூண்டுகின்றன. சட்டை கிழிக்கப்பட்டு, முகத்தில் மோதல் காயங்கள் பலமாக இருந்ததாகக் கூறும் செய்தியாளர்கள், ஸ்ரீவஸ்தவாவின் மரணம் இயற்கையானது அல்ல என்று சந்தேகித்துக் கேள்விகளை எழுப்புகின்றனர். சாராய மாஃபியா குறித்துச் செய்தி வெளியிட்ட சில நாள்களில் செய்தியாளர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தீயாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில், செய்தியாளர் மரணம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "உ.பி-யில் சாராயக் கும்பல்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மாநில அரசு மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் உண்மைகளை வெளிக்கொண்டு வர ஆபத்தான கேள்விகளைக் கேட்கவும், முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால், அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறது. காட்டு அரசின் (Jungle Raj) தலைமையிலான உத்தரப்பிரதேச அரசிடம் செய்தியாளர் ஸ்ரீவஸ்தவாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல ஏதேனும் பதில் இருக்கிறதா?" என்று ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
செய்தியாளர் ஸ்ரீவஸ்தவாவின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை அமைக்கப்பட்டு, சாராய மாஃபியா கும்பல்களின் அராஜகத்தைச் சட்டரீதியாக அடக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
http://dlvr.it/S1hjyc
http://dlvr.it/S1hjyc