மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதுமிருக்கும் பெரும்பாலான மாநகராட்சிகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்துப் பரிசீலித்துவருகிறது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நானாபட்டோலேயும் கருத்து தெரிவித்திருந்தார். இதை முதல்வர் உத்தவ் தாக்கரே இரண்டு நாள்களுக்கு முன்பு கடும் விமர்சனம் செய்திருந்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் சட்டமன்றத்தில் குறைவான இடங்கள் இருக்கின்றன. எனவே, வரும் தேர்தலில் இந்தக் கூட்டணியில் நீடித்தால் மேலும் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் என்று கருதி காங்கிரஸ் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது.காங்கிரஸ் - என்.சி.பி- சிவசேனா
அதை நிரூபிக்கும் வகையில், இப்போது மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப்பும் `நாங்கள் வரும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று தெரிவித்து, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``நான் மும்பை காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து மாநகராட்சித் தேர்தலில் 227 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறிவருகிறேன். இது போன்று கூறுவது இது முதன்முறையல்ல. 1999-2014-ம் ஆண்டுகளில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் மாநகராட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிட்டிருக்கிறது” என்றார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ``மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காணாமல், தனித்துப் போட்டியிடுவது பற்றி மட்டும் பேசினால் மக்கள் செருப்பால் அடிப்பார்கள்” என்று காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப்போவதாக வந்த செய்திக்கு பதிலளித்திருந்தார்.
உத்தவ் தாக்கரேயின் இந்த செருப்படி குறித்து பாய் ஜக்தாப்பிடம் கேட்டதற்கு, ``உத்தவ் தாக்கரேயின் கருத்து எங்களுக்குத் தனித்துப் போட்டியிட ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது” என்று தெரிவித்தார். இதற்கு முன்பு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலே அளித்திருந்த பேட்டியில், வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், மகா விகாஷ் அந்தக் கட்சியில் இடம்பெறாது என்றும், தற்போதைய கூட்டணி வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்றும், அது நிரந்தரம் கிடையாது என்றும் கூறியிருந்தார். பட்டோலேயின் இந்தக் கருத்திலிருந்தே மகாராஷ்டிரா அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், நாங்கள் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்திருந்தது. உத்தவ் தாக்கரே
காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப்போவதாக தெரிவித்திருப்பது குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்திடம் கேட்டதற்கு, ``சிவசேனா அரசியல் யுத்தத்தில் தனித்தே களம் காணும். தேர்தலில் தனித்துப் போட்டியிட விரும்புபவர்கள் தாராளமாக தனித்துப் போட்டியிடலாம். மகாவிகாஷ் அகாடி தேர்தலைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், அரசியல் யுத்தத்தில் தனித்தே போரிடுவோம். மகாராஷ்டிராவின் கௌரவமாக இருந்தாலும், கட்சியின் கௌரவமாக இருந்தாலும் சிவசேனா இரண்டுக்கும் சேர்த்தே பாடுபடும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
http://dlvr.it/S28k3D
http://dlvr.it/S28k3D