இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், தனியார்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மட்டுமே ஆன்லைன் வழியாகப் பாடங்கள் நடத்தி வந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாகப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலையானது இந்தியாவில் தீவிரமடைந்ததால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல், 6 மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள ஆந்திராவில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் அம்மாநில ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டி வந்தது. இம்மாதம் (ஜூன்) இறுதிக்குள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி முடிக்க மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. அதன் படி, பொதுத்தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. அனால், கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாநில அரசு மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் தேர்வு நடத்த முயற்சிப்பதாக கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வை ரத்து செய்யக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோரின் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.சி வாரியங்கள் இரண்டு வார இடைவெளியில் மதிப்பெண் கணக்கீட்டு முறையைச் சமர்ப்பித்துள்ளது போன்று, பிற மாநிலக் கல்வி வாரியங்களும் மதிப்பீட்டு முறையை விரைவில் இறுதி செய்யவேண்டும். இன்றைய தேதியிலிருந்து 10 நாள்களுக்குள் உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அக மதிப்பீட்டு முறையை இறுதி செய்து, அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். பிற மாநிலங்கள்12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ள நிலையில், ஆந்திர அரசு மட்டும் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று தன் நிலைப்பாட்டில் இருப்பது ஏன்? கொரோனா பெருந்தொற்று சூழல் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்த அறிக்கையை ஆந்திர அரசு கூடிய விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால் கூட அதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிடுவோம்'' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆந்திர அரசை எச்சரித்தனர்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்த ஆந்திர அரசு நீதிபதிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து அவசர ஆலோசனை நடத்தி 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திர பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.சுரேஷ் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதைப் போல் ஜூலை 31-ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிவுகளையும் அறிவிக்க முடியாது. அதனால், ஆந்திராவில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது" என்றார்.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகக் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
http://dlvr.it/S2QPl6