2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புனேயில் நடந்த எல்கர் பரிஷத் கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அடுத்த நாள் புனே பீமா-கோரேகாவில் பெரிய அளவில் வன்முறை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் பீமா-கோரேகாவில் நிறுவப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி மரியாதை செலுத்துவது வழக்கம். 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து தலித் ராணுவ வீரர்கள் போராடி பெஷாவா படைகளை தோற்கடித்ததன் நினைவாக இந்த நினைவுச்சின்னம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு 2018ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நடந்த கலவரம், அதற்கு முந்தைய நாளில் நடந்த எல்கர் பரிஷத் கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது பற்றி மாநில போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இவ்வழக்கை 2018ம் ஆண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சி தன் வசம் எடுத்துக்கொண்டது. இதில் எல்கர் பரிஷத்திற்கு உதவி செய்ததாகக் கூறி பல சமூக ஆர்வலர்களைக் கைது செய்தனர். பீமா கோரேகாவ் நினைவுசின்னம்
அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியும் ஒருவராவார். அவரை தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் கைது செய்து மும்பை அழைத்து வந்தது. அவரிடம் எந்த வித விசாரணையும் நடத்தாமல் நேரடியாக நீதிமன்ற காவலில் அடைத்தனர். அதிலிருந்து சுவாமியிடம் கடந்த இரண்டு மாதத்தில் பல விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதோடு அவரது வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாகத் தெரிவித்தது. மும்பை அருகில் உள்ள தலோஜா சிறையில் சுவாமியும், அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் அடைக்கப்பட்டு இருந்தனர். அடிக்கடி ஸ்டேன் சுவாமி தனக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும், ஆனால் அதனை சிறை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். ஸ்டேன் சுவாமிக்கு நக்சலைட்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் ஒரு நக்சலைட் என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் சிறையில் இருந்து வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நீதிபதியிடம் ஸ்டேன் சுவாமி பேசினார். அப்போது எனக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவதால் உடனே என்னை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்றும் அப்படி விடுதலை செய்யவில்லையெனில் சிறையிலேயே விரைவில் இறந்துவிடுவேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தனியார் மருத்துவனையில் ஸ்டேன் சுவாமி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற கோர்ட் அனுமதித்தது. கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. திங்கள் கிழமை சிகிச்சை பலனலிக்காமல் ஸ்டேன் சுவாமி காலமானார். இத்தகவல் மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 84. வரும் 6ம் தேதி ஸ்டேன்சுவாமியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிவாசி மக்களுக்காக பாடுபட்ட ஸ்டேன் சுவாமியை நக்சலைட் என்று கூறி சிறையில் அடைத்தனர் என மக்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர். அவர் ஜாமீனில் வெளி வரமுடியாத படி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுன் இருந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு சமூக அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன. சிறையில் ஸ்டேன் சுவாமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து மனித உரிமை கமிஷன் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது. பீமா-கோரேகாவ் கலவரம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆந்திர எழுத்தாளர் வரவரராவ் என்பவரும் அடங்கும்.
http://dlvr.it/S37S7H
http://dlvr.it/S37S7H