தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணையைக் கட்டியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 1892-ம் ஆண்டு போடப்பட்ட சென்னை - மைசூர் மாகாண ஒப்பந்தத்தை கர்நாடக அரசு மீறியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கர்நாடக மாநிலம், சிக்பளாபூர் மாவட்டத்தில் உள்ள, நந்திமலையில் உற்பத்தியாகிறது, பெண்ணையாறு. இது தமிழகத்தில் பாயும்போது, தென்பெண்ணையாறு என்று அழைக்கப்படுகிறது. இதன் துணை நதியான மார்க்கண்டேய நதி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது. இந்தநிலையில், தற்போது கட்டப்பட்டுள்ள புதிய அணையின் மூலம், இந்த ஆறு மாவட்டங்களின் விவசாயம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் கர்நாடக அரசின் இந்தச் செயலுக்குத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தென்பெண்ணை ஆறு
இந்தநிலையில் கர்நாடக அரசின் புதிய அணை குறித்து, பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'' காவிரி ஆற்று நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எவ்வாறு அனைத்து விதிகளையும், ஒப்பந்தங்களையும், அறத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு சுயநலத்துடன் நடந்து கொண்டதோ, அதே போல் தான் தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதிலும் நடந்து கொண்டது.
மார்க்கண்டேய நதியில் அணை கட்ட தடைவிதிக்க வேண்டும்; பெண்ணையாற்றின் குறுக்கே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை 2019-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணையாற்று சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி தமிழக அரசும் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. அதையேற்று தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைத்திருந்தால், மார்க்கண்டேய ஆற்றில் அணை கட்டப்படுவதை தடுத்திருக்கலாம். ஆனால், தீர்ப்பாயத்தை அமைப்பதற்கு பதிலாக பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்தது.அன்புமணி
இரு மாநிலங்களுக்கு இடையே பிப்ரவரி 24, ஜூலை 7-ம் தேதி ஆகிய இரண்டு இரு முறை பேச்சு நடத்திய மத்திய அரசு குழு, அந்தப் பேச்சுகளில் உடன்பாடு எட்டப்படாததால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடுவர் மன்றத்தை அமைக்கும்படி கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. அப்போதே நடுவர் மன்றம் அமைத்திருந்தால் கூட அணையை தடுத்திருக்க முடியும். ஆனால், கடந்த ஆண்டு இறுதி வரை நடுவர் மன்றம் அமைக்கப்படாத நிலையில், அதையும், கொரோனா சூழலையும் பயன்படுத்திக் கொண்டு கர்நாடகம் அணை கட்டி முடித்துவிட்டது. இந்த விவகாரத்தை தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். நடுவர் மன்றத்திலும் இந்த சிக்கலை எழுப்பி சட்டவிரோதமாக, அனுமதியின்றி கட்டப்பட்ட அணையை அகற்ற ஆணையிடும்படி வலியுறுத்த வேண்டும்'' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Also Read: ``உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முற்றிலும் விரோதமானது” -மேகதாது அணை விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம்
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து, பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் பேசும்போது,
'' 1897-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை கர்நாடக அரசு மீறியிருக்கிறது. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்தியப் பிரதமர் மோடி ஒரே நாடு என்றெல்லாம் பேசுகிறார். ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்திலேயே அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதை மத்திய பா.ஜ.க அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மதகு, ஷட்டர் போன்ற எந்த வசதிகளும் இந்த அணையில் இல்லை. இது அராஜகத்தின் உச்சம். கர்நாடகத்தை ஆளுகின்ற பா.ஜ.க அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியிருக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறது. கர்நாடக அரசின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கர்நாடக நீர்ப்பாசனைத்துறை அமைச்சரைக் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து கர்நாடக அரசின் இந்தச் சட்டவிரோத செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்கிறார் கோபமாக.காஞ்சி அமுதன்
தி.மு.க செய்தித்தொடர்பு இணைச் செயலாளர், ராஜீவ்காந்தி பேசும்போது,
'' ஒன்றிய அரசிடமோ, தமிழகத்திடமோ எந்தவித செய்தியையும் தெரிவிக்காமல் ஒரே இரவில் ஒரு அணையைத் திறந்திருக்கிறது கர்நாடகா அரசு. இது நீதிமன்ற விதிகளுக்கு, கீழ்மடை உரிமைக்கு எதிரானது. அணைக் கட்டுமானத்தின்போது ஒன்றிய அரசோ, கடந்த அதிமுக தலைமையிலான தமிழக அரசோ கவனிக்காமல் விட்டது அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். '' என்கிறார் அவர். துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்''2017-இல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நிலநீரை செரிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டி.எம்.சி கொள்ளலவுள்ள ஒரு அணையை கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இச்செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 18.5.2018-இல் ஒரு அசல் வழக்கும் ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று அளித்த தீர்ப்பில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்துள்ளது. ''
அ.தி.மு.க அரசின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர், சிவசங்கரியிடம் பேசினோம்,
'' கடந்த அதிமுக அரசு தொடர்ந்து சரியான நடவடிக்கைகளைத்தான் எடுத்து வந்தது. 2018-ல் தமிழக அரசின் சார்பாக வழக்குத் தொடர்ந்தோம். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, மத்திய அரசின் ஜல்சக்தித் துறையின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். கொரோனா பாதிப்புகள் ஏற்படவே, பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை. இந்த நேரத்தில் கர்நாடக அரசாங்கத்தினர், அவசர அவசரமாக அணையைக் கட்டி முடித்துள்ளனர். அண்டை மாநிலங்களின் அனுமதி இல்லாமல், ஒரு மாநிலம் புதிதாக அணை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசு தொடர்ந்து சட்டத்தை மீறி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிப்பதில்லை. பக்கத்து மாநில மக்களின் உணர்வுகளையும் மதிப்பதில்லை. இந்தியாவில் ஒரு மாநிலம் என்பதை மறந்து தனிநாடு போல் கர்நாடகா செயல்படுகிறது'' என்கிறார் அவர்.நாராயணன் திருப்பதி
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,
'' 2008-ம் ஆண்டு இந்த அணைக்கான அரசாணை கர்நாடக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக் கட்டுமானத்துக்காக திட்ட மதிப்பீடு 240 கோடி. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் 80 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்த அணைக் கட்டுமானத்தை எதிர்த்து தமிழக அரசு, 2018-ல் தான் வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தீர்ப்பாயம் அமைக்க தமிழக அரசோ, கர்நாடக அரசோ கோரவில்லை என உச்சநீதிமன்றம் அந்த வழக்கை 2020-ம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த விஷயத்தில் யார் மீது தவறிருக்கிறது என மக்கள் புரிந்துகொள்வார்கள்.
இந்த அணையைக் கட்ட ஆரம்பித்த காலத்தில், தமிழ்நாட்டில் திமுகவும் மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸும்தான் ஆட்சியில் இருந்தது. அதேபோல, தற்போது மத்திய அரசைக் குற்றம் சுமத்தும், அன்புமணி இராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான், அப்போதைய இந்திய அரசு, அணை கட்ட 80 கோடி நிதி ஒதுக்கியது. அதுமட்டுமல்ல, தமிழகத்திலும் அவர்கள் அங்கம் வகித்த தி.மு.கவின் ஆட்சிதான் இருந்தது. அப்போது ஏன் அமைதியாக இருந்தார்கள் என்பதற்கான பதிலைச் சொல்லிவிட்டு அன்புமணி இராமதாஸ் பா.ஜ.கவை எதிர்த்துக் கேள்வி கேட்கட்டும்'' என்கிறார் அவர்.
இந்த அணை விவகாரம் தொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள, தமிழக நீர்வளத்துறை அமைச்சர், துரைமுருகன், ''நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/S38FgS
http://dlvr.it/S38FgS