கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இது சட்ட விரோதம் எனவும், மேக்கேதாட்டூவில் அணை கட்டப்பட்டால், வெள்ளக்காலங்களிலும் கூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராது எனவும் இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு, உடனடியாக போர்ர்க்குணத்துடன் செயல்பட வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் இதுகுறித்து விவாதிக்க, ஜூலை 12-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கட்சிகளின் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. காவிரி உரிமைக்காக உண்மையாக போராடக்கூடியவர்களையும் விவசாயிகள் சங்கப் பிரநிதிகளையும் அழைக்காமல், மேக்கேதாட்டூ பிரச்னைக்காக ஆலோசனை கூட்டம் நடத்துவது ஆக்கப்பூர்வமாக இருக்காது. இது வெறும் கண் துடைப்புக்கான கூட்டமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.Tamilnadu Chief minister MK Stalin
``தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், சிறப்பாக ஆட்சி செய்து, மக்களின் மனதில் நிலையாக இடம்பிடிக்க வேண்டும் என்பது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் கனவு என்கிறார்கள் தி.மு.க-வினர். நடுநிலையாளர்கள் மத்தியிலும் இந்த கருத்து நிலவுகிறது. ஆனால் இதற்கு பெரும் சவாலாக, தொட்டுவிடும் தூரத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது மேக்கேதாட்டூ அணை விவகாரம்.
தமிழ்நாட்டில் திமுக-வுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும், கர்நாடாகாவில் பா.ஜ.க-வை மேலும் வலுப்படுத்தவும், மத்திய அரசு, வேறு சில முக்கிய அனுமதியையும் உடனடியாக அளித்துவிடும். மேக்கேதாட்டூ அணை கட்டுமானப்பணி தடாலடியாக நடைபெறும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முனைப்புடனும் போர்க்குணத்துடனும் செயல்பட்டால் மட்டுமே, காவிரி உரிமையை காப்பாற்ற முடியும்" என எச்சரிக்கிறார்கள், காவிரி உரிமைக்காக போராடுபவர்கள். மேலும் இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், காவிரி உரிமைக்காக போராட்டக்கூடியவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் அழைத்து தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில்தான் ஜூலை 12-ம் தேதி நடைபெறும் மேக்கேதாட்டூ ஆலோசனை கூட்டத்திற்கு, தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மட்டும் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``மேக்கேதாட்டூ பிரச்னை என்பது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகவும் சவாலானது. இதை இவர் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு எத்தனை அரசியல் கட்சிகளையும் அழைத்தாலும் ஆக்கப்பூர்வமான அக்கறையான ஆலோசனைகள் கிடைக்க வாய்ப்பில்லை. மேக்கேதாட்டூ அணையால் ஏற்படும் இழப்பையும் வலியையும், இதனை உணர்ந்த விவசாயிகளால்தான் வெளிப்படுத்த முடியும். இதில் உண்மையான அக்கறை உள்ளவர்களால்தான் வழிகாட்டவும் முடியும். காவிரி பிரச்னைகளுக்காக, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். குறிப்பாக இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், இதனை பல ஆண்டுகளாக ஆழமாக உற்று நோக்கி வருகிறார். சுந்தர விமலநாதன்
காவிரி உரிமைக்காக பல அர்ப்பணிப்புகளை செய்த காவிரி காப்புக்குழு தலைவர் மறைந்த பி.ஆர்.குப்புசாமியை போலவே, பெ.மணியரசனும் காவிரி பிரச்னையை நுட்பமாக அணுகக்கூடியவர். கடந்த காலங்களில் தமிழக அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். காவிரி சிக்கலில் இவர் முன் வைத்த சட்ட நுணுக்கங்களையும் கருத்துகளையும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கண்டுணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அவ்வபோது வெற்றியும் கண்டார்.
Also Read: மேக்கேதாட்டூ அணை: `மத்திய அரசை நம்பி மட்டும் தமிழகம் இருந்துவிடக்கூடாது!' - எச்சரிக்கும் விவசாயிகள்
மேக்கேதாட்டூ தொடர்பாக தமிழக அரசு தற்போது ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பெ.மணியரசனை அவசியம் அழைத்திருக்க வேண்டும். இவர் காவிரி உரிமைக்காக, எந்தவித அரசியல் சார்பும் இன்றி, நடுநிலையுடன் குரல் கொடுக்கக் கூடியவர். விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். கர்நாடக அரசு, அங்குள்ள விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைக்காமல், காவிரி தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தியதே இல்லை. பிரதமரை சந்திக்கும் போதும் விவசாயிகள் இருப்பார்கள்.
அங்கு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், புட்டனய்யா, பசவராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்து ஆலோசனை கேட்பார்கள். 2004-ம் ஆண்டு காவிரி பிரச்னை தீவிரமாக இருந்தபோது, அப்போதை முதல்வர் ஜெயலலிதா, இங்குள்ள விவசாயிகள் சங்கத் தலைவர்களையும் அனைத்து அரசியல் கட்சியினரையும் தமிழக அரசின் சார்பில் டில்லி அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வைத்தார். 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வெளியான போது, அடுத்தக்கட்ட நடபடிக்கைகள் குறித்து விவாதிக்க, விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள், விவாயிகள் சங்கத் தலைவர்களின் வீட்டிற்கே நேரில் வந்து அழைப்பு கடிதம் கொடுத்தார்கள். மேக்கேதாட்டூ
Also Read: மேக்கேதாட்டூ விவகாரம்: தொடங்கும் போராட்டங்கள்; ஆயத்தமாகும் டெல்டா விவசாயிகள்!
எனவே காவிரி உரிமைக்காக உண்மையாக போராடக்கூடியவர்களையும் விவசாயிகள் சங்கப் பிரநிதிகளையும் அழைக்காமல், மேக்கேதாட்டூ பிரச்னைக்காக ஆலோசனை கூட்டம் நடத்துவது ஆக்கப்பூர்வமாக இருக்காது. இது வெறும் கண் துடைப்புக்கான கூட்டமாகதான் நாங்கள் பார்க்கிறோம்’’ என ஆதங்கத்தோடு தெரிவித்தார்.
இது தொடர்பாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியனும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ``ஜூலை 12-ம் தேதி சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு, தமிழக சட்டப் பேரவை கட்சித்தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இல்லாமல் கூட்டம் நடைபெற்றால், காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள கூட்டத்தை தள்ளி வைத்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு வசதியான ஒரு நாளை தேர்ந்தெடுத்து, விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து இக்கூட்டத்தை நடத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுக்கிறார்கள்.
http://dlvr.it/S3W5qR
http://dlvr.it/S3W5qR