காவிரி நதி கர்நாடகா மாநிலம் தலைக் காவிரியில் உருவாகி, தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள கடலில் கலக்கிறது. கர்நாடகாவில் திறக்கப்படும் காவிரி நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது. தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாகக் காவிரி நீர் அமைத்துள்ளது. 800 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆறு, 320 கிலோ மீட்டர் கர்நாடகத்திலும், 416 கிலோ மீட்டர் தமிழகத்திற்குள்ளும் ஓடுகிறது. 64 கிலோ மீட்டர் மாநிலங்களுக்கு பொதுவான எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓடுகிறது. தமிழகம், கர்நாடக, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் காவிரி நதி நீரை நம்பியுள்ளது. காவிரி நதியின் மொத்த ஆற்று நீர் பிடிப்பு பகுதியாக 81,155 சதுர கிலோமீட்டர் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 44,016 சதுர கிலோமீட்டரும், கர்நாடகத்தில் 34,273 சதுர கிலோமீட்டரும், கேரளாவில் 2,866 சதுர கிலோமீட்டரும் இடம் பெறுகிறது. தமிழகத்தில் சேலம் முதல் நாகை வரை உள்ள பத்து மாவட்டங்கள் காவிரி நீரைச் சார்ந்துள்ளது.காவிரி
காவிரி நதி நீர் பிரச்னை தண்ணீர் பிரச்னை என்பதைத் தாண்டி அதில் நீண்ட கால அரசியலும் அடங்கியுள்ளது. இந்த பிரச்னை பற்றி தெரிந்துகொள்ளச் சற்று பின்னோக்கி செல்லவேண்டும். காவிரி பிரச்னை இன்று நேற்று இல்லை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. 1870-ம் ஆண்டுகளின் முற்பகுதியில் மைசூர் சமஸ்தானம் காவிரி நதியில் சில நீர் மேலாண்மை திட்டங்களைக் கொண்டுவர முடிவெடுத்தது. இந்த திட்டங்களின் மூலம், மெட்ராஸ் ராஜதானி அரசுக்கு வரவேண்டிய தண்ணீர் வராமல் போகுமோ என்று மைசூர் சமஸ்தானத்திற்குக் கடிதம் எழுதுகிறது. 1890-ம் ஆண்டு மெட்ராஸ் மற்றும் மைசூருக்குமிடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டு அரசுகளுக்கும் பலகட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவந்தது.
கடைசியாக 1892-ம் ஆண்டு ஊட்டியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, மைசூர் மாகாணத்தில் உள்ள காவிரி, பாலாறு, சித்திராவதி, கபினி, துங்கா உள்ளிட்ட 15 முதன்மையான ஆறுகளில் மைசூர் அரசு மெட்ராஸ் மாகாணத்தின் ஒப்புதல் இல்லாது அணை கட்டக்கூடாது. இதில் இருவருக்கும் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால் இரண்டு அரசால் நியமிக்கப்படும் குழுவின் முடிவுக்கு விட்டுவிடவேண்டும் என்பது தான். எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்தது. 1906-ம் ஆண்டு மைசூர் அரசு கண்ணாம்பாடி என்ற இடத்தில் அணைகட்ட முடிவெடுத்தது. அதே நேரத்தில் மெட்ராஸ் மாகாணத்திலும் மேட்டூரில் ஒரு அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இரண்டு அரசுகளுக்கு எத்தனையோ சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடைசியாக இரண்டு அரசுக்கும் தீர்ப்பாளராக நீதிபதி கிரிஃபின் நியமிக்கப்பட்டார்.காவிரி நதியைப் பொறுத்தவரை மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் எந்த சிக்கலும் இல்லாது திறந்து விட முடியும். மழை அளவு குறைந்தால், தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்படும் நிலை தான் இருந்து வந்தது.
விசாரணைகளுக்குப் பிறகு நீதிபதி கிரிஃபின், இரண்டு அரசுகளும் அணைகளைக் கட்டிக்கொள்ளலாம். அதோடு, மைசூர் அரசு மெட்ராஸுக்கு நொடிக்கு 22,750 கன அடி தண்ணீரை ஓடும்படி திறந்துவிடவேண்டும் என்று கூறினார். இதை ஏற்க மறுத்த மெட்ராஸ் மாகாணம் இந்திய அரசிடம் மேல் முறையீடு செய்தது. இந்த விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டது. பின்னர் 1924-ம் ஆண்டு அணைக்கட்டுவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதோடு, இரண்டு அரசுகளும் தங்களின் பாசனப் பகுதிகளை விரிவாக்கம் செய்துகொள்ளவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்புதலுக்குப் பின்னர் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து சென்றாலும், பெரிய அளவில் எந்த பிரச்னை இல்லாது தான் சென்று கொண்டிருந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதில், தலைக்காவிரி கர்நாடகத்தின் பகுதியானது. கேரளா மற்றும் புதுச்சேரியும் ஒரு பகுதி காவிரியில் பயனடைந்து வந்தது. இந்த மாநிலங்களும் நதிநீரில் பங்கு கேட்க தொடங்கியது. இந்நிலையில், 1960-ம் ஆண்டு கர்நாடக அரசு இரண்டு புதிய அணைகளைக் கட்டும் பணியைத் தொடங்கியது. தமிழகம் அரசு இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புதிய அணை கட்ட தமிழகத்திடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று கூறியது. 1968-ம் ஆண்டு தமிழகத்தில் அன்றைய முதல்வரை இருந்த அண்ணா கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடவேண்டும் என்று கோரிக்கையையும் வைத்தார். அந்த ஆண்டு, டெல்லியில் மாநில அரசுப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. 1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்படுகிறது என்று தமிழகம் சார்பில் கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படவில்லை.அண்ணா- கருணாநிதி
1969-ம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்தார். 1970-ம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர்கள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இருந்த போதிலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1971-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரவும் செய்திருந்தது. அதே நேரத்தில் அணைக்கட்டும் வேலைகளை நிறுத்த தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறனும் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். 1972-ம் ஆண்டு அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி தமிழகம் வருகை புரிந்திருந்தார். அப்போது அவர் தமிழக அரசிடம் இந்த பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றும் வழக்கைத் திரும்பப் பெறவும் கூறியிருந்தார்.
இந்திரா காந்தி கூறியதை அடுத்து, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி கலந்தாலோசனை செய்து தற்காலிகமா வழக்கும் திரும்பப் பெறப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகள் பல கட்ட பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. எந்த பேச்சுவார்த்தையும் பலனளிக்காததால் 1975-ம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கக்கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. 1976-ம் ஆண்டு எமர்ஜென்சியின் போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. அந்த காலகட்டத்தில் மீண்டும் மத்திய அரசு ஒரு வரைவு ஒப்பந்தத்தைத் தயார் செய்தது. 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு ஆட்சி வந்த போது மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.இந்திரா காந்தி, கருணாநிதி
1983-ம் ஆண்டு தமிழ்நாடு காவிரி நீர்ப் பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தினர் நடுவர் மன்றம் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். 1986-ம் ஆண்டு தமிழக அரசு அந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டது. இந்த வழக்கு விசாரணையில் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த பேச்சுவார்த்தையும் எந்த பலனையும் அளிக்கவில்லை. இதையடுத்து 1988-ம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கு இடையில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் கர்நாடகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெறும் செயல் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
தொடரும்…
Also Read: காவிரி நீர் : கடைமடைப் பகுதியான பூம்புகாரை வந்தடைந்தது; மலர் தூவி வழிபட்டு வரவேற்ற மக்கள்!
http://dlvr.it/S3R16k