1989-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. அந்த சமயத்தில் கர்நாடகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலிலிருந்தது. இருந்தபோதிலும், கர்நாடக ஆளுநரோடு பேச்சுவார்த்தை நடத்தவும், அந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை என்றால் மத்திய அரசிடம் முறையிடவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் மற்றும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்திருந்தனர். இருந்தபோதிலும், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தனியாகச் சென்று பிரதமரிடம் கோரிக்கை மனுவை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வழக்கு விசாரணையை விரைவுபடுத்தினர் கருணாநிதி. 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகக் காவிரி நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டது.வி.பி.சிங் கருணாநிதி
இந்த நடுவர் மன்றத்திடம் தமிழகம் 566 டி.எம்.சி., கர்நாடக 465 டி.எம்.சி., கேரளா 99.8 டி.எம்.சி., புதுவை 9.3 டி.எம்.சி. தண்ணீரைக் கேட்டிருந்ததது. தீர்ப்பாயத்திடம் தண்ணீர் திறந்துவிடக்கோரி இருந்தது. அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதினால், உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 1980 முதல் 1990 வரை ஒவ்வொரு ஆண்டையும் கணக்கிட்டு கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமில்லாது கர்நாடக அரசு 11,20,000 ஏக்கருக்கு மேல் பாசனப் பரப்பை விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த இடைக்காலத் தீர்ப்பு 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. வெளியான அந்த சமயத்தில் கர்நாடகாவில் பெரும் கலவரம் வெடித்தது. கர்நாடகாவில் வாழ்ந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறையின்போது 10-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அசாதாரண சூழலே கர்நாடகாவில் நிலவியது. இந்த தீர்ப்பு வெளியானதும் கர்நாடக அரசு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது, குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டதன் படியும், உச்ச நீதிமன்ற குறுக்கீட்டாலும் அந்த சட்டம் பின்னர் நீக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்புக்கு பிறகும் கர்நாடகம் உரிய தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர மறுத்து வந்தது. ஜெயலலிதா உண்ணாவிரதம்
இந்நிலையில் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்குக் கூறிய தண்ணீர் திறந்துவிடக் கோரியும், தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரியும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அவர் தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணாவிரதத்திலிருந்த நிலையில் சென்னைக்கு விரைந்த அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சரான சுக்லா, "விரைவில் அரசிதழில் வெளியிடுகிறோம் நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்!" என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் ஜெயலலிதா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் தீர்ப்பும் அரசிதழில் வெளியானது. அடுத்த இரண்டு ஆண்டுகள் சரியான மழை பொலிவு இருந்ததால் தண்ணீர் திறந்து விடுவதில் எந்த பிரச்சனையும் இல்லாது இருந்தது. 1995-ம் ஆண்டு மழையின் அளவு குறைந்ததால் மீண்டும் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகம் மறுப்பு தெரிவித்தது.
1996-ம் ஆண்டு தி.மு.க மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. நடுவர் மன்றத்தில் ஆணையைச் செயல்படுத்தவும். திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிடவும் கருணாநிதி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதுமட்டுமில்லாது அன்றைய கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேலுடன் ஐந்துமுறை நேரடி பேச்சுவார்த்தையையும் நடத்தினர். மேலும், 1997-ம் ஆண்டு நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தார். அதே ஆண்டில் மத்திய அரசு ஆணையைப் பிறப்பிக்க வேண்டி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த ஆண்டே 'இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம்' அமைந்தது. இந்த ஆணையத்தில், நான்கு மாநில முதல்வர்களும், பிரதமரும் இடம் பெறுவர். அனைத்து உறுப்பினர்களும் கூடினால் மட்டுமே ஆணையம் கூடமுடியும், அதோடு, அனைவரும் ஒருமனதாக மட்டுமே ஒரு முடிவை எடுக்க முடியும் என்ற நிலையே இருந்தது. பின்னாளில் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்ட கதையும் உண்டு.கருணாநிதி
1998-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இரண்டு நாட்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே காவிரி நடுவர் மன்றத்தின் விசாரணையை ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை நடுவர் மன்றம் வழங்கியது. அப்போது தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிப் பொறுப்பிலிருந்தது.
Also Read: `காவிரி அரசியல்' - பிரிட்டிஷ் ஆட்சி முதல் எம்.ஜி.ஆர் ஆட்சிவரை நடந்தது என்ன? - பாகம் 01
1000 பக்கம் கொண்ட தீர்ப்பை, காவிரி நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இந்த தீர்ப்பின்படி, மொத்தமாகக் கிடைக்கும் 740 டி.எம்.சி காவிரி நீரைத் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி-யும், கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி-யும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி-யும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கூறியது. அதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க மத்திய அரசுக்கு நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.காவிரி ஆறு
இந்த உத்தரவின் படி, தமிழகத்தின் பாங்கான 419 டி.எம்.சி தண்ணீரில் பெய்யும் மழை அளவை கிடைத்தது போகக் கர்நாடக அரசு கொடுக்க வேண்டியது வெறும் 192 டி.எம்.சி தண்ணீர் தான். அதாவது இதற்கு முன்னர் இருந்த 205 டி.எம்.சி தண்ணீர் இறுதித் தீர்ப்பு பின்னர் 192 டி.எம்.சி-யாக மாறிப்போனது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு, கர்நாடக, கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட கோரி முறையிடப்பட்டது. 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி அன்றைய எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. 2013-ம் ஆண்டு நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும், காவிரியில் நீர் திறப்பதை மேற்பார்வையிட ஒரு குழுவை அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருந்த போதிலும், இறுதித்தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து தமிழகம் தண்ணீரைப் பெறமுடியவில்லை.
2016-ம் ஆண்டு, அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சரான உமாபாரதி முன்னிலையில். தமிழகத்தில் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அன்றைய கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. அதே ஆண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றும் இறுதித் தீர்ப்பில் திருத்தும் வேண்டும் என்றும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவிரி பாசனப்பகுதிகளை ஆய்வு செய்ய தொழில்நுட்பக் குழுவை அமைத்தது. இந்த குழுவும் தனது ஆய்வை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. 2017-ம் ஆண்டு நீதிமன்றம் அந்த அறிக்கையை விசாரணை செய்தது. மேலும், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி தனது வாதங்களை முன்வைத்தது. இதில் தமிழகம் அதிகபட்சமாக 13 நாட்கள் தங்களின் வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.2016-ல் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கு எதிராகக் கர்நாடகாவில் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன.
கடைசியாக உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதித் தீர்ப்பை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்தவா ராய், கான்வில்கர் ஆகியோர் கொண்ட அமர்வால் வசித்தது. இந்த தீர்ப்பில், 2007-ல் நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்கக் கூறிய 192 டி.எம்.சி. அளவில் 14.75 டி.எம்.சி. குறைந்து 177.25 டி.எம்.சி வழங்கவும். அந்த 14.75 டி.எம்.சி. தண்ணீரைப் பெங்களூரு குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. கேரளா, புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்படவில்லை. மாதாந்திர அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், சென்னை மற்றும் மைசூரு மாகாணங்கள் இடையே 1892, 1924 ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் செல்லும் என்றும், இந்த தீர்ப்பின் மூலம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை அடுத்த ஆறுவரங்களுக்குள் செயல்படுத்தத் திட்டத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு மத்திய அரசிதழில் வெளியானது.
தொடரும்…
http://dlvr.it/S3XVKw