கடந்த 2010-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் யார்கோல் கிராமத்தில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டமுடிவு செய்தது. இந்த அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. கர்நாடக அரசும் 87 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியைத் தொடங்கியது. இதனை எதிர்த்து 2013-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மார்க்கண்டேய நதியானது தென்பெண்ணை ஆற்றின் முக்கியமான துணை நதியாகும். தென்பெண்ணை ஆற்று நீரின் மூலம் ஐந்து மாவட்டங்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாது 10 லட்சம் ஏக்கர் பாசனமும் நடைபெறுகிறது. புதிய அணை கட்டுவதால் தமிழகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று வாதித்தபோதிலும் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. 2019-ம் ஆண்டு அணையைக் கட்டத் தடை இல்லை என்று தமிழகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து 40 மீட்டர் உயரத்திலும், 414 மீட்டர் நீளத்திலும் புதிய அணையைக் கட்டிமுடித்துள்ளது கர்நாடக அரசு. இதனால், தமிழகத்தில் ஐந்து மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.மார்க்கண்டேய நதி அணை
கடந்த 2018-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ளதுபோல கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதை மீறியுள்ளது. கர்நாடக அரசு அணையைக் கட்ட ஆரம்பப் பணிகளைத் தொடங்கவுள்ளதற்கும் புதிய அணையைக் கட்டவும், விரிவான திட்ட அறிக்கைத் தயார் செய்யவும் 22.11.2018 அன்று மத்திய நீர்வளக் குழுமம் அனுமதி வழங்கியதற்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், விரைவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாகச் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதில், `மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவது தமிழகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்குத் தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்காது என்று நம்புகிறேன்'. மேலும், இது தொடர்பாக ஆலோசனை செய்யத் தமிழக முதல்வருக்கு அழைப்பும் விடுத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர், `லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் காவிரி நீரையே நம்பியுள்ளனர். அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் மேக்கேதாட்டு அணை திட்டத்தைக் கர்நாடகா அரசு கைவிட வேண்டும்' என்று கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.ஸ்டாலின் - மோடி
"விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்திடும் வகையில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுவிலோ அல்லது வேறு எங்கு அணை கட்ட எந்த முயற்சி எடுத்தாலும் அதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். அதோடு, அதைத் தடுத்து நிறுத்த சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஏற்கனவே கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் ஒப்புதலை வாங்கியுள்ளது. இருந்தபோதிலும், அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத்தை டெல்லியில் சந்ததி பேசினார். இந்த சந்திப்பின் முடிவில், கர்நாடக புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்காது என்று மத்திய அமைச்சர் உறுதியளித்திருப்பதாக அவர் கூறியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோதும் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகப் பேசியதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் சமீபத்தில் மேக்கேதாட்டு விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளச் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து காட்சிகள் கூட்டத்தைக் கூட்டினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்தாலோசனை செய்தபிறகு, "மேக்கேதாட்டுவில் அணையைக் கட்ட கர்நாடக அரசு முனைப்புடன் செயல்பட்டுவருவது கண்டனத்துக்குரியது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய முயற்சி அரசியலமைப்பு சட்ட மாட்சிமைக்கு விடப்படும் சவாலாக இருந்துவருகிறது. மேக்கேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் முழு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசிடம் நேரில் மனுவாக வழங்க முடிவு செய்துள்ளது. போன்ற மூன்று முக்கியமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.அனைத்துக் கட்சிகள் கூட்டம்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் தொடங்கி நூறு ஆண்டுகளைத் தாண்டியும் இந்த காவிரி நதிநீர் பிரச்னை இன்றளவும் சற்றும் ஓய்ந்த பாடில்லை. இது வெறும் நீர் பிரச்னை மட்டுமே கிடையாது. இதில் பெரும் அரசியல் அடங்கியுள்ளது என்பதுதான் உண்மை. மத்தியில் ஆளும் பாஜக அரசும் சரி முன்னாள் காங்கிரஸ் அரசும் சரி இதையேதான் செய்தது. தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற போதிலும், கர்நாடகாவில் இந்த இரண்டு கட்சியினாலும் ஆட்சி அமைக்குமளவு செல்வாக்கு கொண்டவை. அதே சமயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் தமிழகத்திலும் ஓரளவுக்கு வாக்கு வாங்கியும் அவசியம். தமிழகத்திற்கு ஒரு முடிவு கூறினால், கர்நாடகாவில் அவர்களின் வாக்கு வங்கிக்குப் பாதிப்பு ஏற்படும். `காவிரி அரசியல்'-1991-ல் கர்நாடகாவில் வெடித்த கலவரம் முதல் இறுதித் தீர்ப்பு வரை நடந்தது என்ன? பாகம்2
Also Read: `காவிரி அரசியல்' - பிரிட்டிஷ் ஆட்சி முதல் எம்.ஜி.ஆர் ஆட்சிவரை நடந்தது என்ன? - பாகம் 01
Also Read: `காவிரி அரசியல்'-1991-ல் கர்நாடகாவில் வெடித்த கலவரம் முதல் இறுதித் தீர்ப்பு வரை நடந்தது என்ன? பாகம்2
கர்நாடகாவிற்குச் சாதகமா ஏதாவது முடிவு வந்தால் தமிழகத்தில் உள்ள வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்று சரியான தீர்ப்பைக் கூற யாரும் முன்வருவது இல்லை. உதாரணமாகத் தமிழக காங்கிரஸ், பா.ஜ.க. மேக்கேதாட்டுவில் அணையைக் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும். கர்நாடக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அணையைக் கட்ட ஆதரவு தெரிவிக்கும். அதைவிட முக்கியமாக, இந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டால் பல கட்சியால் அரசியல் செய்ய முடியாது. அணையைக் கட்டுவோம் என்று ஒரு தரப்பு கூறும், கட்ட விடமாட்டோம் என்று இன்னொரு தரப்பு கூறும். இப்படியே சொல்லிச் சொல்லி மக்களிடம் வாக்குகளை வாங்கவேண்டும். இது இன்று நேற்று இல்லை காலம் காலமாகப் பல ஆண்டுகளாக நடக்கும் தொடர்கதையாக உள்ளது.காவிரி நீர்
எத்தனை ஆண்டுக்கால போராட்டம்? நைல் நதி நீர், டனூப் நதி நீர் பங்கீடு விவகாரத்தில் ஒரு நாடும் அதன் அண்டை நாடுகள் பேசி ஒரு சுமுகமான முடிவை எளிதில் எட்டிவிட முடிகிறது. ஆனால், ஒரே நாட்டில் உள்ள நான்கு மாநிலம் பேசி ஒரு முடிவுக்கு வர இத்தனை ஆண்டுக்காலமா? இத்தனை போராட்டமா? இத்தனை உயிரிழப்புகளா? இந்த காவேரி அரசியலில் சிக்கித் தவிப்பது விவசாயிகள் என்பதே உண்மை. இதனைக் கால போராட்டத்திற்கு என்றோ ஒரு முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும். இன்னும் இந்த பிரச்னை நீண்ட நெடும் தொடராகச் செல்லுமா? அல்லது ஒரு முடிவுக்குப் பிறக்குமா என்பது நம்மை ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்…
http://dlvr.it/S3gnxf
http://dlvr.it/S3gnxf