உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2022- ல் நடைபெறவிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களே குற்றம்சாட்டியிருக்கிறார்கள். உரிய சிகிச்சை கிடைக்காததால், பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் மரணமடைந்ததாக அவர்களின் உறவினர்கள் கொந்தளித்திருக்கிறார்கள். கங்கையில் மிதந்த சடலங்கள்
பிணத்தை எரிப்பதற்கு விறகு வாங்கப் பணம் இல்லாமல், கங்கைக் கரையில் பிணங்களைப் புதைத்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் கதறினார்கள். கொரோனா பெருந்தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்த சம்பவங்கள், சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தன. அந்தச் சூழலில், முதல்வர் மாற்றம் நடக்கப்போகிறது என்கிற செய்திகள்கூட அடிப்பட்டன. அந்த அளவுக்கு நிலைமை அங்கு மோசமாக இருந்தது.
உ.பி-யில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்கிற சூழலில், மாநில அரசு தன் சாதனைகள் எனப் பட்டியலிட்டு பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிட்டுவருகிறது. கடந்த வாரம் வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘'முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது’' என்று புகழாரம் சூட்டினார்.பிரியங்கா காந்தி
உ.பி அரசைப் புகழ்ந்து மோடி பேசியதற்கு, எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “கொரோனா இரண்டாவது அலையின்போது யோகி ஆதித்யநாத் அரசு இழைத்த கொடுமைகள், அலட்சியம், தவறான நிர்வாகம் ஆகியவை தொடர்பான உண்மைகளை மோடியின் நற்சான்றிதழால் மறைத்துவிட முடியாது. எண்ணற்ற துயரங்களை மக்கள் அனுபவித்துள்ளனர். இந்த உண்மையை மோடியும், யோகி ஆதித்யநாத்தும் மறக்கலாம். ஆனால், வேதனையை அனுபவித்த மக்கள் மறக்க மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்..
இந்த அரசியல் போக்குகளுக்கு மத்தியில் வாக்காளர்களைக் கவருவதற்கான வேலைகளில் யோகி ஆதித்யநாத் அரசு இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசம் முழுவதும் சிலைகளைத் திறப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. உ.பி அரசியலில் சிலைகள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். 2007 - 2012 காலக்கட்டத்தில் உ.பி-யில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது, மிகப்பெரிய சர்ச்சையை சிலை விவகாரம் ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் சிலைகளையும் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் மாநிலத்தின் பல இடங்களில் நிறுவியது மாயாவதி அரசு. அதைவிடக் கொடுமை, தனது சிலைகளையும் பல இடங்களில் மாயாவதி நிறுவினார்.மாயாவதி
அந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை போனது. தனது சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை அமைத்ததற்கான செலவுத்தொகையை அரசுக்கு மாயாவதி வழங்குவார் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதற்கு, இந்த சிலைகள் சுற்றுலாவை வளர்ப்பதற்கு பயன்படுவதாகவும், இதன் மூலம் அரசுக்கு தொடர்ந்து வருவாய் வந்துகொண்டிருப்பதாகவும் சொல்லி சமாளித்தார் மாயாவதி.
மாயாவதி அரசுக்கு சிலை அரசியல் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. இன்றைக்கு அதே சிலை அரசியலை கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறார் இன்றைய முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்தியாவிலேயே மிகப்பெரிய சிலை என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் படேல் சிலை. அந்த சிலையைவிட மிகவும் உயரமான ராமர் சிலையை உ.பி-யில் நிறுவுவதற்கு யோகி ஆதித்யநாத் அரசு முயன்று வருகிறது. ராமர் சிலை
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையின் உயரம் 93 மீட்டர். மும்பையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையின் உயரம் 137.2 மீட்டர். குஜராத்தில் அமைந்துள்ள படேல் சிலையின் உயரம் 183 மீட்டர். இந்த எல்லா சிலைகளையும்விட மிகவும் உயரமான ராமர் சிலையை யோகி அரசு நிறுவவிருக்கிறது. அந்த ராமர் சிலையின் உயரம் 251 மீட்டராக இருக்குமாம். உலகின் மிகப்பெரிய இந்த வெண்கலச் சிலை, சரயு நதிக்கரையில் அமைக்கப்படும் என்று யோகி அரசு தெரிவித்துள்ளது.
Also Read: பெகாசஸ் விவகாரம்: அதிரவைக்கும் உண்மைகளும் ஆட்டம் காணும் பா.ஜ.க அரசும்!
தேர்தல் நெருங்குவதையொட்டி, மாநிலம் முழுவதும் சிலைகளை அமைக்க வேண்டும் என்பதில் அதீத ஆர்வமுடன் இருக்கிறது யோகி அரசு. சாமியார்களின் சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் நிறுவப்படும் என்று யோகி அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சிலைகள் அமைப்பதற்கு நீதிமன்றத் தடை இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள நகரங்களில் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மத ரீதியான கட்டமைப்புகளை அகற்றுமாறு 2006-ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது ஒரு கும்பல் மாவட்ட நீதிமன்றம் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. உச்ச நீதிமன்றம்
சாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் மதத் தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கு 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. ஆகவே, அந்தத் தடையை விலக்கி உ.பி-யில் சிலைகள் அமைப்பதற்கு அனுமதி தருமாறு உச்ச நீதிமன்றத்தை யோகி ஆதித்யநாத் அரசு நாடியிருக்கிறது. ‘சிலை வைப்பதால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. மாறாக, சிலைகள் அமைப்பதன் மூலமாக கலாசாரம் பாதுகாக்கப்படும், சுற்றுலா வளரும் என்று யோகி அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக, உ.பி-யில் யோகி அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகு, கொரோனாவைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, பெருந்தொற்றுக்கு ஆளான மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கவில்லை என்று பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிலைகளைத் திறந்தால் அதிருப்தியெல்லாம் நீங்கிவிடுமா, சிலைகளுக்காக மக்கள் வாக்களித்துவிடுவார்களா? என்ற கேள்வி இப்போது அரசியல் வட்டாரங்களில் உலவுகிறது.
http://dlvr.it/S4GKFt