கேரள மாநிலம் சீரோ மலபார் சபையின் பாலா(Pala) மறைமாவட்டம் சார்பில் 2021-ம் ஆண்டு குடும்ப வருடமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்துக்குப் பிறகு பாலா மறைமாவட்ட பிஷப் ஜோசப் கல்லறங்காட் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.
அதில், ``2000-ம் ஆண்டுக்குப் பிறகு திருமணம் ஆன பாலா மறைமாவட்ட உறுப்பினராக உள்ள தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகளோ அதற்கு மேலோ இருந்தால் அவர்களுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும். நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள தம்பதிகளில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் மறை மாவட்ட மருத்துவமனையில் வேலை வழங்கப்படும். பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லறங்காட்
ஒரு குடும்பத்தில் நான்காவது மற்றும் அதற்கு மேல் பிறக்கும் குழந்தைகளுக்கு பாலாவில் உள்ள செயின்ட் ஜோசப் இன்ஜினீயரிங் ஆர்ட் டெக்னாலஜி கல்லூரியில் படிக்க ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். ஃபுட் டெக்னாலஜி கல்லூரியிலும் டியூஷன் ஃபீஸ் இலவசம். ஒரு குடும்பத்தில் பிறக்கும் நான்காவது குழந்தைக்கும் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கும் பிரசவம் சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளும் பாலாவில் உள்ள மார் ஸ்லீவா மெடி சிட்டியில் இலவசமாக வழங்கப்படும்.
Also Read: பாரதமாதா குறித்து சர்ச்சைப் பேச்சு; 7 பிரிவுகளில் வழக்கு! - பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது
மூன்று குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பத்தில் நான்காவது குழந்தைக்கு பாலாவில் உள்ள மறைமாவட்ட மருத்துவமனையில் இலவச நர்சிங் படிப்பு வழங்கப்படும். 2000 முதல் 2021-ம் ஆண்டு வரை பிறந்த நான்காவது மற்றும் அதற்கு அடுத்து பிறந்தவர்களுக்கு மறைமாவட்ட கல்வி நிறுவனங்களில் பணியில் சேர சிறப்பு சலுகை அளிக்கப்படும்" என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் குடும்பங்களின் கவலைகளைப் போக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகப் பாலா மறைமாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் 2021-ம் ஆண்டை `குடும்ப ஆண்டு' என அறிவித்துள்ள போப்பின் தீர்மானப்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கிறிஸ்துவ மத விசுவாசிகள் மத்தியிலே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ``பெண்களைக் குழந்தைபெறும் இயந்திரமாகக் கருதுவது தவறான கண்ணோட்டம். இதை சபை உறுப்பினர்கள் நிராகரிப்பார்கள்'' எனக் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் தெரிவித்துள்ளார்.சீரோ மலபார் சபை
Also Read: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விவகாரம்: அரசும் கட்சிகளும் அணுகியது எப்படி? ஓர் அலசல் ரிப்போர்ட்!
மேலும் கேரளத்தில் முஸ்லிம்களைவிட கிறிஸ்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இது என விமர்சனங்களும் எழுந்துள்ளன. அதே சமயம் இதற்கு ஆதரவாகவும் சில கிறிஸ்துவ தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாலா மறைமாவட்ட பிஷப் ஜோசப் கல்லறங்காட், ``கிறிஸ்துவ தத்துவங்களுக்கு உட்பட்டுதான் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவ தத்துவத்தின் அடிப்படையில் இந்தக் காரியங்கள் கூறப்பட்டுள்ளன. இது நூறு சதவிகிதம் நான் எடுத்த தீர்மானமாகும். இது எனது முடிவு, இதிலிருந்து அணுவளவும் நான் பின்வாங்கப்போவதில்லை" எனக் கூறியுள்ளார்.
http://dlvr.it/S4ZyWs
http://dlvr.it/S4ZyWs