உத்தரப்பிரதேசத்தின் டியோரியா மாவட்டத்தில் உள்ள சாவ்ரேஜி கார்க் கிராமத்தைச் சேர்ந்த பதின்வயதுச் சிறுமி நேஹா பாஸ்வான், காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். ஆனால், ஒன்பதாம் வகுப்பு மாணவியான அவர், தனது குடும்பத்தாராலேயே அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேஹா கொலை செய்யப்பட்டதற்குக் காரணம், அவர் ஜீன்ஸ் அணிந்தது.
நேஹாவின் வீட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலத்தில் நேஹாவின் சடலம் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜீன்ஸ் (மாதிரி படம்)
Also Read: `ஆண்கள் அரை டவுசர், பெண்கள் ஜீன்ஸ் - டிஷர்ட் அணியக்கூடாது!' - உ.பி பஞ்சாயத்தில் அறிவிப்பு
என்ன நடந்தது?
சாவ்ரேஜி கார்க் கிராமத்தைச் சேர்ந்த அமர்நாத் பாஸ்வான் - சகுந்தலா தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். நேஹா, இவர்களின் மூன்றாவது குழந்தை. பாஸ்வான், லூதியானாவில் தினக்கூலி வேலை செய்து வருகிறார்.
துடிப்பான பெண்ணான நேஹா, தன் படிப்பும், தன் ஆடைகளும் தன் விருப்பம் எனக் கூறுவது வழக்கம் என்று அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். திங்கள் அன்று நாள் முழுக்க விரதம் இருந்த நேஹா, மாலை பூஜைக்குக் குளித்துவிட்டு ஜீன்ஸ் - டாப் அணிந்து வந்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்துள்ளார். அதற்கு அவரின் தாத்தா, சித்தப்பா உள்ளிட்டவர்கள் அவர் அணிந்திருந்த ஆடை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
அதனால் கோபம் அடைந்த நேஹா, ``ஜீன்ஸ் அணிவதற்காகத்தான் தயாரிக்கப்படுகிறது, நான் அணிவேன்" என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நேஹாவின் சித்தப்பாவும் உறவினர்களும், நேஹாவை கடுமையாகத் தலையில் தாக்கியுள்ளனர்.
இதனால் சுயநினைவின்றி மயங்கி விழுந்த நேஹாவை, ஆட்டோவில் மருத்துவமனை அழைத்துச் செல்லக் கிளம்பியுள்ளனர் அவர் உறவினர்கள். நேஹாவின் அம்மா சகுந்தலாவும் உடன் செல்லக் கிளம்பியபோது, அவர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே சகுந்தலா, தன் உறவினர்களை மாவட்ட மருத்துவமனையில் தன் பெண்ணின் நிலை பற்றி அறிய அனுப்பிவைத்தபோது, நேஹாவை அங்கு காணவில்லை.
மறுநாள், அந்த கிராமத்தின் வழியே ஓடும் கங்தக் ஆற்றின் பாலத்தில் ஒரு சிறுமியின் சடலம் தொங்குவதாகத் தகவல் வர, அது நேஹா என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கூலி வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நேஹாவின் அப்பா பாஸ்வானுக்கு தகவல் சொல்லப்பட, கிராமத்துக்குத் திரும்பிய அவர், ``என் கஷ்டங்களுக்கு எல்லாம் இடையில் என் பிள்ளைகளைப் படிக்கவைத்தேன், நேஹாவுக்கு இப்படி ஆகிவிட்டதே..." என்று அழுதது பலரையும் மனம் கலங்கச் செய்தது. Girl - Representational Image
Also Read: `பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது என்ன மாதிரியான செயல்?' - உத்தரகாண்ட் முதல்வர் சர்ச்சை கருத்து
நேஹாவின் தம்பி விவேக், ``துணிகள் துவைத்து காயவைக்கும் வேலைகளைச் செய்யச் சொல்லி, தாத்தாவும், சித்தப்பாவும் நேஹா அக்காவை அடிப்பார்கள். அப்படி அடிக்கும்போது, அவள் அணியும் ஆடைகள் பற்றி தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள். அவளை ஜீன்ஸ் அணியக்கூடாது என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்பார்கள். அன்றும், அதேபோல்தான் திட்ட ஆரம்பித்தார்கள்" என்று கூறியுள்ளார்.
``என் மகள் நேஹா போலீஸ் அதிகாரியாகக் கனவு கண்டாள். அவளுக்கு இப்படி ஆகிவிட்டதே'' என்று செய்தியாளர்களிடம் கலங்கினார் சகுந்தலா.
வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர், கொலை மற்றும் தடயங்களை அழித்தல் பிரிவின் கீழ் நேஹாவின் தாத்தா, சித்தப்பா, சித்திகள், உறவினர்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் நேஹா உயிர் இழந்துள்ளார் என்று சர்க்கிள் ஆபீஸர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வீட்டுக்குள்தான் அதிகம் நடக்கின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம்?
- ஹரிணி ஆனந்தராஜன்
http://dlvr.it/S4XQfD
http://dlvr.it/S4XQfD