வங்கிகளில் பொதுவாக பணி நேரம் முடிந்த பிறகு வங்கி மேலாளர் உட்பட சில அதிகாரிகள் வங்கிக்குள் இருந்து மீதி வேலையை முடிப்பது வழக்கம். அதுபோன்ற நேரத்தில் வங்கியின் கதவு பாதி அடைக்கப்பட்டு இருக்கும். அப்படி பாதி அடைக்கப்பட்ட வங்கிக்குள் புகுந்து மும்பையில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. மும்பை அருகில் உள்ள விராரில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளை இருக்கிறது. இந்த கிளையில் பணி முடிந்த பிறகும் மேலாளர் யோகிதா வர்தக் மற்றும் கேஸியர் ஸ்வேதா ஆகியோர் வங்கியின் கதவை பாதி மூடிவிட்டு உள்ளே இருந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இரவு 7.30 மணிக்கு இரண்டு கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தனர். கைது செய்யப்பட்ட அனில்
Also Read: பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி!
அவர்களுக்கு ஏற்கனவே வங்கியில் பணியாற்றுபவர்கள் குறித்து தெரிந்திருந்தது. நேராக இருவரும் லாக்கர் இருக்கும் அறைக்குச் சென்று அங்கிருந்த மேலாளர் யோகிதா மற்றும் கேஸியர் ஆகியோரைக் கத்தியைக் காட்டி மிரட்டி லாக்கரில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை ஒரு சாக்கில் போட்டு கட்டினர். அவர்கள் இருவரும் பண மூட்டையுடன் தப்பிச்செல்ல முயன்றபோது யோகிதா சத்தம் போட்டு கத்தப்பார்த்தார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் தன்னிடம் இருந்த ரேஷர் பிளேடை எடுத்து யோகிதாவின் கழுத்தை அறுத்துவிட்டான். இதில் யோகிதா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவருடன் இருந்த கேஸியர் ஸ்வேதா வங்கியில் இருந்த எச்சரிக்கை அலாரத்தின் மூலம் எச்சரிக்கை செய்த போது அவரையும் கொள்ளையர்கள் ரேஷர் பிளேடால் வெட்டினர். இதில் ஸ்வேதா உதவி கேட்டு கத்தினார். வங்கி கீழ் தளத்தில் இருந்ததாலும், லேசாக திறந்திருந்ததாலும் ரோட்டில் செல்பவர்கள் ஓடி வந்து ஒரு கொள்ளையனைப் பிடித்தனர். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். தப்பி ஓடியவன் கொள்ளையடித்த பொருட்களை அப்படியே போட்டுவிட்டுத் தப்பி சென்றுவிட்டான். arrest
பிடிபட்டவன் பெயர் அனில் துபே என்று தெரிய வந்தது. போலீஸார் உடனே விரைந்து வந்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் யோகிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஸ்வேதா மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனில் துபே இதற்கு முன்பு இதே வங்கியில் மேலாளராக பணியாற்றி இருந்தான். தற்போது அருகில் உள்ள நைகாவில் இருக்கும் வேறு ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. வங்கியின் மாத இறுதி நாட்களில் மேலாளர் மற்றும் கேஸியர் இரவு வரை இருந்து வங்கி கணக்குகளை பார்ப்பது வழக்கம் என்று அனில் துபே அறிந்திருந்தார். அதோடு அந்த நேரத்தில் பெரிய அளவில் பாதுகாப்பு இருக்காது என்பதாலும், மேலாளர் பெண் என்பதாலும் இரண்டு கொள்ளையர்களும் துணிந்து இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தபோது செக்யூரிட்டி கேட்டில் பணியில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. செக்யூரிட்டிக்கு இதில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். அதோடு வங்கியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு பதிவுகளை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருக்கும் மற்றொரு கொள்ளையனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளையில் வேறு ஊழியர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இரவில் வங்கிக்குள் புகுந்து வங்கி மேலாளரை கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்க நடந்த முயற்சி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/S4jB7f
http://dlvr.it/S4jB7f