கேரள மாநிலத்தின் பாரம்பர்ய விழாவான ஓணம் பண்டிகை இம்மாதம் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணப் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு ரேஷன் கடைகளில் துணிப்பையில் 16 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பை கடந்த 31-ம் தேதி முதல் வழங்கி வருகிறது. ஒருகிலோ சீனி தொடங்கி தேயிலை, உப்பு, நெய் உள்ளிட்டவை அந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டைப் போன்று கேரள மாநிலத்திலும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து குடும்ப அட்டை விபரங்கள் சரிபார்த்த பிறகே ஓணப்பண்டிகை தொகுப்பு வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதிக்குள் இந்த தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஏழைகள் பயன்படும் வகையில் இந்த தொகுப்பு வழங்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.கேரள உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில்
இந்த நிலையில் சினிமா நடிகரும், இயக்குநருமான மணியன்பிள்ளை ராஜூவின் வீட்டுக்கு கடந்த 3-ம் தேதி காலையில் கேரள உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் சென்றுள்ளார். அங்கு நடிகர் மணியன்பிள்ளை ராஜூவிடம் ஓணப்பண்டிகைக்கு அரசு வழங்கும் தொகுப்பை வழங்கியுள்ளார். அமைச்சர் ஜி.ஆர்.அனிலுடன் அரசு அதிகாரிகளும் சென்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் தொகுப்பை தனிப்பட்ட முறையில் நடிகரின் வீட்டுக்கு நேரில் சென்று கொடுத்த உணவுத்துறை அமைச்சரின் செயல் விவாதத்திற்கு உள்ளானது. நான்பிரியாரிட்டி (NPHH) வகை ரேஷன் கார்டு நடிகர் மணியன்பிள்ளை ராஜூவின் மனைவி பெயரில் இருப்பதாகவும், அவர்களுக்கு ரேஷன் கடையில் இப்போது இந்த தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் நான்பிரியாரிட்டி வகை வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 13-ம் தேதி முதல் ஓணப்பண்டிகை தொகுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதிகாரிகள் சகிதம் நடிகர் வீட்டுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கிய அமைச்சர் ஜி.ஆர்.அனில்
இதுகுறித்து உணவுத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறும்போது, ``நடிகர் மணியன்பிள்ளை ராஜூ கடந்த லாக்டெளன் காலத்தில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று அரிசி வாங்கிய நிகழ்வு செய்தியானது. அதுபற்றி கருத்து தெரிவித்த மணியன்பிள்ளை ராஜூ ரேஷன் பொருட்கள் தரமற்றதாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியானது. ரேஷன் கடை அரிசியை வீட்டில் கொண்டுவந்து சமைத்தபோது தரமானதாக இருந்தது எனக்கூறியிருந்தார். இதையடுத்து அன்றைய உணவுத்துறை அமைச்சர் பி.திலோத்தமன் நடிகர் ராஜூவின் வீட்டுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்திருந்தார். அந்த வகையில்தான் அமைச்சர் ஜி.ஆர்.அனிலும் நடிகர் மணியன்பிள்ளை ராஜூவை சந்தித்தார்" என தெரிவித்துள்ளனர்.
அனைவரின் வீட்டுக்கும் ரேஷன் பொருட்களை கொண்டு கொடுப்பார்களா என கேரளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
Also Read: கேரளா: குறையாத கொரோனா... 16 நாள்களில் 50-ஐ கடந்த ஜிகா வைரஸ் பாதிப்பு!
http://dlvr.it/S50flF
http://dlvr.it/S50flF