ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தாலும், அதன் சொந்த ஃபோனுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இந்த நிலையை மாற்றும் உத்தேசத்தோடு, கூகுள் தனது பிக்சல் (PIXEL) ஃபோன் வரிசையில் அடுத்த அறிமுகம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. 'பிக்சல் 6' மற்றும் 'பிக்சல் 6 ப்ரோ' ஆகிய இந்த இரண்டு புதிய ஃபோன்களும், சந்தையில் அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றாலும், இவற்றின் முதல் கட்ட அறிமுகங்கள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்றாலும், 'பிக்சல் 6' போன்கள் தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் ஈர்ப்புடையதாகவே இருக்கின்றன. முதல் விஷயம், வடிவமைப்பிலும் தோற்றத்திலும் புதிய பிக்சல் ஃபோன் அசத்தலாக இருப்பதாக 'தி வெர்ஜ்' இணையதளம் தனது பிரத்யேக செய்தியில் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கமான கேமரா அமைப்புக்கு மாறாக, நீளப் பட்டையில் இதன் மூன்று கேமராக்கள் அமைந்திருப்பதும் விஷேசமாக சொல்லப்படுகிறது. பக்கவாட்டில் லேசாக வளைந்த திரை, கைரேகை சென்சார், டைட்டன் பாதுகாப்பு சிப் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருந்தாலும், பிற நிறுவன சிப் இல்லாமல் சொந்த 'சிப்'புடன் இந்த ஃபோன் உருவாகி இருப்பதே முக்கிய அம்சமாக சொல்லப்படுகிறது. கூகுள் சொந்த சிப் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பது பற்றி செய்திகள் கசிந்து கொண்டிருந்தாலும், பிக்சல் ஃபோனில் இந்த முறை டென்சர் எஸ்.ஒ.சி (Tensor SoC) எனும் புதிய சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காமின் ஸ்னேப்டிராகன் சிப்பை கூகுள் பயன்படுத்தவில்லை. மாறாக, சொந்த சிப்புடன் களமிறங்குகிறது. ஸ்மார்ட்போன் உலகில் இது முக்கிய நகர்வு என்கின்றனர். இதனால் குவால்காமுக்கு பெரிய இழப்பு உண்டாகும் என்று சொல்ல முடியாவிட்டாலும், கூகுளுக்கு இது மிகப்பெரிய கணக்குகளை உள்ளடக்கிய விஷயமாகவே இருக்கிறது. ஏனெனில், ஸ்மார்ட்போனில் ஆப்பிளை எட்டிப்பிடிக்கும் கூகுள் முயற்சியின் ஓர் அங்கமாக இது அமைகிறது. ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஏகப்பட்ட பிராண்டுகள் இருந்தாலும், உயர் ரக ஃபோன் பிரிவில் ஆப்பிளின் ஐஃபோன் தான் கொடிகட்டிப் பறக்கிறது. சாம்சங் போன்ற நிறுவனங்களும் உயர் ரக ஃபோனோடு ஆப்பிளுடன் மல்லுக்கட்டினாலும், ஐஃபோன் அந்தஸ்திலும் சரி, செயல்திறனிலும் சரி பல படிகள் மேல்தான் இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல், பாதுகாப்பு அம்சத்திலும், பிரைவசி விஷயத்திலும் ஆப்பிள் ஒரு படி மேலே இருக்கிறது. புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதிலும் அசத்தி விடுகிறது. இதனிடையே ஐஃபோன் 13-ல் ஆப்பிள் என்ன எல்லாம் கொண்டு வருமோ எனும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்தப் பின்னணில், ஸ்மார்ட்ஃபோன் வன்பொருள் என்று வரும்போது கூகுளின் பிக்சல் ஃபோன்கள் இடைப்பட்ட ரகமாகவே பார்க்கப்படுகிறது. அசத்தலான கேமரா தரம், ஏ.ஐ அம்சங்கள் என பிக்சல் போனில் கூகுள் என்ன எல்லாம் செய்து பார்த்தாலும், ஐஃபோன் கோட்டையை அதனால் அசைக்க முடியவில்லை. ஐஃபோனுடனான இடைவெளியை இயன்ற அளவு குறைக்கும் வகையில், அடுத்த பிக்சல் ஃபோனை கூகுள் தயார் செய்துள்ளதாக கொள்ளலாம். இந்த நோக்கில்தான் கூகுள் பிற நிறுவன சிப்பை நாடாமல் சொந்த சிப்பை பயன்படுத்தியுள்ளது. நவீன ஃபோன்கள் என்று வரும் போது, அவற்றின் சிப் தான் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. ஃபோனின் வேகம், செயல்திறன், பேட்டரி ஆயுள் உள்ளிட்ட அம்சங்களை சிப்பே தீர்மானிக்கிறது. ஸ்மார்ட்போனின் மூளை என்று வர்ணிக்கப்படும் சிப் விஷயத்தில் ஆப்பிள் பிற நிறுவனங்களை சார்ந்திராமல், தானே சொந்த சிப்பை உருவாக்கியிருக்கிறது. வன்பொருள், மென்பொருள், சிப் என எல்லாமே சொந்த தயாரிப்பாக இருப்பது ஆப்பிள் ஐபோனை முழுமையான போனாக அளிப்பதில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த காரணங்களினால்தான் கூகுளும் சொந்த சிப்புடன் பிக்சல் போனை களமிறக்குகிறது. டென்சர் எஸ்.ஒ.எஸ் எனப்படும் இந்த சிப் வழக்கமான ஒற்றை சிப்பாக அமையாமல், சிப் மேல் கொண்ட அமைப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்களை கூகுள் ரகசியமாக வைத்திருப்பதால் ஃபோன் அறிமுகம் ஆகும் போதுதான், இதன் உண்மையான ஆற்றல் தெரிய வரும் என்கின்றனர். ஆனால், இப்போதைக்கு டென்சர் சிப் அசத்தலாக இருப்பதாக கருதப்படுகிறது. டைடன் எம்2 பாதுகாப்பு சிப்பும் இணைந்திருப்பதால் இந்த ஃபோன் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதைவிட முக்கியமாக ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு ஆற்றலுடன் இந்த ஃபோன் புகைப்படங்களை கையாளுதல் போன்றவற்றில் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிப்களின் ஆற்றலை தீர்மானிக்கும் மூர் விதியின் தாக்கம், அதற்கான வரம்பை தொட்டிருப்பதாக கருதப்படும் நிலையில், ஃபோன்களும், கம்ப்யூட்டர்களும் வேறு விதமாக உருவாக்கப்பட வேண்டியிருக்கும் என்கிறது. அந்த நம்பிக்கையில்தான் அது சொந்த சிப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம் பிக்சல் ஃபோனில் புதிய பாதை காணலாம் என்றும் கூகுள் எதிர்பார்க்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். - சைபர்சிம்மன்
http://dlvr.it/S57Jhd
http://dlvr.it/S57Jhd